Loading...

Articles.

Enjoy your read!

ஜெயலலிதாவின் வாழ்வு உணர்த்தும் தன்னம்பிக்கைப் பாடம்

சரித்திரத்தின் பக்கங்களில் அன்று ஒரு முக்கியமான நாள்! ஏன், தமிழகச் சரித்திரத்தில் ஒரு கருப்புநாள் என்றுகூடக் கூறலாம்.

பல குழப்பங்களுக்குப்பின், அந்த இறுதி அறிவிப்பு இரவு 12 மணி அளவில் வருகிறது. மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா, 75 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுப், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என்கிறது அந்த அறிக்கை. கலவரங்களோ, உயிரிழப்புகளோ நடவாது என்று உறுதிசெய்து நேர்த்தியாகத் திட்டங்களைச் செயல்படுத்துகின்றது அரசு. கல்வி நிலையங்களுக்கு 3 நாள் விடுமுறை, மாநிலம் முழுவதிலுமாக 7 நாள், மத்தியில் ஒரு நாள் எனத் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகிறது. செவ்வாய்க்கிழமை (06/12/2016) காலை 6 மணி முதலே, தலைநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜாஜி அரங்கில் மக்கள் வெள்ளமெனத் திரண்டுவிட, வானொலிகளும் , தொலைக்காட்சி நிறுவனங்களும், சமூக வலைத்தளங்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்த, வழக்கமாகப் பரபரப்பாக இயங்கும் சென்னை, சோகத்தில் மூழ்கியது.

பொதுவாக ஊடகங்களில் மறைந்த தலைவர்களுக்குச் சமர்ப்பணமாக, அவர்கள் கடந்து வந்த பாதையையும், வாழ்க்கை நிகழ்வுகளையும் நினைவுகூர்வது என்பது எழுதப்படாத நியதி. ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை, தேர்தல் வெற்றிகளாலும், மேடைப்பேச்சுக்களாலும், அரசியல் சூட்சமங்களாலும் நிறைந்திருக்கும் என்பதே ஒரு சாதாரண மனிதனின் கருத்தாக இருக்கலாம். எனினும் நிறைவுபெற்ற அந்த மாபெரும் சகாப்தம் உணர்த்திய பாடங்கள் ஏராளம்.

வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்து, தந்தையின் மறைவுக்குப் பின், தாயையும் பிரிந்து, பிறர் வளர்ப்பில் வளர்ந்து, அனைவரும் மெச்சும் அளவிற்குக் கல்வியில் கற்றுத்தேர்ந்து, வழக்கறிஞராகும் கனவோடு வளர்கிறாள் அந்த இளம்பெண். கேட்பதனைத்தும் கிடைத்ததெனினும், தாயின் அன்பிற்காக ஏங்கி வாடுகிறாள். இளம்பருவத்தில் ஆசை வார்த்தைகள் பேச அன்னைக்கும் நேரமில்லை, உறுதுணையாய்த் தோழிகளும் இல்லை. இகழ்ந்து பேசி ஏளனம் செய்வோருக்குப் பதிலடி கொடுத்து, படிக்கும் பருவத்தில் அனைத்து வகுப்புகளிலும் முதலிடம் வகிக்கிறாள்.

வருங்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் இல்லாமல் இன்பமாகச் சுற்றித்திரியும் வயதில், குடும்பத்தின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, தாயின்மேல் சுமத்தப்பட்டிருக்கும் குடும்பப்பாரத்தை இறக்கக் கலைத்துறைக்குள் தள்ளப்படுகிறாள். தன் தாயின் கலைத்துறை அனுபவமும், செல்வாக்கும், சிறுவயதில் பயின்ற நாட்டியக்கலையும், நாடக மற்றும் திரைப்பட வாய்ப்புகளை வாரி வழங்குகின்றது. இதில் கல்விக்கனவு முற்றிலுமாகச் சிதைந்து போகிறது. தோற்றுவிட்டோமோ என்று துவண்டு விடாமல், இளம்வயதில் திரைத்துறையிலுள்ள சவால்களைத் துணிச்சலோடு எதிர்கொள்கிறாள்.

