Loading...

Articles.

Enjoy your read!

உரையாடல் with ராஜ்மோஹான்

நீங்களும் பொறியியல் மாணவர் தான்; உங்களுடைய கல்லூரி கால வாழ்க்கை எப்படி இருந்தது?
எங்க வீட்ல viscom சேர சொன்னாங்க. நான் தான் அடம்புடிச்சு 2003-ல சாய்ராம் கல்லூரியில சேர்ந்தேன். முதல் இரண்டு நாள் ஜாலியா இருந்தது, அதுக்கப்பறம் கொஞ்சம் strict-ஆ இருந்தாங்க. புடிச்ச விஷயங்களெல்லாம் பண்ணக் கூடாது-னு சொன்னாங்க. ‘’நா அப்படியே ஷாக் ஆயிட்டேன்’’. எங்க கல்லூரியில என்னைத் தவிர எல்லாருமே நல்லா படிப்பாங்க. நாலு வருசமும் படிக்கிறத தவிர மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். என்னை ஒரு நல்ல கலைஞனாக நான் வளர்த்துக் கொள்ள, என்னோட கல்லூரியும், ஆசிரியர்களும் ரொம்பவே உருதுணையா இருந்தாங்க. என்னோட வகுப்புல பெண்கள் தான் அதிகம், ஆசிரியர்கள் கூட முக்கால்வாசி பெண்கள் தான். அதனால, ஜாலியா ஊர்சுத்திக்கிட்டு, தமிழ் படத்துல வர்ற சசிகுமார் மாதிரி செல்லப்பிள்ளையா வளர்த்தாங்க. நானும் நிறைய culturals-லாம் கலந்துக்க ஆரம்பிச்சேன்.

இன்று பல இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்குறீர்கள். வாழ்வில் உங்களை நீங்களே அடையாளம் கண்டுகொண்ட தருணம் எது?
சின்ன வயசுல எல்லாருக்குமே நிறைய குட்டி குட்டி பிரச்சனைகள் வரும். அப்போ, என்னோட வயதையொத்த மற்ற பசங்க எல்லாரும் பயப்பட ஆரம்பிச்சாங்க. ஆனால் நான், பிரச்சனைகள் தேடுபவனா இல்லாம, தீர்வுகள் தேடுபவனா எதாவது பண்ணுவேன். அதை நண்பர்களும் குடும்பத்தாரும் சுட்டிக்காண்பிச்சாங்க. நானும் ஒரு நாட்டமை தோரணை-ல ‘எங்கடா பஞ்சாயத்து நடக்கும்’னு சுத்த ஆரம்பிச்சேன். இப்போதுவரை, எங்க அலுவலகத்துல கூட, யாரவது வீட்ல திருடு போனால் கூட, போலீஸுக்கு கால் பண்றதுக்கு முன்னால எனக்கு கால் பண்ணுவாங்க. இது எல்லாமே, பள்ளிப்பருவத்துல மைதானங்கள் போன்ற இடத்துல நடந்த சின்னச் சின்ன பிரச்சனைகள தீர்க்க ஆரம்பிச்சதுல இருந்து தான் தொடங்கியது. வாழ்க்கையில நம்ம வேலைகள் மட்டும் பார்த்துட்டு இருக்காம, மத்தவங்களுக்கும் உபயோகம இருக்கனுங்குற அந்த திருப்புமுனையான சிந்தனை பள்ளிப் பருவத்துல தான் வந்தது-னு நினைக்குறேன்.

நீங்கள் நிறைய கல்லூரியில் சென்று பேசுகின்றீர்கள். உங்களுடைய பேச்சைக் கேட்டு ஒரு தாக்கம், ஒரு உத்வேகம் வந்ததென்று மாணவர்கள் கூறும் பொழுது எவ்வாறு உணர்வீர்கள்?
    நான் மாணவர்களிடம் பேசும் நோக்கம்; எனக்கு தெரிந்த சிலவற்றை அவர்களோடு பகிர்ந்துவிட்டு, தெரியாத பலவற்றை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது. இதை நான் நிறைய முறை கூறியிருக்கிறேன். உங்களுடைய கல்லூரி வந்தபோதும் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

உங்களுடைய வீடியோக்களுக்கு நிறைய கடுப்பேத்தும் கருத்துரைகளை(comments) யூ டியூபில் காண முடிகிறது. அவற்றை எவ்வாறு கையாளுகிறீர்கள்?  
    அய்யோ.. அதெல்லாம் செம்ம ஜாலியா இருக்குங்க. அதெல்லாம் தான் ஒரு உந்து சக்தி தரும். அலுவலகத்துல வேலையில்லாத நேரத்துல, சாப்பிடற நேரத்துல-லாம் படிச்சு சிரிச்சுட்டு இருப்போம். நான் நடிக்காத சில விடியோக்களுக்கும் என்னைத் திட்டி கருத்துரைகள் இருந்தது. அப்போதான் தெரிஞ்சது, விடியோ-ல நான் இருக்கேனோ, இல்லையோ.. என்னைத் திட்றத ஒரு கடமையாவே பண்ணிட்டு இருக்காங்க-னு. போகப்போக அதெல்லாம் பழகிருச்சு.

