ஆசிரியர் தினமான இன்று நான் ஆயிஷாவைப் பற்றிப் பேசப் போவது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். உங்களின் யூகத்தின் படி ஆயிஷா என் தோழியோ ஆசிரியையோ அல்ல, அவள் என் தாத்தா (அவரும் ஓர் ஆசிரியர் தான்) எனக்கு அறிமுகம் செய்த ஒரு காவியத்தின் தலைவி, ஏன் காவியத்தலைவி என்றே கூறலாம். ஆசிரியர் நடராசனின்(இவரும் ஆசிரியர் தான்) எழுத்தில் பிறந்த உயிர் அவள். ஒரு சிறுகதை யாக என் பதின் பருவத்தில் நுழைந்த அவள் இன்று என் கற்பனை நாயகியாக வாழ்ந்துககொண்டிருக்கிறாள். கனவுகளைச் சுமந்த அவளது கண்கள் கண்ணீரில் மூழ்கிய கதையை என் தாத்தா எனக்கு அன்பளிப்பாகத் தான் கொடுத்தார். பதின் பருவ பரபரப்பிலேயே என்னிடம் வாசிக்கும் பழக்கத்தை விதைத்தவர் அவர். இந்நாளில் ஆயிஷாவைப் பற்றி நான் பேசக் காரணம் அவளது இயற்பியல் ஆசிரியை. ஆயிஷாவின் அறிவுக் கூர்மையையும் வெகுளித்தனத்தையும் அரவணைத்து கட்டிக் காத்தவள் அவள். ஆயிஷாவின் கதை உண்மையாக இருந்திருக்கக் கூடாது என்பேன், ஏனெனில் ஆயிஷா உண்மையில் இருந்திருக்கக் கூடாது. அவளது கனவுகளுக்கு அப்படி ஓர் முடிவு இருந்திருக்கக் கூடாது. ஆயிஷாவின் கதை உண்மையாக இருந்திருக்க ஆசைப்பட்டேன், ஏனெனில் ஆயிஷாவின் டீச்சர் உண்மையில் இருந்திருக்க வேண்டும். அவள் போல ஒரு ஆசிரியை எல்லா மாணவர்களுக்கும் கிடைத்திருக்க வேண்டாம். அந்த ஆசிரியரும், ஆயிஷாவும் ஒருவருக்கொருவர் நிறைய கற்றுக் கொடுத்தனர். அந்த ஆசிரியர் மாணவர் உறவு அவ்வளவு உன்னதமானது.
இரண்டாம் வகுப்புப் படிக்கையில் துப்பட்டாவை சேலைப் போல் உடுத்தி முருங்கைக் குச்சியை வைத்து மொசைக் தரையை மிரட்டியதிலிருந்து பத்தாம் வகுப்பில் தமிழம்மாவின் கணீர் குரலுக்கும் தமிழ் உச்சரிப்புக்கும் மயங்கி தமிழ் படிக்க ஆசைப்பட்டது வரை நமது ஒவ்வொரு ஆசிரியரும் நம்மில் ஏதோ தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பர். நம் நடை, உடை, பேச்சு என இவை அனைத்திற்குப் பின்பும் ஏதோ ஓர் ஆசிரியரின் தாக்கம் இருந்திருக்கும். எத்தனை எத்தனை ஆசிரியர்களை கடந்து வந்திருப்போம். நம் கனவுகளை நோக்கி செல்லும் பாதையில் நம்மை கைப்பிடித்து வழிநடத்தி செல்பவர்கள். அவர்கள் கைப்பிடித்து இப்பாதையின் இன்னல்களை கடந்தது எவ்வளவு எளிதாக இருந்தது.
இரண்டாம் வகுப்பு விஜி மிஸ்ஸின் சைட் ரோஸுக்கும்,ஏழாம் வகுப்பு நான்ஸி டீச்சரின் பாங்கான உடைக்கும், பத்தாம் வகுப்பு தமிழம்மாவின் கணீர் குரலுக்கும் தமிழ் உச்சரிப்புக்கும் மயங்கியவள் தான் நானும். மழலையில் பயம்,பதின் பருவத்தில் கேலி, கல்லூரில் பருவத்தில் மரியாதை என அவர்கள் மீதான நம் காதல் உருமாறிக் கொண்டு தான் இருந்த்தேத் தவிர குறைந்ததில்லை. ஒரு நல்ல மாணவனைக் கண்டெடுத்த ஆசிரியர் அவனது வெற்றிக்கு எல்லாமும் செய்யக்கூடியவர்களாக இருப்பதையும் பார்த்து வியந்திருக்கிறோம்.நம் வெற்றியை எங்கோ தூரத்திலிருந்துப் பார்த்து மனம் மகிழும் கடவுளுக்கும் மேலான ஆசான்களுக்கு எவ்வளவு நன்றிகள் கூறினாலும் போதாது.நம்மை செதுக்கிய ஆசிரியர்களுக்கு என்செய்து நன்றிக்கடன் தீர்த்திட முடியும்.
உங்கள் அனைவருக்கும் ஆயிஷாவையும் அவளது டீச்சரையும் அறிமுகப்படுத்தியதில் மனம் நெகிழ்கிறேன்.இந்த நன்னாளில், சிறந்த மாணவர்களை (மனிதர்களை) உருவாக்கிக் கொண்டேயிருக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் “ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்".