Loading...

Articles.

Enjoy your read!

நதிமூலம்

அது ஒரு சுனை. மேகங்கள் வருடும் உயரத்தில் இருக்கும் ஓர் மலை உச்சியில் அமைந்துள்ளது. எப்போதும் நீர் ஊறிக்கொண்டே இருக்கும்.

வெகுநாட்களாக இருளில், அடி ஆழத்தில் இருந்த இரு நீர்த்துளிகள் அப்போது வெளிவந்தன். அந்த புது  வெளிச்சம், மெலிதான குளிர் எல்லாம் அவற்றிக்கு புதிதாய் தெரிந்தன. முதல் துளியின் பெயர் துளியன், இன்னொரு துளியின் பெயர் சுழியன்.

துளியனும் சுழியனும் பார்த்த கணத்தில் நண்பர்களாயினர். ஏனோ ஒருவரையொருவர் மிகவும் நேசிக்கத் தொடங்கினர். சுனையில்  இருந்து நீரோட்டம் ஆறாக ஓட தொடங்கியது.
மலைமுகடுகளுக்கும், மரங்களுக்கும் இடையில் ஓடியது.அனைத்தையும் ரசித்த வண்ணம் துளியன் வந்து கொண்டிருந்தான்.

ஒரு மேடு போன்ற இடத்தின் மேல் செல்கையில் துளியனுக்கும் சுளியனுக்கும் அதிர்ச்சி. தூரத்தில் செல்லும் சகதுளிகள் எங்கோ ஒரு பள்ளத்தில் கத்திக்கொண்டெ விழுகின்றன. இந்த காட்சி இருவருக்கும் பெரும் பயத்தை ஏற்படுத்தியது. சுழியன் புலம்ப ஆரம்பித்தான் புலம்பிக் கொண்டே இருந்தான்.

"ஒன்னும் ஆகாதுடா...பயப்படாத !", துளியன்  அவளை சமாதானபடுத்த முயற்சித்தான்.

"ஒண்ணும் ஆகாதா?! நாம தான பார்த்தோம்.. அவ்ளோ தான்... இன்னும் கொஞ்சம் நேரம்... அவ்வளவுதான் நம்ம காலி", சுழியன் புலம்பல்கள் நின்றபாடில்லை.

"அப்படியெல்லாம் நடக்காதுடா...பொறுமையா இரு!!"
அந்தப் பள்ளம் நெருங்கிவிட்டது. துளியனிற்கும் சற்று பயம் அதிகரித்தது. இருவரும்  கண்களை மூடிக் கொண்டு இறுக தழுவிக் கொண்டனர். விழுந்தனர். 
பயங்கரமாக கூச்சலிட்டனர்.
சிறிது நேரத்தில் சமதள பகுதியில் விழுந்தனர். சாகவில்லை.
உயிர் இருக்கிறது.உடல் சிலிர்க்கிறது. "டேய் நம்ம உயிரோட தான் இருக்கோம்.அங்க பாரு இன்னொரு பள்ளம்", குஷியாகிவிட்டான் சுழியன்.

அதன்பின் வந்த ஒவ்வொரு பள்ளத்திலும் சந்தோஷமாக விழுந்து எழுந்து விளையாடி கொண்டிருந்தனர்.

காட்டுக்குள் இருந்தவரை எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. சமவெளிக்கு வந்த பிறகு தான் ஏகப்பட்ட பிரச்சனைகள்..வெயில் சற்று அதிகமாய் இருந்தது.
குப்பைகளெல்லாம் சேர்ந்தது .
"என்னாடா இது... கடுப்பா இருக்குடா... என்ன பன்றோம், எங்க போறோம்னு ஒண்ணும் புரியல.எதுக்கு இதெல்லாம் நடக்குது."
வழக்கம்போல புலம்ப ஆரம்பித்தான் சுழியன்.
"ஏண்டா எப்போ பாத்தாலும் புலம்பிட்டே இருக்க. ஏதோ ஒரு கரணத்துக்காகதான் எல்லாம் நடக்குதுன்னு தோனுது".
"ஏன்? என்ன காரணம்னு சொல்லிட்டு நடந்தா குறைஞ்சு போயிடுமா?"
நிறைய உரையாடல்கள். நிறைய சந்தேகங்கள். நிறைய அனுபவங்கள்.
.
.
.
சுழியனின் புலம்பல் சற்று குறைந்திருந்த காலம் அது. துளியன் தன்னை சுற்றி நிகழ்பவற்றை எல்லாம் ரசித்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருந்தான்.
இரவும் நிலவும் அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது.
முழு நிலவு வரும்பொழுது, பெரிதாக அலைகள் எழுவதை அவன் கவனித்திருந்தான்.
அவன் மிகவும் சந்தோசமாக துள்ளிக் குதித்திடும் நாள், அதுதான்.
அதற்காக எப்போதும் காத்திருப்பான்.
.
.
.

எல்லாம் மாறியது, திடீரென அவர்களின் உடலில் உப்புத்தன்மை கூடத் துவங்கியது.

வெகுநாட்களுக்கு பின் சுழியனின் புலம்பும் திறனுக்கு தீனி போடும் வகையில் ஒரு சம்பவம். புலம்பல் மழை தான்.

