வாசகனின் வயது எனக்கொரு தீப்பிழம்பு அல்லவே
அதில் சில நொடிப்பொறிகள் நான் யாசிக்கும் பொருளும் அல்லவே
என் கவி ஒன்றும் பஞ்சுப்பொதி அல்லவே
அந்த நொடிப்பொறியை இந்த நெடிக்கவிக்கு மூட்ட எனக்கு நல்லதொரு காரணமும் அல்லவே
மூட்டிய பின் ஒளி வர முன் நான் காட்டிய அடிகள் மெய்யும் அல்லவே
வந்த ஒளியில் நொந்து மாள மொழித் தேய்மானம் ஒரு இருளும் அல்லவே
முறையிழந்து குழப்பமே அடையாளமாய்க் கொண்ட
பதின் பருவத்தினரைப் போல்
இன்று நம்மிடையே உலாவும் இத்தமிழும்
ஒரு சாறில்லாக் கரும்பும் அல்லவே
அக்கரும்பு தன் சாற்றை இழக்கக் காரணமான நாமும் ஒரு தமிழரும் அல்லவே
பறிபோன இனிமையை மீட்டு வந்து கொடுப்பது நம் கடமையும் அல்லவே
'அல்லவே' என்ற சொல்லிழந்தால் இக்கவி உண்மையின் உரு ஆகுமே
இதுவரைப் பொய்யைக் காத்த இக்கவி கடைசி அடியில்
அச்சொல்லை இழந்து மெய் காக்கப் புறப்படுமே !