சில வருடங்களுக்கு முன்பு, காடுகள் மிக வளமும் செழிப்பும் பெற்று அழகாக, பல்லுயிர்களை வளர்க்கும் காப்பகமாக விளங்கியது. அமைதி நிறைந்த இந்தப் பூஞ்சோலையில் முரண்பாடான செயல்கள் வந்துவிட்டது. இப்படிப் பிரம்மிக்க வைக்கும் சூழல் நிரம்பிய இயற்கையை மனிதன் தன் சுயநலத்தால் அழிக்கத் தொடங்கிவிட்டான். காடுகள் இல்லையெனில் இவ்வுலகில் பல ஜீவன்கள் ஜீவித்திருக்க வாய்ப்பில்லை. மனிதனோ தன் தேவைகளுக்காக மரங்களை வெட்டுவதும், உயிரினங்களை வேட்டையாடுவதும் போன்ற பல்வேறு இயற்கைக்கு எதிரான செயல்களைச் செய்கிறான்.
பூமியில் காடுகளின் பரப்பளவு 31 சதவீதம். அத்துடன் அமேசான் காடுகள் மூலம் பூமிக்கு 20% ஆக்சிஜன் வாயு கிடைக்கின்றது. சமீபத்தில், அமேசான் காடுகளில் காட்டுத் தீ பரவியதால் 50% மரங்கள் அழிந்துவிட்டன. பல விலங்குகள் பாதிப்படைந்துள்ளது. இதற்கு முற்றிலும் காரணம் (ஸ்லாஷ் மற்றும் பர்ன்) என்னும் விதத்தால் காடுகளை அழித்து விவசாயம், கால்நடைகள் வளர்க்க வேண்டும் என்பதே. காடுகளை அழித்துதான் இவையெல்லாம் செய்ய வேண்டுமா ?
காடழிப்பால் பல்லுயிர்கள் வாழ இடமின்றி நகரத்திற்கு வருகின்றன. தற்போது நடந்த நிகழ்வை எடுத்துக்கொள்வோம். ஒரு கருவுற்ற யானை வெடிபொருள் நிரம்பிய அன்னாசி பழத்தைச் சாப்பிட முற்பட்டபோது வெடித்து உயிரிழந்தது. இந்தச் சம்பவத்தைக் கேட்கும்பொழுது, ஏன் மனிதன் இந்தத் தீயச்செயல்களை எல்லாம் புரிகிறான் என்று மனம் கலங்குகிறது.
காடு இயற்கை தந்த வரம். இதை முற்றிலும் மனிதன் உணர வேண்டும். இப்போது இயற்கை சூழ்நிலை மாறிவிட்டது. இது பேராபத்தானச் செயல். புவி வெப்பமடைவதும் அதிகமாகிவிட்டது. மனிதனால் இயற்கையின் சீற்றத்தை எதிர் கொள்ள இயலாது. இவற்றையெல்லாம் புரிந்துகொண்ட ஒரு சிறு வயது பெண், 16 வயதே ஆன இயற்கை பேச்சாளர் க்ரெட்டா துன்பெர்க் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். க்ரெட்டா, மக்களுக்குப் பல்வேறு வகையில் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இச்சிறுவயதில் பருவநிலை மாற்றம் பற்றியும் அவை பல்வேறு ஆபத்தைப் பூமிக்கு உண்டாக்கும் என்பதையும் இவர் நன்கு அறிந்துள்ளார். இதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். காடு, மனிதன், இயற்கை, விலங்குகள், பருவநிலை எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. மரங்களை நடுவதும், காடுகளைப் பாதுகாப்பதும் மனிதனின் கடமை.
நாம் இப்பூமியில் அழகான மரங்கள், பூக்கள், மழை என அனைத்து இயற்கை வரங்களையும் இரசிக்கிறோம், பயன் பெறுகிறோம். இதை நாம் அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் அனைவருக்கும் கல்வி மற்றும் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். இதுவே மனிதத் தன்மை. இதுவே நம் கடமை.
பச்சை நிற போர்வையாய்ப் பிரதிபலிக்கிறாய் !
பல உயிரினங்களுக்கு வாழ இடமளிக்கிறாய் !
மெல்லிய தென்றல் இடையில் உன்னை ரசிக்கிறேன் !
குளிர்ந்த , ஈரமான , பசுமை நிறைந்த உன்னை நினைக்கிறேன் !
இவ்விடம் வலிமை மிக்க மாயாஜாலம் !
உயிர்கள் நிறைந்த வர்ணஜாலம் !
எங்கும் பனித்துளிகள், அழகிய புல்வெளிகள் !!
இயற்கையின் படைப்பாற்றலைக் கண்டு வியக்கிறேன்!
என்னை மறக்கிறேன் !
உன் பரந்த உடற்பகுதியில் கட்டியணைக்கிறேன் மகிழ்கிறேன் !
மரத்தின் அடி, தாய் மடிபோல் சுகமாக உள்ளதே !!
வனம் இல்லாமல் வாழ்க்கை இல்லை !!
மனிதன் மனம் மாறாமல் வாழ்வு இல்லை!!