Loading...

Articles.

Enjoy your read!

பாண்டிமாதேவி

பொன்னியின் செல்வன் பின்னர் வந்த வரலற்றுப்புதினங்கள் பெரும்பாலானவற்றை  இரு வகையால் பிரிக்கலாம். தக்காண வரலாற்றின் பொற்காலமான சோழர்களது வெற்றியின் சிறப்பைப் பற்றி கூறுவது ஒரு வகை; அதே காலத்தைச் சேர்ந்த பாண்டியர்களது போராட்ட வாழ்வைக் குறித்துக் கூறுவது மற்றொரு வகை.

நா.பார்த்தசாரதி எழுதிய பாண்டிமாதேவி இரண்டாவது வகையைச் சேர்ந்ததாகும். பிற்கால சோழர்களது மறுமலர்ச்சியை உண்டாக்கிய விஜயாலயனது காலத்தில் வாழ்ந்தவன்  பராந்தகப் பாண்டியன். பல்லவரோடு நடந்த போரில் மாண்ட பாண்டியனது நாடு சோழர் வசமானது. அன்றைய காலகட்டத்திலே தென்பாண்டிநாட்டை காக்கும் பொறுப்பு பராந்தக பாண்டியன் மனைவி பாண்டிமாதேவியினிடம் வருகிறது. எப்போது கைப்பற்றலாம் எனக் காத்திருக்கும் சோழர்கள், உள்நாட்டுக் குழப்பம்,  காணாமற்போன இளவரசன் ஆகிய அச்சுறுத்தல்களை ஒரு துணையை இழந்த பெண் மனம் எப்படி எதிர்கொள்கிறது என நாவலின் வழியே அழகுற விவரித்து இருக்கிறார் நா.பா அவர்கள்.

கதையின் தொடக்கத்திலேயே பாண்டியர்களது மனநிலையை நம்மிடையே பற்றவைத்து வெற்றிகொள்கிறார் நா.பா. பாண்டிய மகாமண்டலேஸ்வரர் இடையாற்றுமங்கலம் நம்பி குறித்துக் கூறும்போதும் சரி, அவருடைய குள்ள ஒற்றனைப் பற்றிக் கூறும்போதும் சரி, ஆசிரியர் பின்பற்றும் ஒருவித மர்ம-நடை  கதையை படிப்பவரை மேலும் படிக்கத் தூண்டுமாறு அமைந்துள்ளது.

 பாண்டியர் குலச்சின்னங்கள் கொள்ளைபோவது, இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள், இராசசிம்மன் மீண்டும் தென்பாண்டி நாட்டுக்கு வருவது என மூன்று பாகங்களாக உள்ளது பாண்டிமாதேவி. கணவன் மறைந்ததுதொட்டு இல்வாழ்க்கையில் நாட்டமின்றி வாழ்ந்தாலும் தென்பாண்டிநாட்டு காவல் பொறுப்பு பாண்டிமாதேவியிடம் சேர்கிறது. மதிநுட்பம் மிக்க மகாமண்டலேஸ்வரரும், தமிழ் புலமை பெற்ற அதங்கோட்டசிரியர் உள்ளிட்டோரின் அறிவுரையாலும், தென்பாண்டிநாட்டின் அரசாட்சி பாண்டிமாதேவிக்கு எளிதாகிறது. இந்நிலையில் பாண்டிநாட்டை ஆளத் துடிக்கும் சோழனும் அவனது கூட்டாளிகளும் 3 ஒற்றர்களை அனுப்பி பண்டிமாதேவியைக் கொலைசெய்ய முயல்கின்றனர். ஒரு முறை தளபதி மூலமாகவும் மறுமுறை குள்ள ஒற்றனின் மதியாலும் பாண்டிமாதேவி தப்புகிறார். இனிமேலும் நாட்டை ஆளத் தகுதி தனக்கில்லை என்று காணாமற்போன தன் மகன் இராசசிம்மனை தேடுமாறு மண்டலேஸ்வரரைப் பணிக்கிறார். போன இராசசிம்மன் வந்தானா? சோழர்களிடமிருந்து பாண்டிநாடு தப்பியதா? என்பதை தனக்கே உரிய எளிய உரைநடையில் விளக்குகிறார் நா.பா.

