மனிதனின் தோற்றம் தாயின் கருவறையில்,
அவனுள் கவிஞனின் தோற்றம் -
தாய்மொழியின் கருவறையில்.
மனதில் எண்ணங்கள் விதைத்த விதை,
என்று வளருமோ,ஓர் கவிதை.
சிறகுகளை விரிக்காமல் பறவைகள் பறப்பதில்லை ,
இதழை விரிக்காமல் மலர்களும் மணப்பதில்லை.
இமைகளை விரிக்காமல் கனவுகள் வருவதில்லை,
உன் மனதை விரிக்காமல் கவிதைகள் பிறப்பதில்லை.
மழைத்துளியைத் துளைத்த ஒளியால்,
வானிலும் வண்ணங்கள் பிறந்தன,
உயிர்த்துளியைத் துளைத்த ஒலியால்,
வாழ்விலும் எண்ணங்கள் பிறந்தன.
பொங்கும் எண்ணங்களை முடக்காதே,
பொழியும் எழுத்துக்களைத் தடுக்காதே,
உன்னுள் உள்ள கவிஞனைத் தொலைக்காதே!
பொருள் இல்லாத வாழ்க்கையை மதிக்காது மண்ணுலகம்,
பொருள் இல்லாத வார்த்தைகளை மதிக்காது கவியுலகம்.
உணர்வுகளே உரிபொருள்,
எழுத்துக்களே எரிபொருள்,
கருத்துக்களே கருப்பொருள்,
உன் கவிதையே மெய்ப்பொருள்.
எழுதுகோள் தூக்கு,
எழுத்துக்களை ஊற்று,
அவற்றை வார்த்தையாகக் கோர்த்து,
கவிதை ஒன்றைத் தீட்டு.