Loading...

Articles.

Enjoy your read!

நம்மை இயக்கும் இசங்கள்- கம்யூனிசம்

     நம் பசி தீர்ந்த பிறகு நாம் சாப்பிடுகிற அடுத்த இட்லி மற்றவர்கள் உடையது.‌‌ இதுவே  கம்யூனிசத்தைப் பற்றி சினிமா நமக்கு அளித்த ஒருவரி விளக்கம். ஆனால் உண்மையில் கம்யூனிசம் என்றால் என்ன? கம்யூனிசத்தின் சித்தாந்தங்கள் யாவை? கம்யூனிசத்தைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை பற்றி இங்கு எழுத்தாழ உள்ளேன்.

 

     கம்யூனிசம் என்ற வார்த்தையை நாம் நடைமுறையில் பல இடங்களில் கேட்டிருப்போம். கம்யூனிசம் என்பது ஒரு தத்துவ, சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த சித்தாந்தமாகும். அனைத்துத் தொழிலகங்கள், வேளாண் பண்ணைகள், வணிகச் சேவைகள் முதலியவற்றை அரசுடைமையாக அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அனைவரையும் சமமாக நடத்தும் குறிக்கோள் உடைய அரசியல் முறையே கம்யூனிசம்.

 

     கம்யூனிச சித்தாந்தம் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் எங்கெல்சு ஆகியோரால் உருவாக்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு முன்பிருந்தே கம்யூனிச சிந்தனைகளை நம்மால் காண முடிகிறது. பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் பண்டைய காலங்களில் இந்த கருத்துக்களை விவாதித்துள்ளனர். ஆனால் மார்க்சும் அவரது அறிக்கையும் தான் இதை ஒரு பிரபலமான கோட்பாடாக உருவாக்கி, ஒரு வடிவமளித்து, கம்யூனிசத்தை ஒரு நடைமுறையாக ஏற்றுக்கொள்ள செய்தது. “மக்கள் அனைவரும் சமம். அனைத்து வளங்களும் அனைவருக்கும் பொது” என்பதே இதன் சித்தாந்தம். ஒன்றாக உழைத்து வரும் பலன்களை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்‌‌ என்கிறது. மேலும், தங்கள் உரிமைக்காகப் போராடுவதையும் கம்யூனிசம் எனலாம். 

 

     மக்கள் சமூக வகுப்பு கொண்டு பிரிக்கப்படுவதால், சாமான்ய மக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமாக தொழிலாளர்கள் முதலாளிகளால் சுரண்டப்படுகின்றனர். கம்யூனிசமானது, முதலாளித்துவத்தை (capitalism) ஒழிக்கும் நோக்கம் கொண்டது. ஐரோப்பிய நாடுகளில் 17-18ஆம் நூற்றாண்டுகளில் தொழில்மயமாதல்‌ துளிர்க்க ஆரம்பித்தது. அப்போது‌ முதலாளிகள், தொழிலாளர்களுக்கு வேலைக்கு ஏற்ற ஊதியம் வழங்காமல், லாபத்தை தாங்களே வைத்துக்கொண்டனர். இதனால் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போராட்டங்கள் வெடித்தது. இதனால் உருவெடுத்ததே, கம்யூனிசம். அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை கம்யூனிசம் நிலைநிறுத்துகிறது. "ஒவ்வொருவரிடமிருந்தும் அவரவர் திறனுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப" என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது கம்யூனிசம்.

 

    இன்றைக்கு உலகில் சீனா, வியட்நாம், லாவோஸ், கியூபா மற்றும் வடகொரியா ஆகிய 5 நாடுகள் மட்டுமே கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கொண்டுள்ளன. இவைகளும் முழுமையாக கம்யூனிசத்தையே பின்பற்றவில்லை. உதாரணமாக சீனாவில் தனியார் தொழில்களும் வணிகங்களும் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும், அவை அரசின் கட்டுப்பாட்டிலேயே நடைபெறும். தனியார் நிறுவனங்கள் எத்தகைய தொழில்கள் செய்ய வேண்டும், எத்தகைய பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் போன்றவை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இவ்வாறு நிறுவனங்கள் தனியாராக இருப்பினும், அவை அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் உண்மையில் கம்யூனிசத்தை அதன் தூய வடிவில், உலகம் இன்னும் காணவில்லை எனலாம்.

     

ஒரு அரசியல் மற்றும் சமூக அமைப்பாக கம்யூனிசம் பல சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டாலும், அதன் கருத்துக்களானது  சமூக நீதி, சமத்துவமின்மை போன்றவைக்காக குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இன்று கம்யூனிசத்தைப் படிக்கும் மாணவர்கள், அதன் வரலாற்றுச் சூழலைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், சமூகத்தைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடவும் செய்கிறார்கள். மாற்று அரசியல் மற்றும் பொருளாதார சித்தாந்தங்கள் பற்றியும் மாணவர்கள் விவாதிக்க கம்யூனிசம் வழிவகுக்கிறது.

 

மாணவர்கள் கம்யூனிசத்தை ஆதரித்தாலும் அல்லது விமர்சித்தாலும், இந்த சித்தாந்தத்தின் மீதான அவர்களின் ஆய்வானது, அவர்களின் சமூக புரிதலுக்கு பங்களிக்கிறது. இறுதியில், மாணவர்களின் வாழ்க்கையில் கம்யூனிசத்தின் பங்கு, ஒரு சமமான உலகத்தை உருவாக்குவதிலுள்ள  அவர்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

Tagged in : series, power, ideology, communism,

   

Similar Articles.