Loading...

Articles.

Enjoy your read!

நெய் தோசை

அவன் ஒரு சராசரி கல்லூரி மாணவன். அன்று காலை அவன் வீட்டில் இட்லி செய்திருந்தாள், அவன் தாய். அவனோ முதல் நாள் இரவிலேயே காலையில் தோசை இல்லையென்றால் சாப்பிட மாட்டேன் என்றிருந்தான். இருந்த பசியில் தட்டில் இருந்த இட்லியை பார்த்ததும் ஒரு பெருமூச்சு விட்டான். அதைப் பார்த்த அவன் தாய் "இன்னைக்கு மட்டும் சாப்பிடுப்பா நாளைக்கு உனக்குப் பிடிச்சத செஞ்சி தர்றேன்", என்று முகத்தில் இருந்த வியர்வையைத் தன் அழுக்குச் சேலையில் துடைத்தபடி கூறினாள். அவன் வந்த கோபத்தில் பேசுவதறியாது நன்கு வசைபாடிவிட்டு சாப்பிடாமலேயே, மதிய உணவை மட்டும் எடுத்துக்கொண்டு கல்லூரிக்குப் புறப்பட்டான். "நில்லுப்பா , இந்தா அம்பது ரூபா... காலேஜ்ல உனக்குப் பிடிச்சது சாப்ட்ருப்பா... சாப்பிடாம இருந்துராத!", என்று அவன் கையில் காசை கொடுத்து, நெற்றியில் கடவுளிடம் வேண்டிக்கொண்டு திருநீற்றை இட்டாள். கோபத்துடன் பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றடைந்தான்.

பதினைந்து நிமிடங்கள் ஆகியும் தனக்கான பேருந்து வரவில்லை. அங்கு தடி ஒன்றை ஊன்றிக்கொண்டு ஒரு மூதாட்டி கிழிந்த சட்டையை அணிந்த ஒரு சிறுவனுடன் அவன் அருகில் வந்து, "தம்பி ஒரு பத்து ரூபா இருக்காப்பா? என் பேரனுக்கு ரொம்பப் பசிக்குது. இருந்தா கொஞ்சம் தாப்பா.. டீயாவது வாங்கித் தந்து அவன் பசிய தீக்க பாக்றேன்", என்று தொய்ந்த உடல் தோற்றத்துடன் நடுங்கிடும் கையை நீட்டினாள். அவன் இருந்த கோபத்தில் அந்த முதியவள் கூறியதை கேட்காதது போல் அங்கேயே நின்றிருந்தான். மற்றவர்களும் அவ்வாறே இருந்தனர். பேருந்து வருவதைப் பார்த்ததும் முன் சென்றான். அந்த மூதாட்டி திடிரென்று மயங்கி அவன் கையைத் தட்டிவிட்டு கீழே விழுந்தாள். அவன் திரும்பி பார்த்த போது அந்தச் சிறுவன், "பாட்டி எந்திரி பாட்டி பசிக்குது ஏதாவது வாங்கி கொடு...", என்று மயங்கிக் கிடந்த அவளைத் தட்டி அழுதுகொண்டிருந்தான். சிலர் நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் பேருந்தில் ஏறினார்கள். மற்றும் சிலர் அவளைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். அவன் மனம் பதைபதைத்து. அந்த மூதாட்டியைத் தூக்கி அருகில் இருந்த தேநீர் கடை முன்பு உட்காரவைத்தான். அந்தச் சிறுவனைத் தூக்கிக்கொண்டு அந்தக் கடையில் " அண்ணா! ஒரு சோடா தாங்கண்ணா...", என்று தன்னிடம் இருந்த ஐம்பது ரூபாயை நீட்டினான். அப்போது சிலர் அங்கு உதவ வந்தனர். அந்த சோடாவை திறந்து அவள் முகத்தில் தெளித்தான்.அங்கிருந்த ஒருவர் அவளை எழுப்பி விட்டுத் தன்னிடம் இருந்த தண்ணீரைக் கொடுத்து குடிக்க வைத்தார்.

