செமஸ்டர் முடிந்தது. எதிர்பார்த்த விடுமுறையும் தொடங்கியது. உற்சாகத்துடன் வீட்டுக்குச்சென்றேன். ஆனால், வீட்டில் பவர் கட். படித்து களைத்த என் கண்கள் சற்றே இளைப்பாற துடித்தன. வீட்டிற்குள் இருக்க முடியாமல் சலிப்புடன் மாடிக்குச் சென்றேன். மெய்சிலிர்ந்து போனேன். பால் நிலவும், பனிக்காற்றும் என் மனதை பரவசப்படுத்த, மின்மினியாய் மின்னும் நட்சத்திரக் கூட்டம் என் நெஞ்சமதைக் கொள்ளைக் கொள்ள, சட்டென்று என் மனதில் உதித்த கற்பனைக் காவியம் இது.
இருளில் வாழும் மக்களின் சோகத்தை தன் ஒளியால் கிழித்தெரியும் வல்லமை கொண்ட ராஜா. பால் போன்ற தேகமும் பால் மனம் மாறா உள்ளமும் கொண்ட ராணி. இவ்விருவரும் ஒருவர் மேல் ஒருவர் அளவுக்கடந்த பாசம் கொண்டிருந்தனர். ராணி ராஜாவிடம் தனக்கு ஓர் விலைமதிப்பற்ற பரிசளிக்குமாறு கேட்டாள். அதற்கு ராஜா, தன்னை தினந்தோறும் சந்திக்கும் வரத்தை அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார். அவர் கூறியவாறு தினமும்
ராணியை தவறாமல் சந்தித்து வந்தார். இவ்வாறு இனிமையாய் சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்வில் ஓர் கருப்பு நாள் வந்தது.
ராஜா ராணியைக் காண வரும் வழியில் ஒருவர் குறுக்கே வந்ததால், அவரால் அன்று ராணியைக் காண இயலாமல் போனது. ராஜா தன்னைக் காண வருவார் என்று தினந்தோறும் காத்துக்கொண்டு இருந்தது போல அன்றும் ராணி வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தாள். ராஜா தன்னைக் காண வராததால் ஏமாற்றமடைந்தாள். சத்தியத்தை மீறிய ராஜாவின் மீது கோபம் கொண்டாள். மறுநாள் ராணி, தன்னிடம் மன்னிப்பு கேட்குமாறு ராஜாவிடம் கூறினாள். ராஜா தன் நிலையை எடுத்துக் கூற அவள் வாய்ப்பளிக்கவில்லை. ராஜாவின் முகம் காண மறுத்தாள். இதனால் கோபம்கொண்ட ராஜா "இன்று நீ என்னை பார்க்கா விட்டால், இனி என்றும் நான் உன்னை காண மாட்டேன்" என்று கோபத்துடன் கூறி அங்கிருந்து விடைபெற்றார். ராஜா கூறியது போலவே அன்று முதல் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருந்து வந்தனர். ராணியைக் கண்டவுடன் மறைந்து போவதும், ராணி சென்ற பிறகு வருவதுமாக இருந்தார், ராஜா. நாள்தோறும் ராஜாவைக் காணாத ஏக்கத்தால் இளைத்தாள் ராணி. இருப்பினும் என்றாவது ஒருநாள் அவரைக் கண்டு விடுவோம் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தாள். அன்று ராஜாவின் வழியில் குறுக்கே வந்தவர் இவற்றைக் கண்டு மனம் வருந்தினார். இவர்களின் இந்நிலைக்கு தாமே காரணம் என்று வருத்தம் கொண்டார். அவர்களை எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே தன் வாழ்வு இருளில் இருந்தாலும், இவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று முடிவெடுத்தார். ராஜா ராணியுடன் சேரும் அந்த திருநாள் வந்தது. அந்த நாள் தான் சூரிய கிரகணம்.
சந்திர கிரகணம் அன்று, பூமி விண்ணுலக அரசனாகிய சூரியனுக்கும், வானின் பிறை சூடா மகுடமான நிலவிற்கும் இடையே குறுக்கிட்டதால், இவ்விருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிளவை சரிசெய்யும் வகையில், சூரிய கிரகணம் அன்று பூமி தன்னை இருளில் ஆழ்த்திக்கொண்டு, இருண்டுபோன இவர்களது வாழ்வில் ஒளி ஏற்றியது. இவ்வாறு என் கற்பனை சந்திர கிரகணத்தில் தோன்றி சூரிய கிரகணத்தில் இனிதே முற்றுப்பெற்றது.