Loading...

Articles.

Enjoy your read!

டியர் ரோஜா !


அந்த  நேரத்தில்  எல்லாம்  வீட்டில்  அடிக்கடி  கேபிள்  துண்டிப்பாகும்.  "அந்த ரோஜா படக் கேசட்டை எடுத்துப் போடுங்க"  என  அப்பா  கூறுவது  இன்றும் நினைவுள்ளது.  அது  அப்பா வெளிநாட்டிலிருந்து  வரும்போது  வாங்கிவந்தது.  ஒரு  படம்  மூன்று  ஆகப் பிரிக்கப்பட்டு மூன்று  கேசட்களில்  பதிவாகி  இருக்கும்.

தேசியக்கொடி  பற்றி  எரிந்து  கொண்டிருக்க  அதைப்  பார்த்த  கதாநாயகன்  அதை  அணைக்கும்  செயல்பாட்டில் தன்னைத்தானே  எரித்துக்கொள்கிறான்.  மணிரத்னம்  யார்  என்றோ  ரஹ்மான் யார் என்றோ  அறியாத  அந்த  ஏழு  வயதில்  என் கண்களில்  உணர்ச்சியை  நிரப்பிய  முதல் காட்சி  அது.  இப்போதும்  கூட!!

நாசருக்கும்  கதாநாயகிக்கும்  இடையிலான  ஒரு  உரையாடலில்,  ராணுவத்தில்  இழந்த  உயிர்கள் அனைத்தும்  உன்  கணவரின்  வாழ்க்கையை  விடக்  குறைவான  முக்கியத்துவம்  வாய்ந்தவையா என்று  கேட்க, ஒரு அமைச்சரின் மகன் அல்லது மகள் கடத்தப்பட்டால் இதே அணுகுமுறையைத் தான் பின்பற்றுவீர்களா என்று பதிலடி கொடுக்கிறார், கதாநாயகி.  மணிரத்னம் வரிகளின் தாக்கம் அன்றே என்னுள் தொடங்கியது. 

அவரின் வரிகளோடு வந்த இசைபுயலின் இன்னிசயை எப்படி வர்ணிக்க!!  "மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை".  இன்றும் சிறிய நகைப்பூட்டும் இந்தப் பாடல் வரிகள். அதைத் தொடர்ந்து ஒலிக்கும் புல்லாங்குழல், ஒவ்வொரு வரி முடிவிலும் ‘ஆசை!’ என்று சட்டென்று முடியும் இடம். அடடா...!!  இன்று நான் ரஹ்மானின் தீவிர ரசிகை.  ஆனால், இதுதான் அவரது முதல் படம் என்று இன்னும் நம்பமுடியவில்லை.

படத்தில் ஒரு ஆல் டைம் ஃபேவரைட் " தமிழா தமிழா நாளை நம் நாடே".  அத்தனை எளிமையாகவும் அழுத்தமாகவும் அமைந்த வைரமுத்துவின் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் ஒரு அலாதி இன்பம் தான்.

ஆகஸ்ட் 15, 2020 அன்று ரோஜா படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.  இன்றும் அந்த கேசட் வீட்டில் இருக்கிறது.  நெடுநாட்களுக்குப் பிறகு நேற்று மாலை அதைக் கண்டெடுத்து ரெக்கார்டரில் போட்டேன்.  சற்று இடை இடையில் நின்று நின்று ஓடியபடி தொடங்கியது "சின்னச் சின்ன ஆசை ! "

Tagged in : MySpace, nostalgia, Roja movie,

   

Similar Articles.