Loading...

Articles.

Enjoy your read!

இப்படிக்கு நம்பிக்கையுடன் உங்கள் தக்காளி

வணக்கம்!

நாட்டின் ஏதோ ஒரு இடத்தில் விதைக்கப்பட்டு பூச்சிக்கொல்லியின் பூச்சுகளில் இருந்து தப்பிப் பிழைத்து சாக்குப்பையில் சிக்கி நசுங்காமல் தப்பித்து ஏதோ ஒரு சந்தையில், விளைத்தவருக்கும் லாபமில்லாமல் வாங்கியவருக்கும் லாபமில்லாமல் இடையில் உள்ளவருக்கு லாபம் தருவிக்கும் தக்காளி நான். பொதுவாக என் விளைச்சல் அதிகமாக இருக்கும் அதனால் என் விலையும் குறைவாகவே இருக்கும். அதனால்  தான் என்னவோ யாரும் என்னை மதிப்பதே இல்லை.

        சாம்பாருக்கு நான் தேவை , இரசத்திற்கு நான் தேவை , குழம்பிற்கு நான் தேவை, ஆனால் இறுதியில் நான் இருப்பது என்னவோ குப்பைத்தொட்டியில் தான். எல்லோருடனும் ஒத்துப்போகிறேன் என்பதால் என்னவோ என்னை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நான் சமையலுக்கு அத்தியாவசியம் எனத் தெரிந்த உங்களுக்கு, எனது இருப்பை மதிக்கத் தெரியவில்லை. எந்த விதத்தில் நானிருந்தாலும் ஒதுக்கி வைத்துவிடுகிறீர்கள் . இது நியாயமா? உங்களுக்கு உணவாக முதலில் உங்களால் வதக்கப்படுகிறேன் இறுதியில் உங்களால் குப்பையாக்கப்பட்டு வதைக்கப்படுகிறேன். 

இதன் கர்ம வினையோ என்னவோ , இப்போது எனது விளைச்சல் குறைந்துவிட்டது, விலையும் எகிறிவிட்டது.  இப்போது அனைவரும் பதறுகிறார்கள், அன்றாட வாழ்வில் என்னை வாங்க இயலாமல் தவிக்கிறார்கள். இப்போது என்னை நினைத்து வருந்துகிறார்கள், எனது மதிப்பை உணர்ந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இப்போது எனக்குள் ஒரு ஐயம் எழுகிறது . எது எனது உண்மையான மதிப்பு என்று, எனது விலையா? அல்லது எனது  இருப்பா? இதற்கு நீங்கள் தான் பதிலளிக்க வேண்டும்.

ஔவை கூறியது போல மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றதன் படி நான் இப்போது வருவதில்லை, சிறிதாக கோவம் கொண்டேன். ஆனால் நீங்கள் இன்று வருந்துவதைக் காண என் மனது ஒப்புக்கொள்ளவில்லை.  ஐயன் வள்ளுவன் கூறியது போல இன்னா செய்தாரை ஒருத்தர் அவர்கள் நாண நன்னயம் செய்துவிடல்  என்று விரைவில்  முடிவெடுப்பேன். இருக்கும்போது எப்போது வேண்டுமானாலும் வாங்கிடலாம் என்ற நம்பிக்கையில் மதிக்காமல் இருந்தீர்கள், இப்போது வாங்கவே முடியாது என்று நினைக்கையில் பயமாக இருக்கிறது அல்லவா! ஒருவரின் மதிப்பு அவர் இருக்கும்போது தெரியாது, இல்லாமல் போன பின் தான் புரியும். இருக்கும்போது கொண்டாடாமல் போன பின் வருந்தி என்ன பயன். கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் எதற்கு? புரிந்து நடந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் திரும்பி வருகிறேன்.

இப்படிக்கு நம்பிக்கையுடன்,

உங்கள் தக்காளி.

Tagged in : TOMATO, LETTER, PRICE HIKE,

   

Similar Articles.