Loading...

Articles.

Enjoy your read!

Naan Paartha Manidhargal

 

வழக்கம்போல் இன்றும் சற்று அசந்து தூங்கிவிட்டேன் ; எழுந்த போது தான் தெரிந்தது மணி 8 என்று. துரிதமாக குளித்து விட்டு வகுப்பிற்கு கிளம்பினேன்.  கால்கள் வேகமாய் நகர, மனதிற்குள்ளே நேற்றைய வகுப்பின் பாடங்களை மெதுவாக அசைப்போட்டுக் கொண்டிருந்தேன்.  அதில் பாதிக்கு மேல் நினைவில்லாததால், சரி, இதை வைத்து இன்று சமாளித்து விடலாம், என்று எண்ணி, நடப்பதைப்போல் ஓடினேன்.  ஆனால் என் வேகத்திற்குத் தடையாக இருந்தது அந்த காட்சி - நான் வகுப்பிற்கு நுழைவதற்கு முன்பே, அவர் நுழைந்தார். என் பேராசிரியர் எப்படியும் உள்ளே விட மாட்டார் என்று தெரியும். சரி, இங்கு இருந்தால் மாட்டிக்கொள்வோம் என்று வந்த வேகத்திலேயே திரும்பி நடந்தேன். எங்காவது மறைந்து சற்று நேரம் அமருவோம் என்று நினைத்த எனக்கு, கலந்தாய்விற்கு வந்த கூட்டத்தைத் தவிர சிறந்த இடம் தோன்றவில்லை. அமைதியாக சென்று அமர்ந்துக்கொண்டேன்.  

 

நான் வேறு எதுவும் சிந்திப்படர்க்குள் இருவர் என் முன் வந்து நின்றனர். நாற்பதைத் தோத்திருந்த அந்த மனிதர் சொன்னார், "இங்கேயும் நீ நன்றாக தான் படிப்பாய்," என. ஆனால், அந்த சிறு பெண்ணோ, கண்களைக் கசக்கிக்கொண்டே நின்றாள். நீண்ட நேர ஆறுதலுக்குப் பின்பு, அவள் தலையசைத்தாள். அந்த தந்தைக்கோ, முகத்தில் ஒரு புன்சிரிப்பு. இவர்கள் சற்று நகர, என் கண், விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் மீது விழுந்தது.  அக்குழந்தை ஓடி சென்று தன் தாயின் மடி மீது அமர்ந்தது. அப்போது நான் கண்ட காட்சி என்னை வியக்க வைத்தது - ஒரு எட்டுப் பேர் அமர்ந்து, வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த புளிச் சோற்றை சாப்பிடத் தொடங்கின. அட ! சிலருக்கு இந்தக் கலந்தாய்வு ஒரு திருவிழாவாகவே இருப்பதை உணர்ந்தேன். சட்டென்று ஒரு குரல்  மட்டும் கூட்டத்தில் மேற்கொன்றது. திரும்பி பார்த்தேன்.

 

ஒரு தம்பி தொலைபேசியில் இவ்விதமாக பேசினான் : "அம்மாச்சி! நான் கேட்ட கல்லூரியே எனக்கு கிடைத்திருக்கு ; ரொம்ப சந்தோஷமா இருக்கு ! அம்மாவும் நானும் நாளைக்கு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவோம் !" என்று.  யோசித்தேன், இன்றைய சமூகம் பெரியவர்களை மதிப்பதில்லை என்று யார் சொன்னது ? வயதான தன் பாட்டியிடம் நற்செய்தியை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று அவனுக்கு கூட்டத்தின் நடுவே கற்றி பேசும் வரை தோன்றி இருக்கே ! இப்படி ஒரு புறம் இருக்க, ஆவின் கடையிலோ விற்பனை பாடு பயங்கரமாக நடந்தது. வழக்கம் போல், மீதி சில்லரை கேட்ட அனைவருக்குமே ஒரு மிட்டாய் வழங்கப்பட்டது. உண்மைதானே ? இந்தக் கலந்தாய்விில் பல பேரின் எதிர்காலங்கள் தீர்மானிக்கப்படுகிறது.

 

அந்த மாணவன் தன் வாழ்வின் மீதி 40 வருடங்களை எவ்வாறு கழிக்கப் போகிறான் என்று கனிக்கப்படும் காலம் இது. எனவே, வந்திருந்த அனைவர் முகத்திலும் ஒரு பயம், படபடப்பு. அமர்ந்திருந்த எனக்கு, மனிதர்களின் கால்கள் வேகமாக நடப்பது மட்டுமே தெரிந்தது. இத்தனை நெரிசலில், ஒரு குடும்பம் மட்டும் பளபளப்பாகத் தெரிந்தது. அந்த மனிதரின் உடையும், அவர் பேசின விதமும், அவர் மெத்த படித்தவர் என்றே எண்ணச் செய்தது. அவர் தான் மனைவியிடம், பொறியியற் படிப்பைப் பற்றியும், கல்லூரிகளில் சேரும் வழிமுறைகள் பற்றியும், ஆங்கிலம் கலந்த தமிழில் பேசிக்கொண்டிருந்தார். உண்மையில், அவருக்கு பொறியியற் பிரிவுகளைப் பற்றி அதிகமாகவே தெரிந்திருந்தது. அவர் இப்படி பேச, அருகில் இருந்த ஒருவர் அவர் பேசியதை கவனமாக கேட்பதையும் நான் கண்டேன். 

 

இவரோ, ஐம்பத்தைத் தாண்டிய ஒருவர்.  வேட்டி-சட்டையுடன் தலை முழுவதும் எண்ணை உடன், முறுக்கு மீசையுடனும் இருந்தார்.  யாரையோ எதிர்பார்த்தப்படி இருந்த இவருக்கு, அருகில் ஒரு எளிய, நடுத்தர-வர்க தந்தை வந்து அமர்ந்ததும், பொறுக்க முடியாமல் கேட்டார் : "நீங்களும் கலந்தாவிற்கு வந்துள்ளீரா ? என் மகன் 1153 மதிப்பெண் வாங்கியுள்ளான்." என், ஒரு கல்லூரியின் பெயரையும், பொறியியற் பிரிவையும் சொல்லி,  "இதைப்பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா ?" என்று கேட்டார். அதற்கு வந்த பதில், "அடடே ! இது மிகவும் சிறந்த ஓரு பொறியியர் பிரிவு தான், என் மகளுக்கு நான் இதைத் தான் எதிர்பார்த்தேன், ஆனால் கிடைக்கவில்லை. இதற்கு மிகவும் நல்ல எதிர்காலம் உண்டு," என்று முடித்தவரை ஏக்கத்துடன் பார்த்த அந்த தந்தை, இப்போது தன் மகனை பெருமிதத்துடன் பார்த்தார்; அவர் கண்களில் மின்னிய நம்பிக்கையை நான் பார்த்தேன்.  

 

உண்மை தான் ! தங்கள் நிலையை மாற்றி அமைக்கும் திறன் தன் பிள்ளைகளின் மேற்படிப்பிற்கு இருப்பதாகவே பெற்றோர்கள் நம்புகிறார்கள். அந்த ஏழை தகப்பனின் நம்பிக்கையும் ஜெயிக்கட்டும். இவ்வாறு மனதில் பல சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்க, கடிகாரத்தை பார்த்தபோது மணி 10.30 ஆகி விட்டது. திரும்ப எழுந்து வகுப்பிற்கு சென்றேன். 

 

Tagged in : My space, Deeya Kashyap, Keerthana Chellappan, Tamil, Raj Priyanka,

   

Similar Articles.