Loading...

Articles.

Enjoy your read!

நினைவின் ஏக்கத்தில் ..!

 ‘நினைவோ ஒரு பறவை’ – எங்கோ ஒலித்த பாடல் என் காதுகளைத் தீண்டியது தான் தாமதம். அரைத்தூக்கத்தில் இருந்த நான், நினைவுகளின் வானில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கினேன்.

 என் நினைவுகளில் சிறந்த நினைவைத் தேர்ந்தெடுத்த என் மூளைக்கு நன்றி. ஆம்!  அது  சிறந்த நினைவு தான்.  நான் சிறுவயதில் எனது ஊரில் இருந்தது பற்றிய நினைவு அது. அது நினைவா கனவா என ஆலோசிக்காமல், வந்ததை மகிழ்ச்சியோடு அனுபவிக்கத் தொடங்கினேன் நான். 
 நகரத்தின் சிக்கல்களிலும் சிக்கனத்திலும் மாட்டித் தவித்தச் சிறுமி விமோட்சனம் பெற்றதுபோல், பேரின்ப மகிழ்ச்சியோடு வந்திறங்குவது போல் தொடங்கியது என் நினைவு.  ‘வா டி என்னப் பெத்தத் தாயீ ! ’ என்ற ஆச்சியின் வாஞ்சையை ஏற்றவளாய், ஓடி அவள் மடியில் உட்காருவதும் அதற்கு அம்மா அதட்டுவதும் நெஞ்சை மயிலிறகாய் வருடின. எரிச்சலடைந்து கொல்லைப்புறத்துக்கு ஓடிச் செல்வதாய்த் தோன்றியது, எனக்குக்  குபீர் என்றது.

 இன்றைய  பொழுதுபோக்கு இடங்கள் போட்டிப்போட்டாலும் அக்கொல்லப்புறத்தின் அம்சங்களிற்கு ஈடுகொடுக்கமுடியாது. வீட்டின் கடைசியில் ஆரம்பிக்கும் கொல்லைப்புறத்துக்கு எல்லைகளே கிடையாது. கிழமேற்கில் இருக்கும் மாமன் நிலமும் நமதே. வடக்கே இருக்கும் மச்சான் நிலமும் நமதே. 

 எங்களின் முதல் விளையாட்டு நிலம் அளப்பது. கிழக்கிலிருந்து மேற்கே ஓடி அப்பாலிருக்கும் ஓடையை யார் விரைவாக அடைகிறார்கள் என்பதே சவால். ஆங்காங்கே விழுந்தடித்துக்  கொண்டு ஓட ஆரம்பித்தேன். காயங்களுக்கு வீட்டில் பரிசு உண்டு என்பதைத் தெரிந்தே ஓடினேன். பொருட்படுத்தாமல் ஓடியதற்குப் பரிசாய் கண்ணுக்கு விருந்தளிக்கக் காத்திருந்தன வண்ணமீன்கள்

.பாதிக்கால் நனைய, மீனைப் பிடித்து அது நழுவிச் செல்வதைப் பார்த்து கோடி இன்பம் பெற்றேன்.  திரும்பும்போதே புளியமர ஏற்றம் நிகழ்த்தினோம். வளைந்து நெளிந்து பரந்த அந்த மரத்தில் ஏறி, கிளைகளை உலுக்கி, புளியங்காய்களைப் பொறுக்கிச்  சாக்கில் கட்டி அதற்குக் கமிஷனாய் 10 காய்களை வாங்கி உப்பில் போட்டுச் சாப்பிடும் சுகம் என் நினைவையும் மீறி நாவை ஈரமாக்கியது. உழைத்து உழைத்துக்  களைத்த எங்களுக்கு நிவாரணமாய் அமைந்தது  கூட்டான்சோறு ! நால்வர் நாப்பக்கமும் பிரிந்து வாங்கி வந்த காய்களையும் அரிசியையும் ஒன்றாக வேக வைத்துச் சமைத்து அதை அனைவருக்கும் விநியோகித்ததில் பேரின்பம் பெற்றோம். நடந்ததை எண்ணிச்  சிலாகிக்கும் வேளையில் எங்களை அழைத்துச் செல்ல வந்த அப்பா வில்லனாகவே தெரிந்தார். 

கண்ணில் நீர் மல்க  உயிருள்ள சொந்தங்களுக்கும் உயிரற்றச்  சொந்தங்களுக்கும் விடையளித்து வருவதாய் நிறைவுபெற்றது என் நினைவு. நினைவின் முற்றில் எழுந்து அமர்ந்த எனக்கு, அன்று வடித்தது நீலிக் கண்ணீர் அல்ல என்பதை உணர்த்தின என் கண்ணின் கடையோரத் துளிகள். இந்த ஊரடங்கு, என் அற்ப இன்பங்களைத் தான் முடக்கியிருக்கிறது என்றும், எனது உண்மையான இன்பங்கள் என்றோ முடங்கிவிட்டது என்றும் உணர்ந்த நான் பெருமூச்சு விட்டேன், நினைவின் ஏக்கத்தில்...!

Tagged in : MySpace, quarantine, Happiness, Childhood, Memories, nostalgia,

   

Similar Articles.