Loading...

Articles.

Enjoy your read!

படிக்கப் படாத கவிதைகள்....!

சலிப்புக் காட்டில் தன்னந்தனியே திக்கற்ற ஒரு
கற்பனையின் கருவில் சிக்கிமுக்கிச் சற்றுமுன்னே பிறந்த பூச்சி நான்!

 
   - சலிப்பு எனும் காட்டில், கற்பனை எனும் கருவில் பிறந்த பூச்சி நான்.


இரத்தக் கசிவில் வலி ருசிக்கும் மனிதப் பிறப்பல்ல எனது;
பேனா மைக் கசிவில் மொழி ருசிக்கும் புதிய பிறப்பு எனது!

   - என் பிறப்பின் போது, இரத்தக் கசிவு நிகழாது, ஆனால் சிறிது பேனா மைக்கசிவு நிகழும்.


பூச்சியல்ல நான் இக்கவிதைக்கு ஒரு உவமை நான்.

  - உண்மையில் நான் ஒரு பூச்சியல்ல , இந்தக் கவிதைக்கு உவமை நான், இந்தக் கவிதை தான் நான்.


எழுத்து அணுக்களை உணர்வு உயிருடன் பிணைத்துத் தோன்றிய பிறவி நான்!

  - எழுத்துக்கள் தான் என் உடல் அணுக்கள் ஆகும். உணர்வுகள் தான் என் உயிர் ஆகும்.


எனினும் உன் உதட்டை இக்கணம் ஆளும் அசைவுகள்;
என் இறுதி நொடியை நிர்ணயிக்கும் ஜாதகச் சுவடிகள்;

  - என்னைப் படிக்கும் உன் உதட்டின் அசைவுகள் குறைந்தால் கவிதை முடிந்து விட்டது. பூச்சி இறந்ததாக அர்த்தம்.


இத்தருணம் உன் உள்ளத்தில் பூக்கும் எண்ணத்தின் மணத்தை
நுகர்ந்துப் பார்த்தே என் இருத்தலை உறுதி செய்கிறேன்!

  - ஒரு கவிதையைப் படிப்பதால் வாசகனின் மனதில் ஏற்படும் எண்ணங்கள் தான், அந்தக் கவிதை என்று ஒன்று உள்ளதற்கு ஒரே ஆதாரம்.


என் காகித மனத்தில் அடுத்து விழப் போகும்
நீள மைத் துளிகள் மை அல்ல கேள்விகள்!

  -  என் மனமான காகிதத்தில் அடுத்து விழப் போவது, மை அல்ல கேள்விகள். 


நீ எந்தப் பூக்களின் மணத்தை நுகர்ந்து உன் இருத்தலை உறுதி செய்கிறாய்?

  - பூச்சி ( கவிதை) வாசகனிடம் கேட்கிறது : இப்பொழுது உன் உள்ளத்தின் எண்ணங்கள் தான் நான் உயிரோடு இருப்பதற்கு ஆதாரம் என்பதைப் போல் , நீ ' இருக்கிறாய்' என்பதற்கு ஆதாரம், யாருடைய எண்ணங்கள் 


நானொரு பூச்சி என்பது போல் நீயொரு மனிதன் என்பதும்
உலகின் இலக்கிய மாயை தின்றுள்ள மர்ம இரைகளில் ஒன்றோ!

 -  நான் ஒரு பூச்சி என்பதைப் போல், நீ ஒரு மனிதன் என்பதும் பெரும் பொய்யோ ? 


நானொரு துளிக் கவிதை என்றால் நீ இராட்சதக் கடலோ

 - என்னைப் போல் நீயும் ஒரு கவிதை தானோ ? 


என்னை நீ பருகுவதைப் போல் உன்னையும் ஒருவன் வாசிக்கிறான்.

 - என்னை நீ வாசிப்பதைப் போல் , உன்னையும் ஒருவன் வாசிக்கிறான்


அவன் உதட்டின் அசைவுகளைக் கூர்ந்து புரிந்து கொள்.

அவன் எண்ணத்தின் மணத்தைக் காலம் அரிக்கும் மூக்கால் நுகர முடியாது

அவன் உதட்டின் அசைவும் எண்ணத்தின் மணமும் தான் மகிழ்ச்சி என்பனவோ?

 - என்னை வாசிப்பதால் ஏற்படும் உன் மன எண்ணங்களும், உதட்டின் அசைவுகளும் தான் நான் இருப்பதற்கான ஒரே ஆதாரம் என்பதைப் போல் , உன்னை வாசிப்பவனின் மன எண்ணங்களும் உதட்டின் அசைவுகளும் தான் நீ ' இருக்கிறாய்' என்பதற்கான ஆதாரம். அந்த ஆதாரமான அவனின் மன எண்ணங்களும் உதட்டின் அசைவுகளும் தான் மகிழ்ச்சி ஆகும்.


இருளில் தொலைய முடியாமல் தவிக்கும் ஒளியாய் நான்
என்னை வாசித்துக் கொண்டே இரு என்று கூறினாலும்
என்னுடல் இக்காகித வெண்மையில் புதைக்கப் படும் நேரமிது

 - என்னை வாசித்துக் கொண்டே இரு என்று கூறினாலும் இன்னும் ஓரிரு வரிகளில் நான் இறந்து விடுவேன். ( கவிதை முடியப் போகிறது) 


இருப்பினும் என் இறுதி பாகங்களை உனக்குத் தருகிறேன்

மகிழ்ச்சியற்ற மனித வாழ்வுகள் அனைத்தும் படிக்கப் படாத கவிதைகள் ஆகும்!

Tagged in : MySpace, Happiness, Perspectives, life, nature, poem,

   

Similar Articles.