அன்று அக்னி நட்சத்திரம். ஆம்! அந்தக் கோடைக்காலத்தின் கொடூரமான நாள் தான். வெயில் 101°-யைத் தாண்டி வெளுத்துக் கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் தாங்காமல், தொண்டை வறண்டு போக, வியர்வை துளிகள் முகம் முழுவதும் வழிந்தோட, அசௌகரியமான சூழலில், நிழலைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் அவன். இந்த வேதனையைக் கடந்த ஒரு மாத காலமாய் அனுபவித்து வருகிறான். கதிரவன் மெல்ல மெல்ல அவனது ஆற்றலை உறிந்தெடுக்க, சோர்வின் உச்சிக்குச் சென்றவன் அப்படியே அமர்ந்து விட்டான். கண்கள் இருள, இதிலிருந்து விடுபட என்ன தான் வழியோ என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
இயற்கை தன்னுள்ளே ஒளித்து வைத்திருக்கும் விந்தைகள் ஏராளம். அதில் ஒன்றாக நான் கருதுவது, 'தென்மேற்குப் பருவக்காற்று'. அரபிக்கடலில்(தென்மேற்கு) தோன்றி, வடகிழக்குத் திசையில் பயணிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையால் தடுக்கப்பட்டு, கேராளவிற்குக் கன மழையையும், தமிழகத்திற்குச் சாரலையும் தருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் ஆரியங்காவு கணவாய் எனச் சொல்லப்படுகின்ற இடத்தில் தான் அந்த அதிசயம் உள்ளது. அது தான், "குற்றாலம்". 'அருவிகள் நகரம்' என அடைமொழி பெற்ற ஊரில் சுற்றும் திசையெல்லாம் அருவிகள் தான். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒரு முறையாவது சென்றுவிட வேண்டும் என்று நினைக்கும் இடம். பலவகை அரிய மூலிகைகளும் கிடைப்பதால், 'மூலிகை வனம்' எனும் பெயரும் உண்டு.
அடர்ந்த காட்டின் உள்ளே தோன்றி, மூலிகைச் செடிகள் வழியாகத் தனது பயணத்தைத் தொடர்ந்து, இறுதியாக 30 மீட்டர் உயரத்தில் இருந்து ஆர்ப்பரிக்கும் அருவியில் குளிக்க யாருக்குத் தான் ஆசை இருக்காது?!
இயற்கையின் விந்தை எனக் கூறினேன், இதில் என்ன விந்தை என்றால், 'அக்னி நட்சத்திரம்' முடியும் சமயத்தில் சரியாகக் குற்றால சீசன் ஆரம்பித்து விடும். அதே போல், சீசன் ஆரம்பித்த உடன் அவனும் கிளம்பினான் குற்றாலத்திற்கு. செல்லும் வழியெங்கும் வீசிய சாரல் கலந்த காற்றிலேயே பாதி மனம் குளிர்ந்து விட்டது. குற்றாலத்தைச் சென்றடைந்த பின், வரிசையில் நின்று அருவியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான். சில்லென்று மேனி சிலிர்க்கும்படி கொட்டுகின்ற நீரில் குளிக்கும்போது ஏற்படும் நிம்மதியை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட இயலாது. ஒவ்வொரு சீசனுக்கும் குறைந்தது ஐந்து முறையாவது சென்று விடுவான். ஆனால் இன்று, கொரானா நம் அனைவரின் கால்களையும் கட்டிப்போட்டு விட்டது.
"அகமும் புறமும் குளிரச்செய்யும் அருமருந்தே குற்றாலம்!!".
அந்த 'அவன்' - நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் யாருக்கு வேண்டுமானாலும் பொருந்தும்.
- நெல்லை மைந்தன்!