நண்பா ஓ நண்பா
கருவிலே நான் தோன்றிய காலந்தொட்டு
கனவிலும் நான் யோசித்ததில்லை
கல்லூரிக்காலத்திலே கண்ணிமைக்கும் நேரத்தில் உன் நண்பன் ஆவேன் என்று
பள்ளி காலத்திலே பகுத்தறிவைப் பெற்றேன்
பட்டறிவினை பெற்று பட்டம் பெறக் கல்லூரி வந்தேன்
அப்போது எனக்குத் தெரியவில்லை
கடைக்கோடி கிராமத்திலிருந்து வரும் என்னைக் கற்சிலை போலச் செதுக்கச் சிற்பியாக என் நண்பன் வருவான் என்று
உற்ற காலத்திலே
உறுதுணையாய் நீ இருந்தாய்
உண்மைக்கு நிகரான இன்னுயிராக இருந்தாய்
உன் திறனால் பெற்ற பெருமைகளை
உன்னோடு புதைத்து விடாமல்
என்னுள் விதைத்தாய்
என்னுள் இருந்த என்னை எனக்கே புரிய வைத்தாய்
பாலைவனமாக இருந்த என் வாழ்வினில் பனித்துளி போல் வந்தாய்
பல்லாயிர கணக்கான பெருமைகளைப் பெற்றுத் தந்தாய்
காதல் என்னும் கடல் மேல் எழுதப்படும்
கண்ணீர் காவியதிலே நான் கரைந்துருகிய
போதும்
காயங்கள் பல பெற்ற போதும் காவலனாய் என்னைக் காத்து நின்றாய்
தோழா உன் எதிரே நான் நின்றதில்லை
என் அருகே நீ நிற்கும் போது
காலனே வந்து நின்றாலும்
என் காலடியில் என்ற ஓர் அதீத உறுதி!
என் உடன் பிறந்தவனே எனக்குக் கொடுத்திராத அன்பினை நீ தந்தாய்
எமன் என் எதிரே வந்து நின்றாலும் ஓர் நம்பிக்கை
என் நண்பன் என்னுடன் உள்ளான் என்று
தொல்காப்பியரும் தன் வாழ்நாளிலே
உன்னை போல் ஓர் உறவினை பெற்றிருந்தால்
தமிழ் இலக்கணத்தில் நட்பு என்னும் இலக்கணமும் படைக்கப்பெற்றிருக்கும்
நட்பென்னும் காவியம் நயம்பட உரைக்கப்பெற்றிருக்கும்
தோழா என் தோழா
என்னுயிரை காட்டிலும் மேலானவன் நீ
தோள் கொடுப்பான் தோழன் என்பதை உடைத்து
கல்வி என்னும் ஞானப்பால் கொடுத்தாய்
திறன் என்னும் வாள் கொடுத்தாய்
ஊக்கம் என்னும் வேல் கொடுத்தாய்
என் இன்னுயிர் போனாலும் என் நாமம் ஒலிக்கும் வரை உன் நாமம் உரைத்து உயிர்த்தெழுவேன்
உயிருக்கும் மேலான நண்பனுக்காக உயர்தமிழில் ஓர் உயிர்க்காவியம்!!