பின் அங்கிருந்த எல்லோரும் சுற்றி நின்று பரிதாபப்பட்டனர்.அவன் அழுதுகொண்டிருந்த சிறுவனைச் சமாதானப்படுத்திவிட்டு தன்னிடம் இருந்த மதிய உணவை அச்சிறுவனுக்குக் கொடுத்தான். அச்சிறுவனும் கண்ணீரைத் துடைத்த கையுடன் சாப்பிடத் தொடங்கினான். அவன் சாப்பிட்டு முடிக்கும் போது அவன் கண்களில் தன் பசி தணிவதைத் தெரிந்துகொண்டான். அந்தச் சிறுவன் அவனிடம் "ரொம்ப நல்லா இருந்துச்சு அண்ணா இவ்ளோ நல்ல சாப்பாட சாப்பிட்டு நாளாச்சு", என்று கூறி அந்தப் பாத்திரத்தை அவனிடம் கொடுத்தான்.

பிறகு அவன் கல்லூரிக்குக் கிளம்பினான். ஆனால், அவன் மதிய உணவு இடைவேளை வரை அந்த மூதாட்டி கண்கலங்கிக் கூறிய நன்றியும், கலங்கிய கண்ணில் தெரிந்த பாசமும் அவன் மனதை வாட்டியது. அன்று மதியம் தன்னிடம் இருந்த நாற்பது ரூபாயை செலவழித்துச் சாப்பிட அவன் மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் மனதில் ஏராளமான சிந்தனைகள் உதிக்கத் தொடங்கின. தன் தாய், கணவன் இழந்த பின்னும் சுற்றி இருக்கும் வீட்டிலெல்லாம் வேலை செய்து சம்பாதித்துத் தன்னை வளர்ப்பதை நினைவுகூர்ந்தான். அந்நொடியில் காலையில் அவன் தாய் செய்த உணவினை உண்ணாது அவள் மனதை நோகடித்ததையும் அவள் ஐம்பது ருபாய் கொடுத்து 'பிடித்த உணவை சாப்பிடு மகனே!', என்ற அந்த உள்ளதையும் எண்ணிக் கண்ணீரில் கரைந்தான்.

அந்தச் சிறுவன் சாப்பிட்ட பிறகு கூறிய அந்த வார்த்தை அவனை உண்ணவிடவில்லை. அப்போது தான் தன் தவறுகளை உணரத் தொடங்கினான். பின்பு மனம் தெளிந்தவுடன் வீட்டிற்குச் செல்லும் வழியில் ஒரு நல்ல உணவகத்தில் தன்னிடம் இருந்த நாற்பது ரூபாய்க்கு ஒரு நெய் தோசை வாங்கிக்கொண்டு விரைந்தான். வீட்டு வாசலுக்கு வந்ததும் அளவு கடந்த மகிழ்ச்சியில் கதவைத் தட்டினான். கதவைத் திறப்பதற்குள் " அம்மா சீக்கிரம் வா மா !!! ஏன் மா இவ்ளோ நேரம்? சீக்கிரம் வா மா!!!", என்று தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தத் தொடங்கினான். அவன் தாய் " இருடா என்ன டா அவ்ளோ அவரசம், வர்றேன் இரு", என்று கதவைத் திறந்து உள்ளே அழைத்துச்சென்றாள். அவன் சற்றுநேரமும் வீணடிக்காது " அம்மா!!! இந்த மா இன்னிக்கு நீ நல்லா சாப்பிடு மா", என்று அந்த தோசை பொட்டலத்தை அவள் கையில் கொடுத்து முகத்தில் மலர்ந்த புதிய சிரிப்புடன் அவளைக் கட்டி அணைத்துக்கொண்டான்.

Tagged in : கதை,

   

Similar Articles.