Loading...

Articles.

Enjoy your read!

படிப்போம் பயணிப்போம்

பயணிப்பது பலருக்கும் பிடித்தமானவற்றுள் ஒன்று . பொழுதுபோக்கிற்காகப் பயணிப்பர் சிலர்; சுயமகிழ்ச்சிக்காகப்  பயணிப்பர் சிலர் ; மனஅமைதிக்காகப் பயணிப்பர் சிலர் ; சேருமிடம் தெரியாமலேயே பயணிப்பவர்கள் கூட இருக்கிறார்கள் . ஆனால் , இவர்களுக்கு  மத்தியில் , அத்தி பூத்தாற்போல எஸ்.ராமகிருஷ்ணன் என்னும் உதிராத மலர் பூத்திருந்தது .ஆம்  . தன் வாழ்க்கை முழுவதும் வரலாற்றைத்  தெரிந்து கொள்ளவும் , புதிய செய்திகளை அறிந்து கொள்ளவுமே உலகம் முழுதும் பயணித்தவர் , நமது ஐயா எஸ். ரா அவர்கள் . 

மாணவர்களிடையே அதிலும் முக்கியமாக இளைஞர்களிடையே உரையாடுவதில் மகிழும் ஐயா அவர்கள் , கடந்த சனிக்கிழமை உரையாடியது நம்மிடத்தில் . நமது மாதவம் குழு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் கருவே எழுத்தாளர் எஸ்.ரா ஐயாவின் சிறப்புரை 

எந்தவொரு ஆர்ப்பாட்டமுமின்றி , அரங்கினுள் நுழைந்து ,நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருந்தபோது ,எழுத்தாளரின் எளிமை நன்கு புலப்பட்டது . தனது புத்தக வாசிப்பின் வரலாற்றில் தொடங்கிய அவர், ஒவ்வொரு சிறுகதைகள் வாயிலாக , உலக வரலாற்றை ஒப்புமைப்படுத்தியது அனைவரையும் வியக்க வைத்தது . பெரும்பாலான சமயங்களில் , தனது வாழ்வில் நிகழ்ந்தனவற்றையே முன்வைத்த ஐயா அவர்கள் , தன் வாழ்நாளில் பல கேள்விகளுக்கு விடை காண முயன்றிருக்கிறார் . பல்வேறு தருணங்களில் , தான் சந்தித்த நபர்களிடம் , பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார் . விடை கிடைக்கும்வரை விடாமுயற்சியோடு போராடும் குணம் , இயற்கையிலேயே அவருக்கு இருந்திருக்கிறது .

 இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை தனக்கே உரித்தான, யதார்த்தத்தையும்  நகைச்சுவையையும் கலந்து , எங்களின் ஆறாம் அறிவை சிந்திக்க வைத்தார் . ‘அமைதிக்கான புனித நடைபயணம்’ மேற்கொண்ட சதீஷ்குமார் என்னும் ராஜஸ்தானி இளைஞனின் வரலாற்றை மேற்கோள் காட்டி ”இளைஞர்கள் நினைத்தால், எதையும் செய்யத் துணிவர்“, என்று ஊக்கமளித்த விதம், அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது . 

நமது வாழ்வில் எந்தவொரு செயலையும் , மற்றொருவர் சொன்னார் என்பதற்காகச் செய்யாமல் , நமது முழு ஈடுபாட்டுடன் , என்ன செய்கிறோம் என்பதை முழுமையாக அறிந்துகொண்டு செய்ய வேண்டுமென்ற அன்புக்கட்டளையுடன் சிறப்புரையை நிறைவு செய்தார் ஐயா அவர்கள் . மேலும் , கலந்துரையாடல் நேரத்திலும் , கேள்விகளுக்கு நிதானமாக விரிவாக பதிலளித்த நேரத்தில் , எங்கள் மனதில் நீங்கா  இடமும்  பெற்று விட்டார். 

மாதவம் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியைப் பற்றி , கலந்துகொண்டவர்களிடம் கேட்டபொழுது , பல்வேறு நேர்மறையான கருத்துக்களையும் , இதே போன்ற அடுத்த நிகழ்ச்சிக்காகக் காத்திருப்போம் என்றும் கூறிச் சென்றனர் . நிகழ்ச்சியின் முடிவில் , பல இளைஞர்களை ஊக்கப்படுத்திய மகிழ்ச்சி , எஸ்.ரா ஐயாவிற்கும் , நமது மாதவம் குழு நண்பர்களுக்கும் கிடைத்தது .

“அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதுதானே , உண்மையான மகிழ்ச்சி !”

Tagged in : My space, Nisha Ashok, Reviews, Abu Thahir, Tamil, சுரேந்தர் ரவி,

   

Similar Articles.