நீல நிற வானுயரக் கட்டிடம், கனவுகளோடு பறக்கும் மனிதப் பட்டாம்பூச்சிகள், கமகம வாசனையுடன் நம்மை இழுக்கும் சிறிய கபே, அங்கே சுடச்சுட மேகி, குளு குளு ஐஸ் டீ என்று சுவைத்துக் கொண்டிருக்கும் இளமைப் பட்டாளம், தமிழ் மணத்தோடு தமிழ்பிரியர்களை வரவேற்கும் நூலகம், கண்களில் பசி உணர்வோடு உறங்கிக் கிடக்கும் வாயில்லா ஜீவன், சிவப்பு நிற டேக்குடன் (Tag) மணிக்கட்டைப் பார்த்துக் கொண்டு வேகமாக வகுப்பறைக்குள் நுழையும் சீனியர் அண்ணா.
இவையெல்லாம் படிக்கும் போது உங்கள் மனக்கண்ணில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் Knowledge Park இன் காட்சி தான் வந்துப் போகும் என்பதில் சந்தேகமில்லை.
தேர்வு நேரத்தன்று அறிவிப்புப் பலகையைச் சுற்றி ஈக்கள் மொய்த்துக் கொண்டிருப்பது போல மாணவர்களின் கூட்டமும் கடைசி நிமிடத்தில் கையில் பேனா பிடிக்க வேண்டியவன் புத்தகத்தை சுமந்து கொண்டிருந்த காட்சி என்று KP யின் நினைவுகள் என் மனதிற்குள் நிழலாடின.தினந்தோறும் புன்னகையோடு உணவு தரும் மெஸ் அண்ணா, காக்கிச்சட்டையுடன் காவல் காக்கும் தாத்தா, கேன்டீனில் டோக்கன்தரும்அண்ணா, இவர்களையெல்லாம் நான் கடைசியாக சந்தித்தது எப்போது?
வகுப்பறையில் நண்பர்களின் குறும்புகளும் கரும்பலகையில் ஆசிரியரின் கிறுக்கல்களும் ATM வாசலில் பணத்திற்காக வரிசையில் காத்திருப்பது போல கேன்டீனில் உணவிற்காக வரிசையில் காத்திருந்த நிமிடங்களும் எங்கே போனது?
இரவு ஒரு மணி வரையும் விளக்கெரியும் விடுதியும் வள்ளுவனின் வாசனைக் கொண்ட குறளோடு திறக்கும் கதவுடைய நூலகங்களும் நான் கடைசியாக பார்த்தது எப்போது?
என் ஜன்னலின் வழியே நோட்டமிட்ட இந்த காட்சிகளெல்லாம் என் கண்ணில் பிம்பமாக வந்து போனது.
முதல் வருட மாணவர்கள் வீட்டுக்கவலையில்(Home sick) இருக்க நானோ கல்லூரிக் கவலையில் (College sick) மூழ்கிவிட்டேன்.
"நீ வருவாய் என" என்று எனது இடத்தை எதுவும் ஆக்கிரமித்து விடாமல் எனக்காக வெறிச்சோடி காத்திருக்கின்றன வகுப்பறையில் உள்ள முதல் பெஞ்ச்சும் விடுதி அறையும்.
நினைவெல்லாம் நித்யாவைப் போல என் நினைவெல்லாம் என் கல்லூரித் தாயின் மீதே.
ஒரு மாதம் கடந்த நிலையில் அழுக்குத் துணி மூட்டையுடன் தன் தாயை ஆவலுடன் காண வரும் மகனைப் போல நன்றாக மடித்து அயர்ன் செய்த துணி மூட்டையுடன் என் கல்லூரித் தாயைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் நான்!