Loading...

Articles.

Enjoy your read!

பொன்னியின் செல்வன்

தமிழ்நாடு என்னும் பெருங்கடலில் வரலாறும் மூவேந்தர்களும் பின்னிப் பிணைந்தவை . காவிரி நதிக்கு பொன்னி நதி என்ற பெயர்  உண்டு. அந்தப்  பொன்னி நதி கொடுத்த வரமாகிய ராஜ ராஜ சோழனின் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியைக் கூறுவது தான் "பொன்னியின் செல்வன்".  சோழர் குல மரபில் ஈடு இணையற்ற மன்னர் இந்த பொன்னியின் செல்வன்.

இந்த நூலை முதலில் பார்க்கும் போது பிரம்மாண்டமாக சுமார் 2500 பக்கங்களைக் கொண்டதாகத் தோற்றம் அளிக்கலாம். அனால் படிக்க ஆரம்பித்து விட்டால் நூலை மூடி வைக்க மனம் வராது. கல்கி என்றால் வர்ணனை. வர்ணனை என்றால் கல்கி. ஆம், இது முற்றிலும் உண்மை. அந்த வர்ணனைகள் கதையின் பயணத்தில் சிறிது தொய்வு ஏற்படுத்தினாலும் அந்தக் காட்சி ஓட்டங்கள் நம் கண் முன் வரும் போது அத்தனை அழகு! ஒவ்வொரு வரியும் ஒரு கவிதை தான் கல்கியின் பாணியில்.

கதையின் ஆரம்ப வர்ணனையில் மூழ்க ஆரம்பித்தால் "பிறந்தால் சோழ நாட்டில் அல்லவோ பிறக்க வேண்டும்! " என்று எண்ணும் அளவிற்கு தோன்ற வைத்திருப்பார் ஆசிரியர். ஒரு சிறு பூச்சியை வர்ணிப்பதாக இருக்கட்டும் அல்லது ஒரு மகா சமுத்திரத்தை  வர்ணிப்பதாக இருக்கட்டும், எதை வர்ணித்தாலும் அதில் ஒரு சிறப்பு இருக்கும். முதல் நூறு பக்கங்கள் சிறிய சலிப்பை ஏற்படுத்தினாலும் அதன் பிறகு வரும் திருப்பங்களில்  இருந்து கதை வேகமாக நகர ஆரம்பிக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வம் வாசகர்களைத் தொற்றிக் கொள்ளும்.

ஒரு கதைக்கு மிகவும் முக்கியமே சுவாரசியம் தான். அந்த சுவாரசியம் குன்றாமல் இருக்க கதையில் வரும் கதாபாத்திரங்களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும் சரி, அந்தப் பாத்திரத்தை வர்ணிப்பதாக இருந்தாலும் சரி, அதை அத்துணை அழகாக செதுக்குகிறார் கல்கி.

கதைக்கு மேலும்   வலு சேர்ப்பது ஒவ்வொரு பாத்திரங்களின் பங்களிப்பு. கதையில் வருகின்ற அனைத்துப் பாத்திரங்களும்  ஆழமானவை. ஒரு கட்டத்தில் யார் யார் நல்லவர்கள், யார் யார் கெட்டவர்கள் என்று நினைக்கும் அளவுக்கு திடீர் திடீர் திருப்பங்கள் நிச்சயமாக மிகப்பெரிய பலம். குறிப்பாக கதையின் நடுப்பகுதியில் வரும் திருப்பமும்  கதையின் முடிவில் வரும் திருப்பமும் யூகிக்க முடியாதவை.

மன்னர்களின் வீரம், ஆண்மை, கொடை, பெருமை, புத்திசாலித்தனம், மக்களுடைய வீரம், பலம், எண்ண ஓட்டங்கள் அனைத்தையும் மிக இயல்பாக பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் கதையை அமைத்து இருக்கிறார் கல்கி. வாசித்துக் கொண்டிருக்கும் போதே பல இடங்களில் அடடே! என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். கல்கியின் கற்பனை திறத்தினைப் போல் வேறு எந்த ஆசிரியருக்கும்  இது வரை இருந்ததில்லை என்று இந்நூலைப் படித்தவருக்கு மட்டுமே புலப்படும்.  

ஒரு மனிதன் எவ்வாறு வாழ்ந்தாலும் நட்பும் காதலும் இல்லாமல் வாழ்வது என்பது அசாத்தியம். அப்பேற்பட்ட நட்பு மற்றும் காதலின் ஆழத்தையும் பண்பையும் காண்பிப்பதிலும் சரி, அவற்றை வெளிப்படுத்தும் விதத்திலும் சரி, இல்லை காதலின் விரக்தியைக் காட்டுவதிலும் சரி, கல்கி நூற்றுக்கு நூறு அள்ளுகிறார். இவ்விரண்டு மட்டும் இல்லை, வன்மம், விரோதம், பகை, சூழ்ச்சி, பிரிவு, துயரம், மகிழ்ச்சி ஆகிய அனைத்து குணங்களைக் காட்டும் விதத்தில் கல்கிக்கு நிகர் கல்கியே. கதையின் தலைப்பு ராஜ ராஜ சோழனைக் குறித்தாலும் கதை சோழ குல பரம்பரையைச் சுற்றியே இருக்கிறது. இக்கதையில் வரும் அனைவருமே கதையின் நாயகர்கள் தான்.         

இந்நூலைப் படிக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக முடிக்கும் வரை தூக்கம் ஒழுங்காக வராது. ஆனால் முடியும் தருவாயில், "ஐயோ! முடியப்போகிறதே " என்று எண்ணம் தோன்றும். அங்கு தான் கல்கி முழுமையாக வெற்றி பெறுகிறார். எத்தனை நாவல்கள் தமிழில் வந்தாலும் வேறு மொழிகளில் வந்தாலும் இந்த அற்புதப்  படைப்பிற்கு  ஈடு இணை ஏதும் இல்லை என்பதே என் கருத்து. 'தியாகம் ஒன்று தான் உன்னை உயர்த்தும்' என்பது தான் இக்கதையின் மூலக் கரு.

பின் குறிப்பு: இக்கதையின் எந்த ஒரு நிகழ்வையும் கதையையும் சுட்டிக்காட்ட வில்லை. இது இக்கதையை இன்னும் வாசிக்காதவர்களின் நலனுக்காக எடுத்த முடிவே ஆகும்.         

 

 

 

Tagged in : Reviews, Abraham John, Tamil, பு. புகழ் நீலம் ஆடலரசன்,

   

Similar Articles.