Loading...

Articles.

Enjoy your read!

கணிதப் பரிட்சை

அன்று நான் கண் விழித்த பொழுது எனக்குத் தெரியவில்லை, அன்றைய நாள் எவ்வளவு அதிர்ச்சிகளை என் மீது வீசி எறிய காத்துக் கொண்டு இருந்தது என்று. அன்று எனது நான்காம் செமஸ்டரின் இரண்டாம் அசஸ்மெண்டின் முதல் பரிட்சை, கணிதம். முதல் அசஸ்மெண்டிள் எடுத்த மதிப்பெண் என்னவென்று தெரியாது. அந்தப் பதற்றம் வேறு இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக படித்தது போறாதோ என்று ஓர் எண்ணம். பரிட்சை பயத்தில் சாப்பாடு தொண்டையில் இறங்க மறுத்தது. ஒரு வழியாக கஷ்டப்பட்டுச் சாப்பிட்டு முடித்தேன். இறைவனிடம் பரிட்சை சுலபமாக இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்தேன். பாட்டியையும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளச் சொன்னேன். அப்பாவுடன் கல்லூரிக்குப் புறப்பட்டேன். செல்லும் வழியில் படித்ததை மீண்டும் ஒரு முறை பார்த்துக் கொண்டேன். பயத்தில் அப்பாவிடம் புலம்ப ஆரம்பித்தேன். அப்பா, "எல்லாம் படித்து முடித்த பிறகு எதற்கு பயம்? பரிட்சை சுலபமாக தான் இருக்கும். கவலை படாதே!"  என்று கூறினார். அதைக் கேட்ட பிறகு மனம் சற்று அமைதி அடைந்தது. அதற்குள் கல்லூரியை அடைந்து விட்டோம்.

 

அப்பா எனக்கு வாழ்த்துக்கள் சொல்லி விட்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டார். நானும் வகுப்பறையை நோக்கிச் சென்றேன். அங்கு என் நண்பர்கள் அனைவரும் காத்துக் கொண்டு இருந்தனர். ஒருத்தி இந்தக் கேள்வி முக்கியம் என்று கூற, ஒருத்தன் இந்தப் பார்மூலா முக்கியம் என்று கூற, இந்தக் கணக்கு கண்டிப்பாக வரும் என்று மற்றொருவர் கூற அதைக் கேட்க கேட்க எனது பதற்றம் ஏறிக் கொண்டே போச்சு. கடைசி முறையாக படித்ததை எல்லாம் ஒரு முறை பார்த்துக் கொண்டேன். நேரம் ஆனது. பரிட்சை அறைக்கு அனைவரும் சென்றோம். அறைக்குள் நுழைந்தவுடன் படித்ததை எல்லாம் மறந்து போனது போன்ற ஓர் உணர்வு.

 

ஆசிரியர் எங்களிடம் எங்களுடைய விடைத்தாள்களை எடுத்துக் கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளச் சொன்னார். அப்பொழுது கண்டேன் முதல் அசஸ்மெண்டிள் நான் எடுத்த மதிப்பெண்களை. நினைத்ததை விட நிறைய மதிப்பெண்களைத் தான் எடுத்து இருந்தேன்.  ஓர் சிறிய ஆனந்தம்.  மனம் சற்று அமைதி அடைந்தது. அப்பொழுது, ஆசிரியர் வினாத்தாள்களை அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தார். கையில் நடுக்கத்துடன் அவர் கொடுத்த வினாத்தாளை வாங்கிக் கொண்டேன். அதைப் பார்த்த உடன் சந்தோஷம் ஆவதா இல்லை வருந்துவதா என்று தெரியவில்லை. கேள்விகளுக்குப் பதில் தெரிந்தது போல் இருந்தது தெரியாதது போலும் இருந்தது. இறைவனிடம் மீண்டும் ஒரு முறை வேண்டிக் கொண்டு பதில் எழுதத் துவங்கினேன். தெரிந்த பதில்களை முதலில் எழுதி முடித்தேன். விட்டு வைத்த கேள்விகளுக்குப் பதில் எழுதத் துவங்கினேன். தோன்றியவற்றை எழுதினேன்.  இப்பொழுது தான் எழுத துவங்கியது போல் இருந்தது அதுக்குள் நேரம் முடிவதைந்தது. தேர்வு அறையை விட்டு வெளியே வந்தேன்.‌ எல்லாரும் பதில்களைக் கூறிக்கொண்டு இருந்தனர்.  அதைக் கேட்ட உடனே நான் எழுதிய விடைகள் சரியாத் தப்பா என்ற குழப்பமும் வந்தது. அதைக் கேட்க வேண்டாம் என்று சற்று விலகி வந்தேன்.

 

அப்பாவிற்கு போன் பன்னினேன். அவரிடம் தேர்வைப் பற்றிக் கூறினேன்.  "நீ தேர்வை எழுதி முடித்துவிட்டாய். இதற்கு மேல் அதைப் பற்றி யோசிக்காதே.‌ வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடு. அதன்பிறகு படிக்க ஆரம்பி"  என்று கூறினார். எப்படி இருந்தாலும் இதற்கு பிறகு உள்ள வகுப்புகளைக் கவனிக்க போவதில்லை. நாளைய பரிட்சையைப் பற்றித் தான் யோசனை இருக்கும் என்பதால் வகுப்புக்குச் செல்லாமல் வீட்டிற்கு புறப்பட்டேன். என் நண்பர்களிடம் கூறி விட்டு பஸ் ஸ்டான்ட்க்குச் சென்றேன். சற்று நேரத்தில் பஸ் வந்தது. பஸ்சில் எனக்குப் பக்கத்தில் ஒரு சீட்டுக் காலியாக இருந்தது. அந்தச் சீட்டில் ஒரு பாட்டி அமர்ந்து கொண்டார். பஸ் பயணம் முழுவதும்போனில் கத்திக் கத்திப் பேசிக்கொண்டு இருந்தார். எனது ஸ்டாப் வந்ததும் வீட்டிற்கு சென்றேன்.

 

அங்கு பாட்டியிடம் சிறிது நேரம் புலம்பிட்டுச் சாப்பிட்டு விட்டு ஒரு சின்னத்  தூக்கத்தைப் போட்டேன். தூங்கி‌ எழுந்து ஸ்னாக்ஸ் சாப்பிட்டு விட்டு படிக்க ஆரம்பித்தேன். படிக்க ஆரம்பித்த சில நேரத்தில் போன் பார்க்க ஆரம்பித்து விட்டேன். எல்லாரிடமும் நோட்ஸ் வாங்கி சந்தேகங்களைக் கேட்டுப் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது வந்தது ஒரு இன்ப அதிர்ச்சி. அன்று மாலை 7 மணி இருக்கும். தொலைக்காட்சியில் வந்த செய்தி எல்லாவற்றையும் மாத்தி விட்டது. 'மார்ச் 31 வரை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை'  என்ற செய்தியைப் பார்த்தவுடன் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அவ்வளவு சந்தோஷம். வாட்ஸப்பில் இந்தச் செய்தி தான் வந்து கொண்டு இருந்தது. அனைவரும் சந்தோஷத்தில் மேசேஜ் அனுப்பிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது முடிவைத்த புத்தகங்கள் இன்று வரைக்கும் திறக்கவில்லை......!

Tagged in : Maths, Books, Quarantine Life, exams, MySpace,

   

Similar Articles.