இக்கல்வியாண்டின் லியோ சங்கத்து இறுதி நிகழ்வான “விடியல்-16”, 27.03.16 அன்று நிகழ்ந்தது.இக்கட்டுரை வடிக்க புனைவுகளோ, புரியாத வார்த்தைகளோ தேவை இல்லை. உணர்ச்சிகளின் பதிவிற்கு உவமைகள் அவசியம் இல்லை. ஒரு நாளின் விடியல் அந்நாளைத் துவங்க உந்துதலாகத் திகழ்கிறது. அது போல சூரியநகர் பகுதி குழந்தைகளின் வாழ்க்கைப்போக்கை ஊக்குவிக்க வருடா வருடம் நடத்தப்படும் நிகழ்வே, “விடியல்”.
ஞாயிற்றுக்கிழமையன்று வழக்கமாக எனக்கு எட்டறை மணிக்குத்தான் விடியும். ஆனால், லியோக்கள் (லியோ சங்கத்து உறுப்பினர்கள்) காலை 6 மணி முதல் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சிறுவர்களின் குறும்புத்தனத்தையும் மழலை குணத்தையும் ரசித்தவாறு அவர்களுக்கு போட்டிகள் நடத்த ஆவலோடு அயராது அலைந்து கொண்டிருந்தனர்.
விழாவை திரு.செம்மல் அவர்கள் தன் தன்னம்பிக்கை உரையோடு துவக்கி வைத்தார். துவக்க விழாவைத் தொடர்ந்து, அக்குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. கற்பனைத் திறன், சிந்திக்கும் திறன் ஆகிவற்றை வளர்க்கும் விதம் நிறைய போட்டிகள் நடந்தேறின.
பதில் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த ஒரு சிறுமிக்கு, சிறுவன் ஒருவன் தனக்கு தெரிந்த பதிலை சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்சி, நெகிழ்ச்சியுற செய்தது. உலகத்தைப் போட்டியாக மட்டும் எண்ணும் மாந்தர்களின் மத்தியில், இதுதான் வாழ்க்கை என எளிதாகக் கூறிவிட்டுச் சென்றாள், அச்சிறுமி.
UKG படிக்கும் மாணவன் ஒருவன் தாமாய் சித்தரித்து ஒரு கதை சொன்னான். அக்கதையில் அப்படி ஒரு கற்பனைத்திறன் இருந்தது. படைப்பாற்றல் குழந்தைகளிடையே கொட்டிக்கிடக்கிறது. அதை வெளிக்கொணரவே இது போன்ற மேடை. குழந்தைகளுக்கு வண்ணத்தீட்டுக் கோல்கள்(crayons) வழங்கப்பட்டன. அதை அந்த மாணவன் தொலைத்துவிட்டான். பிறகு அவன் கண்கள் கரைய துவங்கின. இதைக் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அது சின்ன பொருளாய் இருக்கலாம். ஆனால் அவன் வயதுக்கு அது உன்னத பொருளே. அவன் வீடு செல்வதற்கு முன், மற்றொரு டப்பாவை வாங்கி அவனிடம் கொடுத்தேன். “தம்பி, பத்தரமா வெச்சுக்கோ. தொலச்சுறாத”. அக்காட்சி ஒரு இரானிய படம் பார்ப்பது போல் இருந்தது. பொதுவாய் இரானிய படங்களில்தான் ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் சின்ன சாகசங்களைப் படமாக எடுப்பார்கள். அந்தப் பையனுக்கு அந்தச் சின்ன பொருளை பெற்றது பெரிய வெற்றி.
மதிய உணவிற்குப் பின், ‘’நீமோவைத் தேடி’’ (finding nemo) திரைப்படம் குழந்தைகளுக்காகத் திரையிடப்பட்டது. சிறுவர்களை விட பெரியவர்களின் நினைவுகள், தேடிச் சென்று கிளறப்பட்டன. அனைவரும் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
இறுதியாக, பரிசுகள் வழங்கப்பட்டன. ஜெயித்தவர்களுக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் பரிசு வழங்கியது எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது. ஜெயிப்பது மட்டும்தான் வெற்றியா என்ன?? இவ்வாறாக.. நிகழ்வை சிறப்பாய் முடித்து விட்டு, லியோக்களின் கலந்துரையாடல் நிகழ்ந்தது. நிகழ்வு முடிந்தாலும், “அண்ணே, அடுத்த வருஷம் பாப்போம்.” என்று குழந்தைகள் கூறிச்சென்ற காட்சி கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.