தனக்கு விருப்பமில்லாத பணியையும் செவ்வனே செய்து, தன்னிகரற்றத் தாரகையாய் மின்னுகிறாள் கலையுலகில். வேலை முடித்தால் வீடு, வீட்டில் தன் தாயார் மட்டுமே உலகமென வாழ்ந்துவரும் பெண்ணுக்குக் கனவிலும் நினைத்திடாத பெரும் அதிர்ச்சி, தன் 23ஆம் வயதில் தாயின்மறைவு, பேரிடியாய்த் தாக்கியது.

செய்வதறியாமல் திகைத்து நிற்கும் வேளையில், கலங்கரை விளக்கமாக அமைகின்றது திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் வழிகாட்டுதல். சகநடிகராக மட்டுமில்லாமல் ஒரு குருவாக, தோழராக ஆதிக்கம் செலுத்துகிறார் எம்.ஜி.ஆர். கலைத்துறைச் சாதனைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, அரசியலுக்குள் பிரவேசிக்க நேரிடுகிறது; மறுபடியும் பிடிக்காத ஒரு பாதை.

வழிகாட்டவேண்டிய எம்.ஜி.ஆர் அவர்களும் தன் அரசியல் வாரிசு என யாரையும் குறிப்பிட்டு அறிவிக்காமல் இறந்துவிட, கடுமையான பயணத்தைத் தனியாக மேற்கொள்கிறாள். ஒரு பெண் என்றுமே ஆணின் அரவணைப்பில் இருப்பதன்றிப் பாதுகாப்பு வேறில்லை என்ற மனப்பான்மையுடைய சமுதாயம், தனித்து நின்று போராடிய அப்பெண்ணை ஏசியது, மானபங்கம் செய்தது, பழிச்சொல் கூறியது. அப்படியே வெறுத்தொதுக்க முற்பட்டவேளையிலும் தனிப் பெண்சிங்கமாகப் போராடித் தமிழக அரசியலில் தனக்கென்றொரு தனி இடம் பிடிக்கிறாள். தன் எதிரிகளுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்கிறாள்.

வாழ்வின் பாதி நாட்கள் தாயின் கனவுகளைநிறைவேற்றக் கடந்ததும், பின் தன் அறிவுரையாளரின் வழியைப் பின்பற்றி நடந்ததில் கடந்ததுமாக, தனக்கென ஒரு வாழ்க்கை வாழ நினைத்தபோதிலும், தான் தலைமையேற்ற கட்சிக்காகச் சிறைவாசம், தேர்தல் தோல்வியெனப் பல இன்னல்களைச் சந்தித்தாள்.

"உண்மையான, சுயநலமற்ற காதல் என்றொன்று இல்லை; இருப்பினும் அது எனக்கு ஏற்பட நேரவில்லை" என ஒரு தொலைக்காட்சிப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் செல்வி. ஜெயலலிதா. அப்பதிவில், "பல இக்கட்டான சூழல்களுக்கு நடுவில் மனவுறுதியுடன் போராடிய நானும், ஒரு நாள் கோழையாகக் கதவுகளுக்குப்பின் அழுதுகொண்டிருந்த பெண்தான்" எனக்கூறும்போது நம் கண்களும் குளமாகவே செய்கிறது.

தானெடுக்கும் முடிவுகளில் தீர்க்கமாகவும், பிறர் குறுக்கீட்டிற்கு அசராமலும், சுதந்திரமாகச் சிந்தித்துச் செயல்பட்ட ஆற்றல்மிக்கப் பெண்மணியாய்த் திகழ்ந்து, உற்றார் மட்டுமின்றி எதிர்த்தோருடனும் சேர்ந்து, முழு மாநிலத்தையே தலைவணங்க வைத்திருக்கிறார் செல்வி. ஜெயலலிதா.

வாழும்போது இகழ்ந்தும், மறைந்தபின் புகழ்ந்தும் பேசுவது இவ்வுலகில் புதிதல்ல; எனினும் தனித்துநின்று சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமான உதாரணமாய், கருத்துமாறுபாடுகளைத் தாண்டி, கோமளவல்லியாய் அவதரித்து ஜெயலலிதாவாய் ஆன தமிழகத்தின் இரும்புப்பெண்மணியின் உத்வேகமளிக்கும் சாதனைகளைச் சரித்திரத்தின் பக்கங்களில் எழுதுவோம்; இனிவரும் தலைமுறை பயன்பெறட்டும்!

Tagged in : My space, Ashwini Velmurugan, Tamil, Senji Laxme,

   

Similar Articles.