நிதி சுதந்திரம் என்பது நிதி ரீதியாக அவரவருக்கு தேவையானவற்றை அவர்களே பூர்த்தி செய்துகொள்வது தான். இது அனைவருக்கும் பொதுவானது,ஆனால் ஒரு பெண்ணுக்கு நிதி சுதந்திரம் ஏன் முக்கியம்? காலம்காலமாக பெண்கள் தனது குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகளைச் செய்வதையுமே முக்கியமாகக் கருதினர்.
பெண்ணுக்கு நிதி சுதந்திரம் என்பதே கிடையாது அதிலும் திருமணமான பெண்ணுக்கும் நிதி சுதந்திரம் என்ற வார்த்தைக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது. தன்னுடைய கணவரோ, தந்தையோ, சகோதரனோ, மகனோ கூறும் கட்டளைகளை நிறைவேற்றவே அவள் இச்சமூகத்தில் உலா வருவதாகப் பலரும் கருதுகின்றனர். குறிப்பாகப் பெண்கள் தாங்களாகவே முன்வந்து குடும்பத்திற்காகத் தனது அடையாளத்தைத் தியாகம் செய்கின்றனர். அதுமட்டும் தான் அவர்கள் வாழ்க்கைக்கு முக்கியம் என நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு!
ஒரு பெண் சம்பாதிக்க ஆரம்பித்தால் அவள், அவளது தந்தையையோ, கணவரையோ, சகோதரனையோ, மகனையோ சார்ந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. அவளுக்கு பிடித்தவற்றை அவள் செய்துகொள்ளலாம். ஒரு பெண் சம்பாதிப்பது மட்டும் அவளுடைய நிதி சுதந்திரம் ஆகிவிடாது, சம்பாதித்த பணத்தில் என்ன செய்யவேண்டும் என்று அவள் சுயமாக முடிவெடுக்க வேண்டும். ஒரு பெண்ணின் நிதி சுதந்திரமானது அவள் வாழ்க்கையில் அடுத்து என்ன படிக்கலாம், என்ன தொழில் செய்யலாம் என்பது போன்ற பல முக்கிய முடிவுகளை எடுக்க உதவுகிறது மற்றும் ஒரு குடும்பத்தின் முக்கிய முடிவுகளை ஆண்கள் மட்டுமே நிர்ணயித்து வந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கான சம பங்கை அளிக்கிறது.
மேலும் அவள் சுய மரியாதையுடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ உதவுகிறது. அவளது வாழ்க்கையில் அவள் சந்திக்கும் பல துன்பங்களை எதிர்க்க, எடுத்துக்காட்டாக குடும்பத்தினர் கைவிட்ட நிலையிலும் அவளது நிதி சுதந்திரமே அவளுக்கு உறுதுணையாக இருக்கும். பெண்ணை பொம்மையாக பார்க்கும் இச்சமூகத்தில் அவளின் தரத்தை உயர்த்துவது நிதி சுதந்திரம் தான். பெண்களின் சுதந்திரம் மற்றும் பெண்களுக்கான சம உரிமைக்காகப் பலரும் போராடி வரும் நிலையில் அவை அனைத்திற்குமே ஒரு பெண்ணின் தனிப்பட்ட நிதி சுதந்திரமே தீர்வாக இருக்கும். ஒரு பெண் நிதி சுதந்திரம் அடைந்துவிட்டாலே போதும் மற்றவை எல்லாம் தானாகவே அவள் கையில் வந்து சேரும்.