"பரதேசி"
மணல் ஒன்று கூட இல்லாத ஒரு பாலைவனம்
முற்றிலும் கானல் கடலால் உண்டானதைக் கண்டதுண்டா ?
அக்கடலில் வெளியேறும் நுரைப் போல் வெள்ளைத் தாடி
கொண்ட ஒருவன் செத்துப் பிழைத்துக் கொண்டு
இருக்கிறான் அந்தப் பாலைவனத்தில் பல வருடங்களாய்
பாலைவனத்தில் தப்ப முயன்று தோற்ற தோற்றம்.
காலத்தினால் பசியின் உருவாய் ஆன பரதேசிக்கு
உயிர் போகும் கடைசிக் கண நாளில் ஒரு
பலகையும் பல வண்ணச் சாறுகளும் கிடைத்தது.
உண்டு நாட்கள் ஆனப் போதிலும் வரைகிறான்
பலகையில் எண்ணத்திற்கேற்ப வண்ணத்தைக் கொண்டு.
வருடங்கள் பாலைவனத்தில் வீணாகக் கழிந்த ஏக்கமா ?
உணர்வுகளின் மூல ஊற்று வண்ணத்தில் பிரதிபலிக்குமா ?
யூகிக்க முடியாத ஏராள ஓவியம் எதையோ வரைகிறான் .
தூரத்தில் வெகு நேரமாய் ஒரு காகம்
தன் மீது பார்வை தொடுப்பதை உணர்கிறான்.
காகத்தின் பார்வை விலகிய மறு நொடி
சுக்கு நூறாய்ச் சிதறினான் பாலைவனம் திரிந்த பரதேசி.
"காகம்"
பசித் திண்டாட்டத்தில் எந்த முட்டாளாவது வரைவானா ?
என்ற வர்க்கம் புரியாமல் குழம்பியது காகம்.
ஏராள வண்ணங்கள் குவிந்த ஓவியத்தில்
காகத்தின் கணிப்புக்குள் அடங்கிய ஒரே விஷயம்
பலகையில் ஒரு செந்நிற வட்டம் இடம் மாறுகிறது.
அதன் நிலை பொறுத்துச் செம்மை குறைந்து
ஏறுவதைக் கூர்ந்து கவனித்தது காகம்.
பலகையின் இறுதியில் வட்டத்தின் செம்மை
முதிரும் ஒரு சமயத்தில் காகத்தின் கவனம்
அருகில் ஒரு கூக்குரலால் சிதறுகிறது.
பின் திரும்பிப் பார்த்தால் ஓவியம் காணவில்லை அந்த மனிதனும் காணவில்லை.
செம்மை நிற வட்டமாய் கதிரவன் மட்டும் மங்கி ஒளிர்கிறது.
"சிறுவன்"
காலை முதல் மாலை முழுதும் தலை அசைக்காமல்
மேகத்தை உற்றுப் பார்த்தபடி இருக்கிறது காகம்
என்றெண்ணிய சிறுவன் காகத்தின் கவனம் சிதைக்கக் கூவுகிறான் .
நாள் முழுதும் பார்க்கும் அளவிற்குக்
காகத்தின் கற்பனைச் சிம்மாசனத்தில்
என்ன காட்சியில் மேகம் அமர்ந்திருக்கக் கூடும்?
என்ற சிறுவனின் மனதில் குழப்பத்தையும்
மேகத்தில் பரதேசியும் அவனின் ஓவியமும் தொலைந்து
காகத்தின் மனத்தில் அபத்தக் குழப்பத்தையும்
"மேகம் இழந்த வானம் அழகைத் தேடி எங்கே போகும்?"
என்ற கேள்வி இடம் மாற்றியது,
இருவரையும் சில்லென்ற ஒரு
தென்றல் வந்து தீண்டும் போது.......!