பருவ மழை மண்ணை நனைத்துக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் நீர் அடித்துக் கொண்டு சென்றது. மக்கள் ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கி நின்றுகொண்டிருந்தனர்.
ஆனால், அவளால் மழைக்கு பயந்து, ஒதுங்கி நிற்க இயலாது. இன்று அவள் வாழ்வில் முக்கியமான ஒரு நாள், அவளது நேர்காணல் நிகழும் நாள், அந்த நிறுவனத்தில் வேலை கிடைத்துவிடும் என்று ஏறக்குறைய முடிவாகி விட்டது. இன்று இறுதிச்சுற்று.
பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருக்கிறாள், 8 மணி பேருந்திற்காக, அதை தவற விட்டால் அடுத்த பேருந்து கால்மணி நேரத்திற்கு பிறகு தான். சாலையின் முடிவில் ஒரு பேருந்து தென்பட்டது, அவள் பெருமூச்சு விட்டாள், விரைவில் நிறுவனத்தை அடைந்து விடலாம் என்று. ஆனால் கூட்ட மிகுதியினால் அந்த பேருந்து நிற்காமலே சென்றது. பேருந்திற்காகக் காத்திருந்த மக்கள் ஏமாற்றமும் கோபமும் அடைந்தனர். இவளது மனம் பயத்தில் தவித்தது. தாமதமாக சென்றால் வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம். அடுத்த பேருந்து விரைவாக வரவேண்டும் என்று இறைவனை வேண்டினாள்.
அப்போது ஒரு பள்ளி பேருந்து வந்து நின்றது. சாலையின் மறுபக்கத்தில் அப்பள்ளி சீருடை அணிந்த இருச்சிறுவர்களின் கையை பிடித்துக்கொண்டு ஒரு பெண்மணி நின்றுகொண்டிருந்தார். போக்குவரத்து சைகை விளக்கில் சிவப்பு விழ சில வினாடிகளே இருந்தன. அதற்குள் அச்சிறுவர்களில் ஒருவன் பள்ளி பேருந்து தன்னை விட்டு சென்று விடுமோ என்ற பதட்டத்தில் தன் தாயின் கையிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு பேருந்தை நோக்கி சாலையின் இடையில் ஓடினான். இதனை எதிர்பாராத அவனது தாய் திகைத்து போனாள். அச்சிறுவனை கவனித்த சில வாகன உரிமையாளர்கள் நின்றனர். மழையின் சாரலால் தனது தலை கவசத்தில் படர்ந்திருந்த நீரால் அச்சிறுவனை ஒருவர் கவனிக்காமல் வேகமாக வந்தார்.
இச்சம்பவத்தை அவள் கண்டாள். உடனே அச்சிறுவனை நோக்கி வேகமாக ஓடி அவனை தன் கரங்களினால் தூக்கி கொண்டு சாலையின் ஓரத்திற்கு ஓடினாள். அந்த வாகன உரிமையாளருக்கு அப்போது தான் அங்கு என்ன நடந்தது என்று புரிந்தது, அவரும் அங்கு கூடியிருந்த மக்களும் சேர்ந்து அவளுக்கும் அச்சிறுவனுக்கும் ஏதேனும் அடிப் பட்டிருக்கிறதா என்று பார்த்தனர். அவனது தாய் அவர்களை நோக்கி ஓடி வந்து சிறுவனை கட்டித் தழுவிக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து அடுத்த பேருந்து வந்தது. அவள் அதில் ஏறி நிறுவனத்திற்குச் சென்றாள், தாமதமாக வந்ததால் அவளுக்கு வேலை இல்லை என்று கூறினார்கள். அவள் வருந்தவில்லை, அந்த பேருந்து தன்னைத் தவற வைத்ததற்கு நன்றி என்று ஆயிரம் முறை கடவுளிடம் கூறினாள்.