Loading...

Articles.

Enjoy your read!

பனையன் மகன்

மூன்றாம் தமிழ்ச்சங்கம் நடந்த காலமே சங்க காலம் என்று அழைக்கப்படுகிறது. அக்காலத்தில் மூவேந்தர்களுடன் சில வேளிர்குலத்தலைவர்களும் தமிழ் மண்ணை ஆண்டனர். அம்மூவேந்தர்களையும் அச்சுறுத்தும் தலைவன் ஒருவன் இருந்தான். வரலாற்றில் அவன் வாழ்ந்த காலம் மிகச்சிறந்த காலம் என்றே கூறலாம். பெரிய பெரிய கோயில்களாலும், அணைகளாலும், சில மன்னர்கள் மக்கள் மனதில் நின்றாலும், தனது கொடைக் குணத்தாலும், நற்செயல்களாலும், இயற்கை அறிவாலும் சிறந்தவர்கள் மக்கள் மனதில் மாமனிதர்களாக வாழ்கின்றனர். போர்க்கருவிகளையும், மனிதர்களையும் துணையாகக் கொண்டு போரிட்டவர்களுக்கிடையே இயற்கையை நேசித்து, இயற்கையையே தனக்குத் துணையாகக் கொண்டு வெற்றி பெற்ற அத்தலைவனை மாமன்னன் என்று சொல்வதைக்காட்டிலும் மாமனிதன் என்று சொல்வதே மிகவும் பொறுத்தமானதாகும். பலகுலங்களை அழித்து அவர்களின் நிலத்தையும், வளத்தையும் அழித்த மன்னர்களைப் போல் அல்லாமல், அழித்த அக்குலமக்களையும் அவர்களின் குலப்பெருமையையும் காத்த பெரும் தலைவன் அவன். குணத்திலும், பலத்திலும் மட்டும் சிறந்தில்லாமல் இயற்கை அறிவிலும் சிறந்து விளங்கியவன். சிறு முல்லைக்கொடிக்குத் தன் தேரை வழங்கிய கடையெழுவள்ளல்களுள் ஒருவன். யார் என்று கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று தெரிகிறதே! நீங்கள் கணித்தது சரியே! “மாரி ஒருவன் மட்டும் இவ்வுலகில் இல்லை” என்று கபிலப்பெரும்புலவர் இகழ்வது போல் புகழ்ந்த பாரியே ஆவான்.

பாரியின் நாடு, பறம்பு மலையும் அதனைச் சுற்றியுள்ள முந்நூறு ஊர்களும் ஆகும். பாரியின் குலம் வேளிர் குலம் ஆகும். முருகனும் வள்ளியும் இணைந்ததைப் பொருட்டு முருகனின் குலமான வேடர்குலமும், வள்ளியின் குலமான கொடிக்குலமும் இணைந்தன. இருகுலங்களும் ஆதிமலை என்னும் மூன்றாம் மலையில் வாழ்ந்து வந்தனர். முருகனின் நண்பன் எவ்வி குலத்தலைவனாவான். இக்குலமே வேளிர் குலம் எனத் தழைத்தது. இக்குலத்தின் 42 ஆவது தலைவனே பாரி ஆவான். வேளிர்குலத்தலைவன் ஆதலால் “வேள்பாரி” என்று அழைக்கப்பெற்றான். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் மீதும் அவன் காட்டியக் கருணைக், கடலினையும் மிஞ்சியதாகும் என்று அவன் மக்கள் புகழ்வர். பாரியின்‌ புகழ் எட்டாத உயரத்தை அடைந்துக் கொண்டிருக்க, மறுபக்கம் மூவேந்தர்களின் மனதிலும் அக்குறுநிலத்தலைவனின் மீது பொறாமை என்னும் கொடிய குணம் வளர்ந்துக் கொண்டே இருந்தது. பறம்பு மலையின் பாழி நகரில் செல்வச்செழிப்புகள் கொட்டிக்கிடந். மூவேந்தர்களும் தனித்தனியாகப் போரிட்டுப் பாரியிடம் வீழ்ந்துக் கொண்டேதான் இருந்தனர். பின்னொருநாள் மூவேந்தர்களும் இணைந்துப் பாரியைத் தாக்கினர். அதுவரை அப்படியொரு போரை இம்மண் கண்டதில்லை. எந்நிலையிலும் அறம்பிறழாதப் பாரியே இப்பெரும் போரிலும் வெற்றிப் பெற்றான்‌. பாரியின் மிக நெருங்கிய நண்பர் கபிலரே. மூவேந்தர்களும் பிறகு சூழ்ச்சியினாலேயே பாரியைக் கொன்றனர். கபிலரின் அறிவுரைப்படி பாணனாக வேடம் கொண்டு, பாரியின் இடம் சென்று, பாரியின் முன் பாடி, அவனை மகிழ்வித்துப் பாரியையும் அவனது நாட்டையும் பரிசாகக் கேட்டனர். தன் வாக்கில் இருந்து தவறாமல் பாரியும் அவ்வாறேச் செய்தான். இதை சிறிதும் எதிர்பார்க்காத கபிலர் திகைத்து நின்றார். பாரி தன் இரு மகள்களான அங்கவையையும், சங்கவையையும் கபிலரிடம் பார்த்துக் கொள்ளும்படி ஒப்படைத்தான் . தன் கடைமையை நிறைவேற்றிய பின் கபிலர் வடக்கிருந்து தன் நண்பனை நினைத்து உயிர் துறந்தார்.

முல்லைக்கொடிக்குத் தேர்கொடுத்த பாரி “ என்ற ஒற்றை வரி மட்டுமே பாரியின் வரலாறாக இருந்த நமக்கு, இன்று அவனின் மிகச்சிறந்த வரலாறு இருப்பதற்கான முழுகாரணமும் “வீரயுகநாயகன் வேள்பாரி” என்னும் சு.வெங்கடெசன் எழுதியப் படைப்பேயாகும். பாரி என்னும் அம்மாமனிதனை நம் கண்ணிலும், நெஞ்சிலும் வரவழைத்து விட்டது இப்படைப்பு. கண்களில் கண்ணீரை மட்டுமல்ல நெஞ்சில் துணிவையையும், கருணையையும், தெளிவையையும் தருகிறான் பாரி. பாரி என்ற மாமனிதரைக் கொன்றார்கள் என்பதை மனம் ஏற்க மறுக்கவேச் செய்கிறது. பாரியைப்போன்ற மக்கள் வாழ்ந்த இம்மண்ணில் பிறந்ததற்கு நாம் பெருமைக்கொள்ள வேண்டும். இப்படைப்பின் ஒவ்வொரு பகுதியும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றன. எண்ணிலடங்கா பூக்களும், செடிகளும், கொடிகளும், மரங்களும் அவற்றின் பயன்களும் பிரம்மிக்க வைக்கின்றன. நாம் வாழ்வது நமக்காக மட்டும் அல்லாது, நம் அடுத்த தலைமுறைக்காக வாழ்வதும் மிக முக்கியமான ஒன்று என்பதையும் உணர்த்துகிறது. என்றும் அறம் தவறாமல் தன் மக்களையும் இயற்கையையும் காத்து நின்றவர் பாரி. அவரின் வழி வாழ்ந்து வாழ்வில் வளம் பெறுவோமாக!

பனையன் மகனே பனையன் மகனே

பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே

தினையின் அளவே பிறவுயிர் வாடினும்

துடித்துக் காக்கும் தொல்கொடி வேந்தே!

Tagged in : King, history, VELPARI,

   

Similar Articles.