Loading...

Articles.

Enjoy your read!

விடியலை நோக்கி .....

தேர்தல் ஆர்ப்பாட்டங்களும் விட்டு வைத்த ஊர் அது. வருணபகவான் கருணைக் காட்டினால்  ஒழிய நீர்ஆகாரத்திற்கு வேறு வழியில்லை. செம்மண் புரையேறிப் போன ஜலம் வேண்டும் என்றால் ஐந்து காததூரம் நடத்தல் வேண்டும். நீருக்கே இக்கதி என்றால் பள்ளிக்கூடத்திற்குப் போயாகி வேண்டுமானால் மனிதன் செத்துத் தான் பிழைக்க வேண்டும்.

அவ்வூரில் வாக்கப்பட்டத் தன்னையும் தன் விதியையும் கரித்துக் கொட்டிக் கொண்டே வந்தாள் செல்லம்மா. ஏழூருத் தாண்டிக் கழுத்தில் வாய்த்த ஒருத்தனுக்காகவும்  வயித்தில் வாய்த்த இரண்டுக்காகவும் ஊர்பேர் தெரியாத இடத்தில் ஏதோ  ஓர் தீப்பெட்டிச் சாலையில் பொழுதினிக்கும் கைகள் புண்ணேறிப்போகச் சோலி பார்ப்பவளுக்குத் தன் வாழ்க்கையின் மீது வெறுப்பு இல்லாமலா இருக்கும். எனினும், அக்கரிசகல்காட்டுப் பெண்ணுக்குக் கொஞ்சம் அகங்காரம். தன் சகாக்காரிகளின் பிள்ளைகளை விடத்  தன் மூத்த மகள் பெரிய இடத்தில் படிக்கிறாள் என்று. அவள் அதைக் கூறும்பொழுதெல்லாம் வரிந்துக் கட்டிக்கொண்டு வந்து விடுவார்கள் அவர்கள், “என்னடீ பெரீய்ய பள்ளிக்கொடம். என்ன அம்மாங்க இஸ்கூல் தானே? இவ என்னடீ இங்கிலீசு மீடியத்துல படிக்க வைக்கறமாறி பீத்திக்கிறா?“  என்று கூறி கொல்லென்று சிரிப்பார்கள். இன்றும் அதே பாட்டுத் தான். செருப்பில் ஒட்டிய தூசியென உதறித்தள்ளிவிட்டுப் பிள்ளைகளைக் காண ஒரே ஓட்டமாய் ஓடினாள்.

 ஊரின் தெற்கேஓட்டையும் ஒடிசலுமாய் இருந்த அவள் வீட்டிற்குள் நுழைந்தது தான் தாமதம், “இன்னிக்குச் சம்பளம் போட்டாய்ங்களாமா?“  என்று ஆர்வத்துடன் கேட்டாள் தலைப்பிள்ளையான முத்து. முத்தழகி. செல்லம்மாவிற்கு நெஞ்சில் சுருக்கென்றது. “இல்லடியாயிஎன்றவாறே முத்துவின் தலைக்கோதி சமாதானப்படுத்த முயன்றாள். அவள் சாமர்த்தியம் அறிந்தவளாய், “யம்மா! மொபைல் இல்லனா என்னால கிளாஸ் பாக்கமுடியாது மா. இப்புடியே போய்ட்ருந்தா நானும் உன்னைய மாறித் தீக்குச்சியைத் தான் புடுச்சுட்டு அலையனும்”  என்றாள் கண்ணீரும் கம்பலையுமாய். ஆத்திரம் அடைந்தவளாய் செல்லம்மா, “இதுக்கா டீ நான் காடுகடந்து போய்ப் புழப்பு நடத்திட்ருக்கேன். உனக்குப் பணம் தானேடீ வேணும். இருடி இங்கனையேஎன வெடுக்கென எழுந்து உள்ளே சென்று தன் அய்யன் வாங்கித்தந்த பத்தமடைப் பாயை உருவினாள். உருவியமாட்டில் படபடவெனப் பறந்து வீழ்ந்தன ஐந்து இரண்டாயிரம் ருபாய் நோட்டுகள். அதைப் பொறுக்கியவள் முத்துவிடம் திரும்பி,  “உன் காலேஜுக்கு ஆகுமேனு வச்சிருந்தேன். பரவால்ல போனாப்  போயிட்டுப் போதுஎன்று அவள் கையில் திணித்தாள். திடீர்னு ஒரு சப்தம். ஆத்தாளும் மகளும் திரும்பின  பக்கம், போதைத் தலைக்கேறி  ஆங்காரமாய் நின்று கொண்டிருந்தான் முத்துவின் அப்பன். பணத்தைப்  பார்த்தமட்டில் அதை ஒரே உருவலாய் உருவி, கள்ளிக்காட்டினூடே ஓடி மறைந்தான். கல்விக்காகச் சேர்த்த பணம் விழலாய்ப் போவதைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டு  சுவரோடு  சரிந்தாள், செல்லம்மா. ஆனால், முத்துவோ கணநேரத்தில் நடந்தவற்றில்  இருந்து மீண்டு ஞானம் பெற்றவள் போல் கண்கள் சிவக்கத் தன் தாயைப் பார்த்து,  “யம்மா! எதுக்கு அழுவுற போய்ப் படு. நாளைலேர்ந்து நானும் வேலைக்கு வாரேன். படிக்க முடியாதுங்கிறதுக்காக இல்ல மா. படிக்கறதுக்காக!” என்றாள். செல்லம்மா, தன் மகளின் திடத்தை எண்ணி மெச்சிக்கொண்டே படுக்கச் சென்றாள்,  விடியலை நோக்கி….

Tagged in : Online Classes, Women Education, Rural Life, A Different View,