நாட்கள் நகர்ந்தன முகம் பார்த்துப் பேசியும்
கொஞ்சும் குரல் கேட்டும்!
எதிர்பார்த்த வேளையில் எதிர்பாராமல் கிடைத்த இடைவேளை
முன்பதிவிற்கு முற்றுகையிட்டது.
இருந்தும் இறுதிப்பெட்டியில்
இறுதியாக ஏறினேன்
ஆம், அந்த முன்பதிவில்லா பெட்டியில் தான்
கூடை நிறையக் குவிந்து இருக்கும்
காஷ்மீர் வெள்ளை ரோஜா, அலைபேசியில் மழலை மொழியில்
உரையாடும் இராணுவ வீரர், ஐஸ்கிரீம் கேட்கும் 5 வயதுக் குழந்தை
அடுத்தப்பெட்டியில் வாங்கி தருவதாகக் கூறும் அப்பா.
ஆண்டு விடுமுறையில் வீடு திரும்பும் மாணவர்
அரை மணி நேரத்தில் வருவதாக அப்பாவிடம் அலைபேசியில்.
வீடு திரும்பும் உற்சாகத்துடன் சற்று இரைச்சலும் அதிகமாகவே இருந்தது
விழிகளின் தேடலுக்கு விடை கொடுத்தது அவள் புகைப்படம்.
கடிகார முள் அசைவைச் சரி பார்த்தபடி
அவள் நினைவு சூழ சற்று உறங்கினேன்.
திடீரென ஒரு சத்தம்! அந்த காஷ்மீர் வெள்ளை ரோஜாக்கள்
சிகப்பு ரோஜாக்கள் ஆகின
இரத்த வெள்ளம் சூழ்ந்தது.
மக்கள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டனர்
என் கண்களையும் இருள் சூழ்ந்தது.
சற்று நேரத்தில் கண்விழித்தேன்..
சுக்கு நூறான பெட்டிகள், சிதறிக் கிடக்கும் உடல்கள்
ஆங்காங்கே வெள்ளைப் படுக்கைகள்
அவளும் வந்தாள், ஆச்சரியத்தில் நான்..!!
அருகில் வந்தாள் கட்டி அணைத்தாள்
இருந்தும் எட்டி நிற்கிறேன்.
பின்பு தான் தெரிந்தது
அவளும் என் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறாள் என்று
அந்த மரணப் பட்டியலில்.
ஆம், அவள் உரையாடியது வெள்ளை படுக்கையில் இருந்த
என் உடலுடன் தான்.
ஐஸ்கிரீம் வண்டியைத் தேடிய குழந்தை அப்பாவைத் தேடுகிறது
அவசர ஊர்தியும் ஊடகமும் நிறைந்து வழிந்தன!
மத வேற்றுமை மொழி வேற்றுமை என்கிறார்கள்..
அன்று என்னவோ கடவுள் சிலையாகி
இரத்த தானம் செய்த மனிதர் கடவுள் ஆகினர்
பலரது விழிகளில் மனிதம் இருந்தது.
நிறைவேறா ஆசைகள் நிஜமாகாத கனவுகள்
காயம் கூட வலிக்கவில்லை அவள் கண்ணீர் வலிக் கூட்டுகிறது
விடைபெறுகிறேன்,
அந்த இறுதிப்பெட்டியில் இருந்து இறுதியாக.