கனவு கண்டேன் நான் ஒரு கனவு கண்டேன் !
சொல்லுதற்கரிய கனவு தானோ அது என்றுணறாதபடி
வெல்வதற்கு முடியாமல் தினம் தினம் எனை
அவதியில் ஆழ்த்திச், செழிந்த பித்தனாக்கிய
மாயமான அக்கனவை நான் கண்டேன்.
கவிக்கு வீரம் சேர்க்கும் வல்லினம் போலே
விரிந்த கருமுடியில் கலந்த நரையால் வீரம்
மெருகேறிய ஒரு முதிர்ந்த பெண்ணை நான் கண்டேனே !
பல கிழியல் கொண்ட மக்கிய சேலை உடுத்திய
அந்த முதிர்ந்த பெண்ணின் அழகு இன்னும்
மக்காமல் ஒளிர்வதையும் நான் கண்டேனே !
எழுத்தை இழந்த சொல்லின் அவலம் பொருந்திய
ஓர் ஓசையுடனே, அவள் கை விலங்கின் ஒலி
கலந்து ஒரு புதுச் சுருதி உண்டானதே!
அச்சுருதி கொண்டே அவள் அழும் தொனியில்
எதிரில் முண்டாசு கட்டிய ஒருவனிடம் பேசத் தொடங்கினாள் !
"செம்புலவர் பலர் மின்னிய சொல் வன்மையும்
செங்குருதி தந்தப் பல வீரர்களின் வலியையும்
எண்ணிலடங்கா உயிர் பலியையும் விளைவாகக் கொண்டு
பிறந்த எனது வயதோ எழுபத்து மூன்று !
என் பிறந்த ஊரோ பாரதம் எனும் தனி உலகம்.
இதில் சாதி மதம் எனும் விஷங்களும் இரு உலோகம்.
அவை கொண்டு உருவான என் ஒரே அணிகலனான
இறுக்கமான எனது கைவிலங்கோ ஒரு தீராச் சாபக்கேடு.
முப்பது கோடி முகங்களின் இலட்சியத்தையும்
கோடிப் பெருகிய பின் நேர்ந்த அலட்சியத்தையும்
நினைவில் கொண்டு இந்நாட்டில் உலாவும் என் பெயரோ சுதந்திரம்." - என
தன்னுரை முடித்தவள் கண்ணில் நீர் ததும்பவே
பெருங்கோபங்கொண்டவள் கல்லில் கை விலங்கை
அடித்துக்கொண்டு " சாவிச் சாவி" எனக் கதறவே
அதில் பொறிந்த தீயின் ஒளியில் சட்டென விளங்கியது
எதிரில் நின்ற முண்டாசு மனிதன் பாரதி என்று !
ரவுத்திரம் ஒரு தீப்பிழம்பாய்க் கொந்தளிக்கவே
கடுங்கோபக்கனலில் மூழ்கிய பாரதியின் சிவந்த முகமே
என் கனவைக் கலைத்து விட்ட பாதகம் அதனை யாரிடம் சென்று சொல்வேன் !
இந்தக் கடும் கனவு என்னில் தினமும் நிகழும் கொடுமை தான் என்ன !
ஏன் இந்தக் கனவு என்னில் எனும் மனச் சோர்வே
எனைக் கண்டறியச் செய்தது ஒரு நாள்
அவள் சாவி எனக் கதறியது நம் குற்ற உணர்வே .
சுதந்திரத்தின் நிலை அறியாதிருத்தல் நமது மடமை.
அதைக் கட்டியுள்ளச் சாதி எனும் விலங்கை அவிழ்ப்பது நம் கடமை.
விடுதலைத் தாகம் தனில் தவித்துக் தள்ளாடியவர்களுக்குக்
கிட்டிய சுதந்திரம் ஒரு கானல் நீரே !
இவ்வெண்ணம் எனை வாட்டிக் கொன்று என்னுள்
ஒரு குற்ற உணர்வு பிறக்கும் வரை இக்கொடுங்கனவு நீடிக்கட்டுமே !