Loading...

Articles.

Enjoy your read!

ஓர் ஜன்னலோர பயணம்

சூரியன் மறைய, வெப்பம் குறைய, குளுமை நிறைய, அழகாய்த் தோன்றியது அம்மாலைப் பொழுது. பக்கத்து வீட்டினர் சண்டையை அவர்கள் இருக்கும்போதே  எட்டிப் பார்ப்பது போல, கதிரவன் இருக்கும்போதே சந்திரன் எட்டிப்பார்த்தது. நான் போக வேண்டிய ரயில் செல்வதற்கு இரண்டு வினாடிகளே உள்ளது, நான் ஏறுவதற்கோ  இரண்டு மாடிகள் உள்ளது. என்னால் முடிந்த வரை ஓடினேன், ஆனால் ரயில் எனக்கு முன்னால் சென்று விட்டது. "என்னடா இது!"  எனத் தன்னால் பேசிக்கொண்டு ஓர் இடத்தில் அமர்ந்தேன். ஒரு கையைக்  கன்னத்திலும், மற்றொரு கையைத்  தின்பண்டம் இருக்கும் கிண்ணத்திலும், அடுத்த ரயில் எப்போது வரும் என்ற எண்ணத்திலும் காத்திருந்தேன். வந்தது ரயில்...... எனக்குக் கிடைத்தது ஜன்னலோர சீட்!!


                        நண்பர்கள்  ட்ரீட்(treat) வைத்தால் கூட கிடைக்காத சந்தோஷம், ஜன்னலோர சீட் கிடைத்ததும் கிடைத்தது. குளுமையான காற்று என் தேகத்தைத் தழுவ, களைப்பு சூழ்ந்த என் கண்கள் துயிலுக்கு ஆழ்ந்தது. திடீரென்று ஒரு சத்தம். என் அருகில் அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் அவருக்கு எதிரில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவியிடம் கால் மேல் கால் போட்டு அமர்வது  தவறு என்றும், இதுதான் உங்கள் வீட்டில் சொல்லிக்கொடுத்த மரியாதையா?  என்றும் தன் குரலை உயர்த்திக் கடுமையாய்க் கூறினார். அதனைக் கேட்டும் அமைதியாய் இருந்த அம்மாணவியின் முகத்திலோ, சோகமும் கோபமும் தெரிந்தது. என் அகத்திலோ, ஒரு பெண் அமரும் முறையை வைத்து அவள் மரியாதை உடையவளா இல்லையா எனக் கணித்து விட முடியுமா?" என்னும் கேள்வி எழுந்தது. நம் முன்னோர்கள் பெரியோரை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்காக பெரியோர்,  வயதில் சிறியோரை அவமதிக்க வேண்டும் எனக் கூறவில்லையே!


                             இத்தகைய நிபந்தனைகள் ஏன்? என்னும் சிந்தனையில் நான் இருந்தபோது, கைத் தட்டும் சத்தம் கேட்டது. ஒரு திருநங்கை கையைத் தட்டியபடிப்  பயணிகளிடம் சில்லறையைப் பெற்றுக் கொண்டிருந்தார். அவருக்குப் பலரும் சில்லறையை வழங்கினர்.   அத்திருநங்கைக்குப்  பின்னால், ஒரு பார்வையற்ற முதியவர் வந்தார். பேனா விற்றுக்கொண்டிருந்த அவரிடம், ஒருவரும் பேனாவைப் பெற்றுக்கொள்ளவில்லை. சோர்வைப் பொருட்படுத்தாமல், பார்வை இல்லையெனினும், வியர்வை சிந்தி உழைக்கும் அப்பெரியவரின் குணம், சில்லறையை வாங்கிப் பிழைக்கும் அத்திருநங்கைக்கு ஏன் இல்லை? கையைத்தட்டியவருக்குச் சில்லறையைக்  கொட்டிய பயணிகள், கடவுளால் கண்ணைக்கட்டியவருக்குப் பணத்தை நீட்டி இருக்கலாமே? எனப் பல வினாக்கள் என் மனத்தில் அடுக்கிக்கொண்டே போனது.


                               நான் இறங்கும் இடம் வந்தது.... ரயில் நின்றது.... என் மனமோ பல விடைகளைத் தேடிச் சென்றது. என் வீட்டை நோக்கி நடந்தேன். என் வினாக்களுக்கான விடை இருக்கும் கதவு திறக்குமா?? என்னும் கேள்வியுடன் என் வீட்டின் கதவைத் திறந்தேன். ஓடும் ரயிலில் என் தேடும் பயணம் தொடருமா? ஆம்! தொடரும்..... எப்படி எனக் கேட்கிறீர்களா?... அடுத்த ஜன்னலோர பயணத்தில்......
                                                         
                                                   
                                                         
                                          

                         

Tagged in : perspective, Lessons, My space, life,

   

Similar Articles.