Loading...

Articles.

Enjoy your read!

இதுவும் கடந்து போகும்!

செப்டம்பர் மாதம், மாணவ-மாணவிகளுக்குள் பலவித உணர்வுகளை ஏற்படுத்திய மாதம்.  ஆம்! அவைதான் இணையவழி வகுப்புகள். வீடு என்னும் அரண்மனையில் ராஜா-ராணிகளாய் இருந்த மாணவ-மாணவிகளுக்கு, யார் கண்பட்டதோ தெரியவில்லை. அடுத்த மாதமே இணையவழி வகுப்புகள் ஆரம்பித்துவிட்டன. இச்செய்தியைக் கேட்டவுடன் நாம் அவர்களின் உணர்வுகளை உய்த்துணர முடிந்தது.

      ஆம். சிலரின் கண்களில் வியப்பு, ஏமாற்றம், அதிர்ச்சி ஆகியவற்றைக் கண்டோம். இன்னும் சிலர் மகிழ்ச்சி அடைந்தனர். முதல் கூறிய குணாதிசயங்களைக் கொண்டவர்கள் பெரும்பாலும் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர்கள். இரண்டாம்  குணாதிசயமான மகிழ்ச்சி என்பது படிப்பில் மட்டுமே முழுமூச்சாக இருக்கும் மாணவ மாணவிகளுக்கு உரித்தாகும்..

வீட்டில் என்னதான் நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் பலருக்கும் கல்லூரி வாழ்வை இந்த ஐந்தாறு மாதங்களில் இழந்து விட்டோம் என்ற ஏக்கம் உறுதியாய் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு நாள் இரவிலும் தூங்கும் பொழுது விடுதியில் நடந்த நகைச்சுவை       பேச்சுகளும் பட்டிமன்றங்களும் நம் நினைவில் பசுமரத்தாணி போல் இன்றும்   இருக்கின்றன. வாசகர்களிடம் நாம் மன்னிப்புக் கோருகிறோம். ஆம், நம் இணைய வழி வகுப்புகளைப் பற்றி விவாதிக்காமல் கல்லூரி வாழ்வை அசை போட்டுக் கொண்டிருக்கும், அல்லவா? அதற்காகத்தான்.

      சூரியன் எவ்வாறு ஒரு நாளை பகல்-இரவு என்று பிரிக்கிறதோ அதேபோல் இணையவழி வகுப்புகளுக்கும் நன்மைத் தீமை என்னும் இரு பக்கங்கள் உள்ளன. முதலில் நன்மையை சற்றுச் ஆராய்வோம்.’’ தொட்டில் பழக்கம் இடுகாடு(சுடுகாடு) வரைக்கும்’’ என்பது பழமொழி. அதுபோல, ஒரு செயலை ஓரிரு மாதங்களாக செய்யவில்லை என்றால் அச்செயல் நமக்கு மறந்துவிடும். இவ்வுண்மை கல்விக்கும் பொருந்தும். இவ்வுலகில் நாம் எதை மறந்தாலும் கற்பதை மறக்கக்கூடாது. அய்யன் வள்ளுவர் தம்முடைய தேன் (இரண்டு எழுத்து) போன்று தெவிட்டக்கூடிய குறளில் (இரண்டடி) பின்வருமாறு கூறுகிறார்;     {ஆகா..தேன்-இரண்டு எழுத்து-நாவிற்கு இன்பம்; குறள்-இரண்டடி-செவிக்கு இன்பம்} 

                 ‘’ தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

                   காமுறுவர் கற்றறிந்தார்’’

விளக்கம்;

தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு கற்று     அறிந்த அறிஞர் (ஆசிரியர்) மேன்மேலும் அக்கல்வியையே விரும்புவர்.

 

         இணைய வழி வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் அறியாமை என்ற இருளைக் கல்வி என்னும் ஒளியால் ஞானம் போன்று நம்மைப் பிரகாசிக்க வைக்கின்றனர். இணையவழி வகுப்புகள், பள்ளி அல்லது கல்லூரி சென்று படிக்கும் வகுப்புகள் ஆகிய இவ்விரண்டையும் நாம் பிரித்துப் பார்க்கக் கூடாது. நமக்கு ஞானத்தை அளிக்கக் கூடிய எந்த வகுப்பு ஆயினும் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே இணையவழி வகுப்புகள்  சிறந்தது என்று உறுதி கூறலாம்.

           நாம் பகல் இன்னும் வெளிச்சத்தில் இவ்வகுப்புகளைப் பற்றிய நன்மைகளை அலசி ஆராய்ந்தோம். அதுபோல் இரவு என்னும் இருட்டில்(தீமைகள்) சில நொடிகள் பயணம் சென்று வருவோம்.

           இணையவழி வகுப்புகள்  உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பல மாணவ மாணவிகளிடம் மடிக்கணினி, அலைபேசி போன்ற சாதனங்கள் இல்லை. அது ஒருபுறமிருக்க, பல பேருக்கு இணையதள வசதியும் நன்றாக இருப்பதில்லை. இவ்வகுப்புகள் மூலம் மாணவ-மாணவிகளுக்குப் பாடங்கள் தெளிவாகப் புரிவதில்லை. சிலர் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆதலால்,  இணையவழி வகுப்புகள் எடுக்கும் முன்பு மேற்கூறிய பிரச்சனைகளைக் கலைந்தால் இரவிலும் சந்திரன் ஒளி வீசுவது போல மாணவ-மாணவிகளின் வாழ்வும் ஒளிமயமானதாக இருக்கும்!

Tagged in : New Normal, Virtual World, Online Classses, My space,

   

Similar Articles.