Loading...

Articles.

Enjoy your read!

ஒரு நதியின் மறைவு - சரஸ்வதி

தன் வரலாறை தான் அறியாது இருப்பது உற்ற நோய்க்கு மருந்துண்ணா நிலையானால் தன் வரலாறை தவறாக அறிவது , காலவதியான மருந்தினை உண்பதற்கு சமமாகும்.

சிந்து நதி நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதரோ என்ற இரு நகரங்களை பிரதானமாக கொண்டது. கி.மு 15௦௦ களில் ஆரிய படை எடுப்பால் அழிந்தது என்று இன்றும் கூறிக்கொண்டிருக்கிறது நமது பள்ளி, கல்லூரி வரலாற்றுப்  பாடப்புத்தகங்கள். ஆனால் இந்த கருத்துகள் 193௦ களிலே காலவதியாகிவிட்டது. ஆனால் இன்னும் அதனை பிடித்துக் கொண்டுத் தொங்கும் இந்திய அரசியல் தான் புரியவில்லை என்கிறார் இந்நூலின் ஆசிரியர் மிஷில் தணினோ.

இன்றுவரை நடந்த ஆய்வுகளில் 2% கூட முடியாத நிலையில் கொணரப்பட்ட கருத்துக்கள் அவை. இந்தியாவின் வடக்கையும், தெற்கையும் ஆரிய – திராவிடமாக கூறுப்போட்ட ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை.

மதம் , மொழி மட்டுமின்றி தம் இனம் வரலாறு வரை சென்றுள்ளதை பதிவு செய்து பிரிவினைவாதிகளுக்கு சாட்டையடி கொடுக்கிறது இந்நூல்.

சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்களால் அழிக்கப்படவில்லை என்பதற்கு இவர் எடுத்த பெரும் ஆயுதம் சரஸ்வதி நதி. அலகாபாத் அருகில் திரிவேணி சங்கமத்தில் பாதாளத்தில் கலப்பதாக இன்று கூறப்படும் இந்நதி நம் பாரத மண்ணில் உண்மையாகவே ஓடியது. ஆனால் ஓடியது  அலகபாத்தில் அல்ல. இன்று வறண்டு கிடக்கும் ராஜஸ்தான் மற்றும் கோலிஸ்தான் பாலைவனத்தின் ஊடே எனும் இவர் , அதனை நிரூபிக்க கூறும் ஆதாரம் ஆயிரம் ஆயிரம். 193௦ முதல் இன்று வரை நடந்த அத்தனை ஆய்வுகளையும் அலசுகிறார் .இது மட்டுமின்றி எதிர்க்கருதுக்களுக்கு இந்நூல் தரும் முக்கியத்துவம் அளப்பரியது.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் இந்தியாவில் இருந்த சிந்து நதி நாகரிக ஆய்விடம் இரண்டு மட்டுமே. ஆனால் இன்றோ அது 3௦௦௦ க்கும் மேல் ! அத்தனையும் வறண்ட சரஸ்வதி நதியின் படுகையின் ஓரத்தில்.....

ஒரு நதியின் தோற்றமும், மறைவும் மனிதனின் வாழ்வை எவ்வகையில் கையாள்கிறது என அருமையாக கூறுகிறது இந்நூல். இதில் கூறப்படும் அதிமுக்கிய கருத்து,

“ ரிக் வேதத்தின் படி , சரஸ்வதி பெரும் நீர் கரைபுரண்டு ஓடி கடலில் கலக்கும் நதி. அது மறைந்து காணமல் போனது கி.மு 2௦௦௦ த்தில் , . ஆரியர்கள் வந்தது கி.மு 15௦௦ எனக் கூறப்படுகிறது. சிந்து நதி நாகரிகம் அழிந்தது கி.மு 1800 வில்.

எனில் தான் பார்க்காத சரஸ்வதியை ஆரியர்கள் தன் முதல் வேதத்தில் கரைபுரண்டு ஓடுவதாக போற்றினாரா என்ன ? “

                என ஆரிய படையெடுப்பு கொள்கையின் சவப்பெட்டிக்கு  இறுதி ஆணி அடிக்கிறார் ஆசிரியர்.

மேலும் நம் வரைபடங்களில் தார் பாலைவனம் என இரு சொற்களில் முடிக்கும் இந்த இடத்தின் பூகோளத்தை மெய்சிலிர்க்கும் படி கூறுகிறது இந்நூல். மணல்மேடுகள், மலைகள் , ஆற்றுப்படுகைகள் , கோட்டைகள் , வறண்ட புல்வெளிகள் , கனிமங்கள் என பலவற்றை  மணற்புயலுக்கு  நடுவே மறைந்துள்ள இப்பாலைவனத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் கண்டு குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

தன் 2௦ வயதில் இந்திய வந்தவர், இப்பாலைவனத்தில் தனது 80  வயது வரை அலைந்து திரிந்துள்ளார். சிந்து நாகரிகத்தின் வரலாற்றை கூற மிஷல் தணினோ சிறந்தவர் என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.

தமிழாக்கம் செய்த வை.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் பெரும் பணி ஆற்றி உள்ளார் . தமிழாக்கத்தின் போது எந்த தகவலும் தொலைந்தோ , பொருள் மாறியோ போய் விடக்கூடாது என மிகச் சிரமம் எடுத்துள்ளார்.

பக்கத்துக்கு பக்கம் தரப்பட்டுள்ள படங்கள் , வரைபடங்கள் சிந்து நாகரிகத்தின் உண்மை வரலாற்றை திரைப்படம் போல நம் கண்முன் கொண்டு வருகிறது.

இந்தியாவின் உண்மை வரலாற்றையும் , தொன்மையும் அறிய வரலாற்று பிரியர்களும் , தேசபக்தர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல். உங்கள் மனதில் சிந்து சமவெளி நாகரிகம் என்று பதிந்த பெயரை இந்நூல் “ சிந்து – சரஸ்வதி “ நாகரிகம் என மாற்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனக்கு.      

 

Tagged in : Events, Shrishruthi, Tamil, ஹரி பாரதி . T,

   

Similar Articles.