உன்னோடு வாழ்ந்தேன்...
உனக்காக வாழ்ந்தேன்...
என் மூச்சுக்குழல் பருகிய பாதிக் காற்று உன் எச்சில் சுவாசம் தான்..
விளம்பம் முதல் விடிவெள்ளி வரும்வரை உனக்காக மட்டும் எல்லாம் செய்தேன்..
உன் பிம்பம் அதிகமாய் பிரதிபலித்த கண்ணாடி, என் கண்கள் தான்...!!
என் உதடு அதிகாமாய் உச்சரித்த வார்த்தை, உன் பெயர் தான்...!
உண்மையில் பசியெடுத்தாலும், உனக்காய் பொய் சொல்லும், என் வயிறு...!
மூளை முழுதும் நீதான்! உன்னைத் தவிர வேறேதும் இல்லை!
என்னவனே... என்றும் உன்னை எண்ணி என்னால் வாழ முடியும்!
ஆனால், இப்பிரபஞ்சத்தில் நீயும் நானும் மட்டும் இல்லை.
தற்போதைய நிலை வேறு...
மூடநம்பிக்கைகளும், முரடர்களும் நிறைந்த முட்டாள் சமூகம் நம்மைச் சூழ்ந்துள்ளது.
நான் என்ன செய்யவேண்டும் என 'அது' தீர்மானிக்கிறது
என் போன்றோர்களைக் காயப்படுத்துகிறது ; தவறானவற்றைப் போதிக்கிறது!
இப்புதைக்குழியில், இழுக்கப் (இழுக்குப்) பட்டுக் கொண்டிருக்கிறோம்!
நம்மைக் காக்க, நம் பிள்ளைகளை இதிலிருந்து காப்போம்.
.
ஒன்றைப் பற்றி எதுவும் அறியாமல், அதை இகழ்வது தவறுதான்.
ஆனால், எனக்கு இந்தச் சமூகம் பிடிக்கவில்லை.
ஆம், எனக்கு இந்தச் சமூகம் பிடிக்கவில்லை.
நான் அறிய வேண்டும்; எல்லாம் அறிய வேண்டும்.
உலகை மாற்ற, முதலில் அதைப் பயில வேண்டும்.
என்னவனே, எனக்காய் இதை செய்வாயா?
.
என்னைப் போன்ற பெண்கள் கல்வி கற்க, நான் முதலில் கற்க வேண்டும்..
மாற்றம் என்னிலிருந்து துவங்கட்டும்; இன்றிலிருந்து துவங்கட்டும்!
நான் கல்வி கற்க வழிவகை செய்து தருவாயாக...
நானும் நீ தானே... உன் போல் தானே நானும்!?