 

உங்களுடைய சில விடியோக்களில் ‘வணக்கம். நான் தான் உங்கள் சென்னை பேசுகிறேன். நான் தான் உங்கள் 500 ரூபாய் நோட்டு பேசுகிறென்’ அப்படியெல்லாம் சொல்வதன் காரணம்?
    உங்களுக்கு இரவு நேரத்துல ஒரு கால் வருது.’வணக்கம். நான் உங்கள் அண்ணா பல்கலைக் கழகம் பேசுகிறேன்’னு சொன்னா, நீங்க கட் பண்ணுவீங்களா? ஒரு ஆச்சர்யம் இருக்கும்ல. அந்த ஒரு விசயம் தான். கவன ஈர்ப்புக்காக பண்றது.

 

நகைச்சுவை கலந்த விடியோக்களில் ஆரம்ப காலங்களில் வலம் வந்து கொண்டிருந்தீர்கள், திடீரென்று மிகவும் சமூக அக்கறையுள்ள, துணிச்சலான விடியோக்களில் உங்களைக் காண முடிந்தது. நகைச்சுவையிலிருந்து சமுக கருத்துக்கள் சொல்லும் விடியோக்களுக்கு மாற காரணம்?
    விஜய் டிவியில் ‘தமிழ்ப் பேச்சு, எங்கள் மூச்சு’ என்கிற போட்டியின் இரண்டாவது சீசனில் வெற்றி பெற்றேன். நான் ஒரு பேச்சாளன். சின்ன வயசுல இருந்தே தமிழ் மேல ரொம்ப ஆர்வம். இலக்கிய புத்தகங்கள் அதிகமா படிச்சிருக்கேன். நிறைய புத்தகங்கள் தேடித்தேடி படிச்சுட்டே இருப்பேன். ஒரு புத்தக காதலன்னு சொல்லலாம். முதல்-ல நகைச்சுவையான விடியோக்கள் தான் பண்ண ஆரம்பிச்சோம். நல்லாப் போச்சு. ’ஓடுகிற இடத்தையெல்லாம் ஒரு நதி மாற்றிக் கொண்டே செல்லும்’-னு சொல்வாங்க.அதுபோல, காவிரிப் பிரச்சனை வந்தப்போ, என்னோட ஸ்டைல்-ல ஒரு விடியோ பண்ணோம். அது எல்லாருக்கும் ரொம்ப புடிச்சுருச்சு.
 

ஒரு இளைஞராக, தமிழ்நாடு பற்றி உங்கள் கருத்து என்ன? எவ்வாறு நாம் இதை முன்னேற்றலாம்?
    தமிழ்நாடு ஒரு மோசமான நிலைமையில இருக்குனு எல்லாரும் வருத்தப்பட்றாங்க. என்னைக் கேட்டால், ‘ஒரு பள்ளம் வந்தால் தான் மேடு வரும்’. இருநூறு வருசத்துக்கு முன்னால் ஒரு மிகப்பெரிய பஞ்சம் வந்தது. வெள்ளைக்காரர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பஞ்சம். ஆனால், அந்த பஞ்சம் வந்த பின்பு தான், உணவுடைய முக்கியத்துவம் நிறைய பேருக்கு புரிய ஆரம்பித்தது. அந்தப் பஞ்சத்தின் பொழுது தானியங்களை தமிழ்நாடு முழுதும் கொண்டுசெல்லப் போடப்பட்ட சாலை தான் Great southern trunk road. இன்றைக்கு தென் ஆப்பிரிக்காவிலுள்ள கேப்டவுனில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம். ஒரு குடும்பத்துக்கே சில கேலன் தண்ணீர் தான் கிடைக்கிறது. கேட்க மிகவும் கஷ்டமாக இருந்தாலும், இதன்பின்பு தான் பெரிய எழுச்சி வரும். தமிழ்நாடு இப்போது மோசமான நிலையில் இருப்பது எல்லோரும் அறிந்தது. ஆனால்,இந்த நிலையிலிருந்து நாட்டைக் காப்பற்ற தூரத்து வெளிச்சமாய் தெரிவது இன்றைய மாணவர்கள்,

நாளைய தலைவர்களாகிய நீங்கள் தான். உங்கள் மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கிறேன்.

Tagged in : Tamil, Saivarshini Ravichandran, Bhargav Krishnamurthy,

   

Similar Articles.