தாய்மையின் இலக்கணமாக விளங்கும் பாண்டிமாதேவி, தன் மகன் ராசசிம்மனின் செயலை, கோவில் சொத்தை திருடிய அந்தணனின் செயலோடு ஒப்பிடும் காட்சி மனம் நெகிழ்வுறச் செய்வதாகும். பின்னர் அந்த அந்தணனின் தாயிடம் சென்று அவள் மகனைக் காக்க உதவி செய்யும் இடத்தில் தாயுள்ளத்தின் சிகரமாகத் தெரிகிறார் பாண்டிமாதேவி! கதையின் நடுவே பாண்டிமாதேவியை சந்திக்க வரும் சமணத் துறவியின் கூற்றுக்கள்  வாயிலாக உன்னதமான வாழ்வியல் கருத்துக்களை நம்மிடயே கடத்துகிறார் நா.பா.

சரித்திர நாவலில் காதல் இல்லாமலா? இராசசிம்மன் இலங்கைச் செல்லுமிடதே முந்நீர் பழனந்தீவுகளில் சங்கு விற்கும் பெண்ணைக் கண்டு காதல் கொள்கிறான். இலங்கைச் செல்லும் வழியே காய்ச்சல் காணும் இராசசிம்மன் அவள் பெயர் கூறிப் பிதற்றுவதை காதல்பிதற்றலாக வடிக்கிறார் நா.பா! படிப்பவர்கள் அவர்தம் காதல் கதையை நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது அந்தக் காட்சி. பாண்டிநாட்டிலே மண்டலேஸ்வரரின் புதல்வியும் இளவரசன் மீது காதல் கொண்டு அவனை கண்டுபிடிக்கக் கடல் கடந்து பயணிக்கிறாள்.

 

 பாண்டிநாட்டின் நலம் கருதும் மண்டலேஸ்வரரை பகைக்கும் தளபதியும் கூற்றத்தலைவர்களும் அவருக்கு எதிராக கலகம் விளைவிக்கின்றனர். தம் மதி பாண்டிநாட்டுக்கு இனி உதவாது என எண்ணும் மண்டலேஸ்வரர் செய்யும் செயல் படிப்பவர் வியப்பில் ஆழ்த்துவதாகும். ஒரு தேசம் இன்னொரு நாட்டுக்கு அடிமையாக வெறும் போர் மட்டுமல்லாது பல்வேறு  காரணிகளையும்  கொண்டிருக்கும் என்ற அரசியல் உண்மையை தெளிவாக உணர்த்துகிறது பாண்டிமாதேவி! நாவலின் தொடக்கம் முதலே பாண்டிமாதேவியின் மன வருத்தம் அழுத்தமாக சித்தரிக்கப்பட்டிருப்பது, நாவலின் உயிரோட்டத்திற்கு ஒரு சான்று!

சிறைகோட்டத் தம்பதி, சோழ ஒற்றர்கள், ஆபத்துதவித் தலைவன், முரட்டுப் பழுவேட்டரையன், பகவதி  என விதவிதமான  கதாபாத்திரங்கள் கதைக்கு வலுசேர்க்கிறது. பாண்டிய மன்னன் இராசசிம்மன் இலங்கையில் பாண்டிய குலசின்னங்களை ஒளித்து வைத்த வரலாற்றைக் காதலும் தாய்மையுமாக சொல்வதில் வெற்றி காண்கிறார் நா.பா. நாவலின் ஊடே வரும் நாஞ்சில் நாட்டு வருணனைகள் மனதை மயக்குபவை! எனினும் சூழல் வர்ணனைகளாலும்,  மிகுந்த தத்துவப் பேச்சுக்களாலும் ஆங்காங்கே கதையின் வேகம் தொய்வுருகிறது. அந்த தொய்வினை கதைப்போக்கின் மூலம் மாற்றுகிறார் நா.பா. தத்துவம் கலந்த வரலாற்றுப் புதினங்களை விரும்பிப் படிப்பவர்கள் தவறாமல் பாண்டிமாதேவியை படிக்க வேண்டும்.             அடிப்படையில் எதிரான விறுவிறுப்பும் மதிநுட்பத்துடன் கூடிய தத்துவமும் ஒன்று சேர்வதை இந்த நாவலில் காணலாம்!

 

 

  

Tagged in : Events, Priyanca B, Karthick Palani, Tamil, Amarabharathy,

   

Similar Articles.