Loading...

Articles.

Enjoy your read!

ஒரு தந்தையின் வேண்டுதல்

தன் குழந்தைகளுடன் சிரித்த வண்ணம் வாழும் தகப்பன் ஒருவன் தன் மரணத்தைச் சந்திக்க நேரிடுகிறது . தனது சோகங்களை நினைத்து வருந்திய போதும் , தன் புதல்வரின் முகங்கள் அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது .அப்போது ,இறைவனிடம் அவன் கேட்கும் அவனது கடைசி ஆசையைப் பாருங்கள் .

 

எனையிழந்து உழைத்தும் சமைத்திட விறகில்லை ,

கனவாயிரம் இருந்தும் பறந்துசெல்லச் சிறகில்லை ;

பசியால் வாடியபோதும் உண்டிட உணவில்லை ,

கசியும் கூரையின்கீழ் நல்லதொரு உறக்கமில்லை ;

கதிரவன் உதித்தும் விடியலென்றும் வந்ததில்லை ,

மதிநிலவு ஒளிகொடுத்தும் என்வாழ்வில் ஒளியில்லை ;

துன்பங்கள் அனுபவிக்காத நாளென்று ஒன்றில்லை ,

என்னருமை குழந்தைகள் இவையேதும் அறிந்ததில்லை .


ஏழையவன் சிரிப்பில் இறைவனைக் காணலாமென்று ,

பிழையுடன் எழுதிவைத்த மூடன்தான் எவனோ ?

அனுபவித்து வாழ்ந்திடப் பிறந்த மனிதக்குலத்தில் ,

மனுக்கள் அழித்துக்கொண்டு வாழ்வது ஏனோ ?

இருக்கிறானா ? இல்லையா ? படைத்த கடவுள் ,

இருந்தால் ஏழையென் வேண்டுதலைக் கேட்பானோ ?

கொட்டும் மழையின் நடுவில்நின்று கேட்கிறேன் ,

கேட்டும் கேட்காமல் காதைமூடிப் போவானோ ?


கண்ணீர் சிந்திடக் கண்ணிலே நீருமின்றி ,

எண்ணிய செயலில் வெற்றிகள் ஏதுமின்றி ,

பயனேதுமின்றி , வாழும் என்னைப் போன்ற ,

கயவனின் குழந்தைக்கும் கருணை காட்டும் ;

இறைவனே எனதுயிர் பிள்ளைகளைப் பார்த்திடும் ,

கறைபடியா அவர்களின் உள்ளத்தை கண்நோக்கிடும் ;

கவலைகள் சிறுவயதிலே அவர்களைச் சூழ்ந்திட ,

தவறென்ன செய்துவிட்டனர் பாசமான பாலகர் .


போரின் கொடூரத்திற்குத் துணைவி இறந்தாலும் ,

யாரின் துணையுமின்றி நான் வாழ்ந்தாலும் ;

காசநோய் நரகிற்கு அழைத்துச் சென்றாலும் ,

பாசமும் நேசமும் எப்போதுமே நிலைக்கும் .

காட்டுத்தீயின் பின்னர் முளைத்த புல்லென ,

சட்டென நம்பிக்கை கொடுத்தனர் இவர்கள் .

இவர்களைப் பிரிந்து இவ்வளவு சீக்கிரமாய் ,

தவறிழைத்து அழைத்துச் செல்வது நியாயமா ?


எடுத்திட அவரிடம் எதுவுமே இருக்காது ,

கொடுப்பதை கொடுத்திடு கைநிறைய கொடுத்திடு ;

படிப்பினை கொடுத்திடு, அறிவினை கொடுத்திடு ,

துடிப்பான நல்லபல நண்பர்களை கொடுத்திடு ;

நீண்டகாலம் வாழும் பாக்கியம் கொடுத்திடு ,

மாண்டபின்னும் நிலைக்கும் மேன்மை கொடுத்திடு ;

நிலைக்கும் நல்லவொரு உறவினை கொடுத்திடு,

மலைகளை உடைக்கும் மனபலம் கொடுத்திடு.


உழைக்கும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கட்டும் ,

பாழையாகப் பாடுபடும் பாவக்கதைகள் வேண்டாம் ;

உயரங்கள் என்னழகு சிறுசிட்டுக்கள் பறக்கட்டும் ,

துயரங்கள் அவர்நிழல் பக்கத்திலும் வேண்டாம் ;

போதுமென்று சொல்லுமளவு உணவு உண்ணட்டும் ,

ஏதுமின்றி பசித்தவண்ணம் உறங்கிட வேண்டாம் ;

மெத்தையின் சுகத்திலே அமைதியாய் உறங்கட்டும் ,

பத்திரமின்றி வாழ்ந்திடும் பாழிடங்கள் வேண்டாம் .


பத்திரமாய் இவர்களை கண்ணோக்கி பாரும் ,

சத்தியமாய் விழிநீர் சிந்தாமலே காத்திடும்;

எனக்கென எதுவும் உன்னிடம் கேட்டதில்லை ,

தனக்காய் வாழ்ந்திட நான் எண்ணியதில்லை ;

இருந்தாலும் இத்தினம் ஆசையோடு கேட்கிறேன் ,

வருந்த வைக்காமல் தயவுகூர்ந்து செய்வாயோ ?

மறுபிறப்பில் இவர்களுக்கு நான் தகப்பனாய் ,

பிறந்திடும் வரமொன்று எனக்கு தந்திடுவாயோ ?


மரம்சாய்ந்த பின்னும் கன்றுகள் வாழட்டும் ,

கரம்பிடித்துக் காக்கும் கரங்கள் காக்கட்டும் ,

சோகங்கள் மேகங்கள் போலே கலையட்டும்,

தாகங்கள் தீர்த்திட அமுதங்கள் சுரக்கட்டும்,

தீமைகள் அழிந்திட , நல்லவை நடக்கட்டும்,

சுமைகள் குறைந்து ,இமயம் நெருங்கட்டும்,

வாழிய என்புதல்வர் !! வாழிய அவர்சிரிப்பு !!

வாழிய இறைவன் !! வாழ்த்தி விடைபெறுகிறேன் .

Tagged in : Mugavari, CONTEST, poem,

   

Similar Articles.