ஜப்பானிய சினிமாவை உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் குரோசவா. இவர் 1950இல் எடுத்த ’ரஷோமோன்’ உலக திரைப்பட விழாக்களில் இடியாய் விழுந்தது. எல்லாக் கதைகளும் ஏற்கனவே எழுதப்பட்டவையே. அதை வித்தியாசமாய் சொல்லும் விதமே திரைக்கதை. அதுவரை ரஷோமோன் போலொரு திரைக்கதையை உலகம் பார்க்கவில்லை.
ஒரு கொலையை சுற்றி நடக்கும் கதை இது. அதைச் சார்ந்த ஒவ்வொருவரின் கூற்றும் பிறருக்கு முரண்பட்டதாக இருக்கிறது.
இந்தப் படம் எடுக்கும் முன்பு, குரோசவாவின் உதவி இயக்குநர்கள் அவரிடம் வந்து, ”எங்களுக்கு இக்கதை புரியவில்லை?” என்று கூறினர். அவரோ, “ஒழுங்காய் படித்து வாருங்கள்” என்று திருப்பி அனுப்பினார், பிறகும் அவர்களுக்கு புரியவில்லை என்று நின்றனர். அவர் கதையை மட்டும் விளக்கினார். அரைமனதோடு அவர்கள் திரும்பி சென்றனர். கொலையை யார் தான் செய்தது என்பது யாருக்கும் புலப்படவில்லை.
அதே போல் படம் எடுக்கும்பொழுது, அதில் நடித்த நடிகர்கள் வந்து ஒவ்வொரு முறையும் குரோசவாவை, “இதிலிருந்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்” என்று கேட்டார்கள். ”இப்படம் நம் வாழ்க்கையைப் போல் தெளிவான அர்த்தங்கள் ஏதும் இல்லை” என்றார். படத்தில் ஒரு வசனம் வரும். மரம் வெட்டி ஒருவன், “சுத்தமாக எனக்குத் தெளிவில்லை” என்பான்.
குரோசவா செய்தது சரி தான். படத்தில் வரும் மரவெட்டிக்கே எது உண்மை என்று புலப்படாத பொழுது. நமக்கு எப்படி?
படத்தின் ஒளிப்பதிவும், இசையும் படத்தை வேறு கோணத்தில் தூக்கி நிறுத்துகிறது. இந்த படத்தில் தான், நேராய் சூரியனை காட்டும் காட்சிகள் முதலில் படமெடுக்கப்பட்டன. இப்படத்தில் மழை ஒரு கவிதையாக பின்புறம் கதை சொல்கிறது. பாலா படத்தைப்போல் கொடூரமாய் செல்லும் கதை, முடியும்பொழுது மனிதத்தன்மையில் சிறிது நம்பிக்கை தருகிறது.
ரஷோமோனில் வரும் திரைக்கதை வடிவம், பிற்காலத்தில் பல படங்களை உந்துதல் செய்தது. இந்த முறையை பயன்படுத்துவது, “ரஷோமோன் விளைவு” என்றழைக்கப்பட்டது. இந்த படத்தை விழாவில் பார்த்த சுந்தரம் பாலச்சந்தர் இந்த வடிவத்தில் சிவாஜியை வைத்து, “அந்த நாள்” என்றொரு படம் எடுத்தார். மிகச்சிறந்த தமிழ்ப்படங்களில் ஒன்றாய் கருதப்படுகிறது. அந்தப் படத்தில் பாடல்கள் ஏதுமில்லை. முதல் காட்சியிலேயே சிவாஜி சுட்டுக்கொல்லப்படுவார். இதனால் அவர் ரசிகர்கள் இதை ஏற்கவில்லை. கமலஹாசன் இதே போல், “ரஷோமோன் விளைவை” விருமாண்டியில் பயன்படுத்தியிருப்பார்.
தெளிவான உண்மை என்பதை இக்கதையின் வாயிலாய் கேள்வி கேட்டிருப்பார் குரோசவா. ஒவ்வொரு மனிதனுக்கேற்றார்ப்போல் உண்மை மாறுபடுகிறது, மாற்றப்படுகிறது. அதை அழகாய் எடுத்துரைக்கும் ரஷோமோன் சிறந்த உலக கலைப்படம் என்பது தெளிவான உண்மை தான்.