Loading...

Articles.

Enjoy your read!

நூலக விரிவாக்க விழா

இனிமையாக அமைந்தது, மாதவத்தின் நூலக விரிவாக்க விழா. மாவிலைத் தோரணங்களும், அழகான கோலமும், சேலையில் பெண்களும், வேட்டியில் ஆண்களும், புத்தாண்டு கொண்டாட்டங்களும் அந்தச் சூழலை மிக அழகாய் மாற்றியிருந்தன. மன்ற அறைக்குள் நுழைந்தால், 1500 புத்தகங்களும், ‘நூலகம் இருக்கும் வரை எந்த மொழியும் அழியாது’ என்ற வாசகமும் வரவேற்கின்றன. ஒருபுறம் கரும்பலகையில் பாரதியார் சிரித்துக் கொண்டிருந்தார். 

மாணவர்களின் ஆலோசகரும், மாதவ மன்றத்தின் அறிவுரையாளருமான முனைவர் திருமதி. வாணி அவர்களும், இந்நூலக விரிவாக்கத்திற்குப் பெரிதும் காரணமாய் அமைந்த 1966-ம் ஆண்டைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களும் வந்த பின்பு விழா தொடங்கியது. தமிழ்த் தாயை வாழ்த்தி வணங்கிய பின்பு, குத்து விளக்கேற்றும் இனிய நிகழ்வு நடைபெற்றது. இதன் பின்பு, மன்ற அறிவுரையாளரின் வரவேற்புரை அமைந்தது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தவர், இந்நூலகம் வளர்ந்த கதையையும், அதற்கு மிக முக்கியக் காரணமாய் இருந்து உழைத்த மன்றத் தலைவியான ப்ரீத்தாவையும், மன்றச் செயலாளரான ஷ்யாமையும் பாரட்டினர். 

அடுத்த நிகழ்வாக, புலமுதல்வரின் வாழ்த்துரை அமைந்தது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறியவர், 1966-ம் ஆண்டு மாணவர்களையும், அவர்கள் இந்நூலகத்துக்காக ஆற்றிய பணியையும் பெரிதும் நினைவு கூர்ந்தார். தனது உரையில், மாதவத்திற்காக அறையைக் கொடுத்ததற்காக, அரிமா சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.இதன் பின்பு, அந்த இனிய நாளின் சிறப்பு நிகழ்வாக நூலகத் திறப்பு விழா நடந்தது. ஒவ்வொரு புத்தக அலமாரியையும் நீண்ட கரவோசைகளுக்கிடையே ஒவ்வொருவர் திறந்து வைத்தனர். 

பின்பு, 1966-ம் ஆண்டு முன்னாள் மாணவர்களின் உரை அமைந்தது. முன்னாள் மாணவர் பேரவையின் தலைவர் திரு.கருணாகரன் அவர்கள், தமிழின் சிறப்புக் குறித்துத் திறம்படப் பேசினார். இதன் பின்பு, 1966-ம் ஆண்டில் இம்மன்றத்தின் உறுப்பினராக இருந்த திரு.இரங்கநாதன் அவர்கள் மன்றத் தலைமையைச் சந்தித்ததைக் குறித்தும், நன்கொடைகள் சேகரிக்கப்பட்ட விதம் குறித்தும் உரையாற்றினார். நூலகத்திற்காக நன்கொடைகள் வழங்கியவர் மற்றும் திரட்டியவர்களுள் இவர் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்ததாக, அங்குக் குழுமியிருந்த முன்னாள் மாணவர்களின் ஆசிரியரான திரு,இராமன் அவர்கள் உரையாற்றினார். அவரின் பேச்சு நெகிழ்ச்சியூட்டும் விதத்தில் அமைந்தது. வயதானாலும், அவரின் குரலும், சொற்களின் தெளிவும் அனைவரையும் கவர்ந்தது. அடுத்த நிகழ்வாக, நினைவுப் பரிசு வழங்குதல் நடைபெற்றது. 

இதன் பின்பு, இயந்திரவியல் முதலாம் ஆண்டு மாணவியின் உரை இருந்தது. தமிழின் தொன்மை, இனிமை, தாய்மை, இலக்கியங்கள், சிறப்புகளைக் குறித்து அவர் உரை அமைந்தது. இறுதியாக நாட்டுப்பண் பாடி, விழா முடியப்பெற்றது. இதன் பின்புதான் விழாவின் முக்கிய அம்சமே நடந்தது. அதாவது, தமிழர் உணவான கம்பங்கூழ் பரிமாறப்பட்டது. தமிழ்ப் புத்தாண்டு அன்று, சொற்பொழிவுகளும், நூலகமும், புத்தகங்களும், கம்பங்கூழும், குத்து விளக்கும், தோரணங்களும்... அந்த இடம் முழுவதும் தமிழ் மணம் கமழ்த்தது. அந்த மணம் எங்கும்... எங்கெங்கும் பரவ வேண்டும் என்பதே மாதவத்தின் விருப்பமும் கூட. 

ஆ! ஒன்று கூற மறந்துவிட்டேன். கூழுக்குத் தொட்டுக்கொள்ளப் பரிமாறப்பட்ட மாங்காய் ஊறுகாயும், மிளகாய் வற்றலும், சின்ன வெங்காயமும் அருமை! அருமை!

Tagged in : Sports, Aditya Natarajan, News and views, Sunanda Vasudevan, Tamil, ப்ரின்சி,

   

Similar Articles.