Loading...

Articles.

Enjoy your read!

என் இனிய தனிமையே...!

  இந்த  லாக்டவுனியில்  நான்  படித்த,  மிகவும்  அதிர்ச்சி  அளிக்கும்  செய்தி  என்னவென்றால்,  ஒருவன்  தன் வாழ்க்கையில்  பணம்,  புகழ்,  அழகு  மட்டும்  இல்லாமல் இன்ஸ்டாகிராமில்  பத்து  மில்லியன்  பாலோவெர்ஸ்  வைத்துக்கொண்டு   தனிமையை உணருகிறான்,  தப்பான  முடிவை  நோக்கிச்  செல்கிறான்  என்றால் இதை விட   சுயஉணர்தல்  வேறு  ஒன்றும்  நமக்கு  இருக்க  முடியாது.   நம்மைச்  சுற்றி  நூறு  பேர்  இருப்பதை விட,  நமக்காக  ஒருவர்   உண்மையாக  இருந்தாலே   போதுமானது  என்று  முடிவு  செய்தேன்.  
அந்த  ஒருவர்  சுஷாந்த்துக்கு  இருந்திருந்தால்  அவர்  நம்முடன்  இன்று  இருந்திருப்பார்  என்று நினைத்தாலே  நெஞ்சம்  வலிக்கிறது !
குறைந்தபட்சம்  நம்  உறவினர்களுக்கு,  நண்பர்களுக்கு,  தெரிந்தவர்களுக்குக்  கூட,  நாம் அவர்களுக்காக  இருக்கின்றோம்  என்ற  உணர்வை  ஏற்படுத்த வேண்டும்.   அது  அவர்களுக்குப்  பல  மடங்கு  தன்னம்பிக்கையையும்  உற்சாகத்தையும்  ஊட்டும்.  தவறான எண்ணங்களை  நினைக்க  விடாமல்  தடுக்கும்.

 
தனியாக இருப்பதற்கும்,  தனிமையில்  இருப்பதற்கும்  நிறைய  வித்தியாசங்கள் இருக்கின்றன. சிலர்  தங்களைச்  சுற்றி  நிறைய  மனிதர்கள்  இருந்தும்  தாங்கள்  தனிமையாக  இருப்பதாகவே  உணர்வார்கள்… அது  ஏன் ?  நான் தனிமையை  உணர   காரணங்களை  யோசித்தேன்.  அதில் சில...


தோற்றம்:
என்னுடைய தோற்றமானது, மற்றவர்களின் தோற்றத்துடன் ஒப்பிடும்போது வேறுபட்டால், 'நான் மற்றவர்கள் போல் இல்லை, என்னிடம் இந்தக்  குறையிருக்கிறது'  என்ற உணர்வும், எதிர்மறையான எண்ணங்களுமே  என்னைத் தனிமைக்குள் தள்ளிவிடுகிறது. மற்றவர்களோடு  இயல்பாக பழக  விடாமல்  செய்ததது.  நம் வாழ்க்கையில்  மாற்றவேண்டிய 1000-கும் மேற்பட்ட விஷயங்கள் இருந்தும், கடவுள் தந்து மாற்றமுடியாத  ஒரு விஷயத்துக்காக மனிதர்கள் மனம் கலங்குவது ஏன் என்ற எண்ணம்  என் மனதில் தோன்றியது ? !  அப்போது  தான்  ஒரு  முடிவுக்கு  வந்தேன் . அழகு  என்பது  முகத்தில் , வெளித்தோற்றத்தில்  மட்டுமே  சார்ந்தது  இல்லை  என்பதை  நாம்   உணர்ந்தாலே  போதும்  என்று . 