"எனக்கு இப்போலாம் என்னையே புடிக்கலடா. ஏதேதோ உடம்புல வந்து தேவையில்லாம் சேர்ந்துட்டு இருக்கு. யார்யாரோ சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு. எதுவுமே எனக்குப் புடிக்கல. என்ன புடிக்கும்னு கூட தெரியல. ஏதோ சம்பந்தமே இல்லாம எதேதோ நடக்குற மாதிரி இருக்குடா.!! பயமா இருக்கு! இப்படி இங்க இருக்குறதுக்கு நம்ம இல்லாமலே இருந்துருக்கலாம்! என்னடா...", சுழியன் பேசிக்கொண்டே (புலம்பிக் கொண்டே) இருக்கையில் அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
.
.
.
ஆங்காங்கே அவ்வப்போது அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.
அத்தருணத்தில் ஒரு அதிசயம். தீடீரென அவர்கள் அத்தருணத்தில் ஆவியாக பறக்க ஆரம்பித்தனர். புதிதான ஒரு பயணம். அது அற்புதமாக இருக்கிறது. சுழியனும் துளியனும் வாயடைத்துப் போய் இருந்தனர். வாழ்வில் சில தருணங்கள் அப்படிதான், எல்லாவற்றையும் மறக்கச் செய்யும்; புதிதான ஒரு வாழ்க்கைக்கு நம் கையைப் பிடித்து இழுத்துச் செல்லும்.

அவர்கள் இருவரும் பறந்து, மிதந்து, மேகத்தில் சேர்ந்தனர்.
.
.
.
எங்கிருந்தோ ஒரு அசரீரி
"இந்த மேகம் இரண்டாகப் பிரியப் போகிறது. ஒரு மேகம், வேறொரு இடம் செல்கிறது. இன்னொரு மேகம், இந்த இடத்திலயே மழையாய் பொழியும். நீங்கள் விரும்பிய இடத்தில் இருக்கலாம்", என அறிவிப்பு.
.
.
.
பரபரப்பானான் சுழியன்.
வேறொரு இடத்திற்கு செல்லும் அந்த மேகத்தை நோக்கி வேகமாக சென்றான்.

"டேய் இருடா..சுழியா.." கத்தினான் துளியன்
 "அறிவிப்பு காதுல விழல....சீக்கிரமா வா... அங்க போலாம்", லேசான கோபத்தொடு கூறியது.
" ஏன்!? இங்கேயே இருக்கலாம்".
"உனக்கு என்ன பைத்தியமா..என்னால,மறுபடியும் அந்த இடத்துக்கு போக முடியாது"
"இல்லடா...எனக்கும் புரியுது.ஆனா ஒரு மாதிரி இருக்கு... இங்கேயே இருனு யாரோ சொல்ற மாதிரி"
"சத்தியமா உனக்கு பைத்தியம் தான்...சரி நீ இரு..நான் கிளம்புறேன்" சுழியன் நகர ஆரம்பித்தான்.
"நீ என்கூட தானாடா இவ்ளோ நாள் இருந்த,திடீர்னு இப்படி விட்டுட்டு போற".
"அதுக்காக..!! உன் கூட வர சொல்றியா...எந்த நம்பிக்கையில நான் உன் கூட வர முடியும்".
"அதுவும் சரிதான்.", துளியன்  மெளனமானான்.

ஏதும் செய்ய முடியாத ஒரு நிலை.
சுழியன் அந்த மேகக் கூட்டத்தோடு அங்கோ தொலைவில் நகர்வதை துளியன் ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருந்தான்
.
.
.
பெரிய இடி.ஒளி அதிகமான ஒரு வெளிச்சம்.மழை பெய்ய ஆரம்பித்தது. துளியன் மெதுமெதுவாக கடலை நோக்கி வர ஆரம்பித்தான். கடலை நெருங்க நெருங்க ஒரு பயம்.ஒரு வெறுமை.

"கூடவே இருந்த சுழியன், இப்போது இல்லை. ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில இப்படி வந்து கொண்டிருக்கிறேன். ஏதேதோ நடந்து விட்டது. இருப்பினும் இவ்வளவு நாள் இல்லாத பயம்,இப்போதென்ன? ஏற்கனவே சந்தித்த உப்பு தானே? பாக்கலாம். என்ன நடந்துற போகுது?", தீரா மன ஓட்டத்துடன் பயணித்துக் கொண்டிருந்தான்.
.
.
.
 கடலில் விழுந்தான் துளியன்.
 உள்ளே சென்றான். ஆனால் அவன் மீது உப்பு எதுவும் சேரவில்லை.உள்ளே சென்று கொண்டே இருந்தான். அவன் கண்ணையே அவனால் நம்ப முடியாமல் வியப்பில் இருந்தான் துளியன்.
மெதுமெதுவாக அடி ஆழத்தில் ஓர் இடத்தில் விழுந்தான்.
சட்டென ஒரு சத்தம்.
இருட்டு.
அவன் விழுந்தது ஒரு சிற்பிக்குள்...!

Tagged in : துளியன், சுழியன், சிறுகதை, விஜயகுமார்,

   

Similar Articles.