சாமந்தி -
விடுதியின் பெயர்
நான்கு வருட முடிவை
நினைவூட்டிக்கொண்டே இருக்கும் மலரது
வாடிய மலரா
வசந்த மலரா தெரியவில்லை
கடைசி மலர் அவ்வளவுதான்
காத்திருப்புகளையெல்லாம்
தாண்டி அவனுக்கு தனி அறை கிடைத்தது
தான் நினைத்த ஆளுமைகளின்
படங்களையெல்லாம் அறை முழுதும் ஒட்டினான்
முக்கியமாய் முகமது அலியின் முகம் பார்த்தால் ஒரு வெறி வருமென
ஒரு நப்பாசை
அருகே மாமரமும் நவாப்பழம் மரமும்
அவ்வப்பொழுது விருந்தளிக்கின்றன
வரலாற்றை நோண்டிப் பார்த்ததில்
1980களில் பூத்த விடுதி சாமந்தி
என்று தெரிகிறது
அப்பொழுது வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருக்கிறார்கள்
பின்னே இருக்கும்
அண்ணா ஜெம் பள்ளியின்
மழலை சத்தங்கள்
பள்ளி காலத்தின் 'பொறுப்பில்லா'
ஆனந்தத்தை நினைவூட்டுகின்றன...
அது ஒரு நான்காம் வருட மாணவனுக்கு நினைவூட்டுவது முரண்
பொறுப்புகள் கூடிவிட்டன;
வரவன் போறவனெல்லாம்
என்ன பண்ண போற?
என்று கேட்பது வழக்கமாகிவிட்டது
நேரத்திற்கேற்ற விடையைத் தயார் செய்கிறானிவன்
காலம் மட்டுமே விடை சொல்லும்...
அதுவரை ஏதோ ஒரு
ஆர்வமுள்ள முயற்சியை மேற்கொள்ள
சாமந்தி பச்சைக்கொடி காட்டும்.