கடவுள் இருக்கிறார் என்று சொல்பவரை ஆத்திகவாதி என்பார்கள். கடவுள் நம்பிக்கை அற்றவர்களை நாத்திகவாதி என்பார்கள். இது இரண்டையும் நம்பாமல் கடவுள் இருக்கலாம் இல்லாமலும் போகலாம் என்று சொல்பவர்களை அஞ்ஞானவாதி என்று அழைப்பார்கள். இந்தச் சொல் 1869ல் இலண்டனில் தாமஸ் ஹென்ரி ஹக்ஸ்லியால் உருவாக்கப்பட்டது. அஞ்ஞானவாதினர் கடவுள் இருக்கிறார் என்றும் நம்பவில்லை இல்லை என்றும் கூறவில்லை. எனவே இவர்களை ஆத்திகவாதி மற்றும் நாத்திகவாதிகளுக்கு இடையே இடம்பொருத்தலாம். ஆத்திகவாதினர் கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க முடியாது என்பதாலும், நாத்திகவாதினர் இல்லை என்று நிருபிக்க முடியாது என்பதாலும், மனிதன் அஞ்ஞானவாதத்தைத் தேர்வு செய்கின்றான். ஆனால் இப்படி இருப்பது சரியா?
இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து பின்பற்ற வேண்டும். உதாரணமாக சமைத்த உணவை ஒருவன் வெகுநேரம் பார்த்து கொண்டே இருந்தால் என்னவாகும்? ஒன்று அதை உண்ண வேண்டும் இல்லையெனில் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போக வேண்டும். இரண்டும் செய்யாமல் உணவை பார்த்து கொண்டே இருந்தால்?
அதைப் போல் ஒருவன் எதையும் தேர்ந்தெடுக்காமல் இருப்பதைவிட சரியான காரணங்கள், ஆதாரங்களைக் கொண்டு கலந்தாய்வு செய்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
“ஒரு நபர் கடவுள் இல்லை என்று சொல்லி அது தவறாக இருந்தால், அவர் எல்லாவற்றையும் இழப்பார். ஆனால் இன்னொரு நபர் கடவுள் இருக்கிறார் என்று சொல்லி அது தவறாக இருந்தால், அவர் உண்மையில் எதையும் இழக்கமாட்டார்”, என்று பிலைசு பாஸ்கல் கூறினார்.
இதை தெளிவாகப் படித்தால், பாஸ்கல் கடவுள் இருக்கிறார் என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் கூறவில்லை. இருவழியில் கருத்துகளைக் கூறுகிறார். சிவம் என்ற சொல்லிற்கு பல அர்த்தங்கள் உள்ளன. உயர்வு, களிப்பு, நன்மை, முத்தி எனப் பல அர்த்தங்கள் உள்ளன. 'அன்பே சிவம்' திரைப்படத்தில் 'யார் யார் சிவம்' என்ற பாடலை வைரமுத்து இயற்றினார். இந்தப் பாடல் வரிகளை உற்று கவனித்தால் யார் கடவுள்(சிவம்) என்பது புரியும்.
“ஆத்திகம் பேசும்….
அடியார்க்கெல்லாம்…
சிவமே அன்பாகும்…
நாத்திகம் பேசும்…
நல்லவருக்கோ…
அன்பே சிவம் ஆகும்…
யார் யார் சிவம்…
நீ நான் சிவம்…
அன்பே சிவம்…
அன்பே சிவம்…”