அனுபவங்கள்:
மோசமான அனுபவங்களும் தனிமை உணர்வை ஏற்படுத்தி விடக்கூடும். அனுபவங்கள் தந்த அச்சம், நினைவில் நிற்கும் துரோகங்கள், அவமானங்கள், நிறைவேறாத எதிர்பார்ப்புகள் என்னைத்   தனிமையில்  இருக்க வைத்தது .
 பிறரிடம் சொல்லும் ரகசியம் காக்கப்படாமலே போகலாம், நட்பாகி துரோகம் செய்த அனுபவம் மீண்டும் கிடைத்து விடுமோ என்ற  எண்ணங்களே  என்னைத்  தனிமைக்குத்  தள்ளியது.  ஆனால்,  இந்த அனுபவங்கள்  இல்லாமல்  உலகில்  யாருமே  இருந்திருக்கவே  முடியாது   என்பதை  உணர்ந்தேன். அது  நடந்துவிட்டது  என்று  கவலைப்படுவதை  விட்டுவிட்டு,  இந்த  அனுபவம்  மீண்டும்  நடக்காமல்  பார்த்துக்கொண்டேன் .
 இந்தப் பழைய சோகமான அனுபவங்களை  மறக்கடிக்கக்கூடிய  அளவுக்கு  நல்ல  அனுபவங்கள்  ஏற்பட்டால்  இந்தப் பிரச்சனைக்குத்  தீர்வு கிடைத்து விடும். அந்த நல்ல அனுபவங்களைத்  தேடி சென்றேன் .


நான்  தனிமையாக  உணரும்போது எனக்குத்  தேவையில்லாத விஷயங்கள் தோன்றின .  அதில்  சில :
* காரணமே இல்லாமல் சோகமாகவே இருப்பது.
*ஒரு  விஷயத்தை  யாரிடமாவது பகிர வேண்டும் என்று நினைத்து, கடைசியில் பகிர யாரும்  இல்லாமல் அந்த விஷயத்தை  விட்டுவிடுவது .
* என்னை யாருமே புரிந்து  கொள்ளவில்லை  என  நினைத்து  வருத்தப்படுவது.
* மற்றவர்கள்  நம்மை  விலக்கி வைத்திருப்பதாக  நினைப்பது.


 அப்போதுதான்  உணர்ந்தேன்,  நம்மைக் கரையேற்ற யாரேனும் படகோடு வருவார்கள் எனக் காத்திருக்காமல், எதிர் நீச்சலடித்துக்  கரைச் சேர முயலவேண்டும்  என்று.  தனிமையும் ஒரு வைரஸ் போன்று தான். ஆனால்,  மருந்தை  என்னிடமே வைத்துக்கொண்டு   மற்றவர்களிடம்   தேடுவது   தான்   வருத்தத்தை   அளித்தது  எனக்கு.
தனிமையாக  உணர்வது,  உறவை  இன்னும்  இணைக்கமாக  வைத்து  கொள்ள  உதவும்  சிக்னலே.  அது  பெரிய  பிரச்சனையே  இல்லை  என்பது  மனதுக்கு  எட்டியது .


வெற்றிடத்தைக்  காற்று  நிரப்புவது போல், என்றாவது  என்  மனதில்  இருக்கும்  வெற்றிடத்தை  யாரேனும்  நிரப்புவார்கள். அதுவரை, என்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு   அன்பு செலுத்திக் கொண்டே இருப்பேன்.  தனிமை வெறுமை அல்ல.... இனிமை  என்பதை  நானும் உணர்வேன்.  இந்த உலகில் எல்லோருக்கும்  முதல் இடம் வேண்டும் அல்லவா?  முதல் இடத்தில் வராதவர்கள் எல்லாம் தோல்வி உற்றவர்கள் இல்லை.  உங்கள் முயற்சியே அதற்கு விடை.  உங்கள்  கவலை அல்ல...


இப்படியெல்லாம்  என் வாழ்க்கையில் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்...  இருக்க முயல்வேன் !!!...
நீங்களும் முயலுங்கள்!  வாழ்க்கையை  இனிமையாக்க வாய்ப்புகள்  நிறைய  உண்டு...!

Tagged in : MySpace, Lockdown Diaries, Solitude, Happiness,

   

Similar Articles.