கன்னங்கள் அடங்கி போன முகம். சூரியனைக் கண்கள் பார்க்கும் பொழுதெல்லாம் சுருக்கங்கள் யாவும் ஒருங்கே கூடி அம்முகத்தை விகாரமாக்கின. முன்னொரு காலம் தறிகெட்டு ஓடிய கால்கள் இன்று தடம் அறியாது தத்தளித்து போயிருந்தன போல இருந்தன . மயிர் யாவையும் பராமரிப்பின்மையால் செம்பட்டை நிறத்தை ஒத்திருந்தன. ஆனாலும், வாழ்வின் சுமையை இறக்கி வைத்துவிட்டதை போல, ஒரு புன்சிரிப்பு அவரின் இதழோரம் எப்பொழுதும் தவழ்ந்துகொண்டிருந்தது. கூர்ந்து கவனித்த போது, மணிக்கட்டில் சுற்றி இறுக்கியபடி ஒரு கோணி பை தரையில் தேய தேய ஊசலிட்டு கொண்டிருந்தது. அன்று, ஈரேழு நாட்கள் நல்லுணவு அற்று இருந்தது போல , உடல் நோக குறுகி படுத்திருந்தார் ஒரு சலூன் கடை முன்பாக. என்றும் போல் அன்று கடை திறக்க வந்த நபர், "தோ! வந்து இங்கன படுத்துக்கிட்டு என் உசுர வாங்குது இந்த பைத்தியம்" என்று வைதார். அந்நபரின் வசை அம்முதியவரின் காதுகளை எட்டின போலும். திடுக்கிட்டு எழுந்தவராய், தன் பையை எடுத்து கொண்டு நடக்கலானார். நேரே, தெருவின் கீழக்கடைசியில் இருக்கும் காயலான் கடையிலே கையில் இருந்தவற்றையெல்லாம் கொட்டிவிட்டு உரிமையாளரை ஏறிட்டு பார்த்தார். பொருளுக்குரிய காசு கேட்டார் போலும். உரிமையாளரும் ஏளனக் கெக்கலிப்பிட்டு பணத்தை கொடுத்தார். வாங்கினது தான் தாமதம். பணத்தை நேரே அண்ணாச்சி கடையில் கொடுத்து 10 பாக்கெட் மாப்பண்டம்(பிஸ்கட்) வாங்கி கொண்டு இன்னும் விரைவாக நடந்தார். வந்து நின்ற இடமோ 'அன்னை தெரசா அனாதை இல்லம்'. அவரைப் பார்த்தமட்டில் சிறுவர் பட்டாளம் குதூகலிக்க ஓடி வந்து அவரவர் பங்கினை பெற்று தங்கள் இரண்டு வாரத் தாத்தாவினை கட்டித் தழுவியது. அவரோ, குறுகிய புன்முறுவல் பூத்து தன் பையினை பிடித்து, தான் நடந்து வந்த தடத்திலே திரும்பவும் நடக்கலானார். இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த நானோ, நேற்றைய நாள் கொடை கேட்டு வந்திருந்த அவ்வில்லத்தின் பராமரிப்பாளரிடம், நாளுக்கு ஆயிரம் ருபாய் கொடுத்து நல்ல உணவு வாங்கி சாப்பிடக்கூடிய அளவுக்கு வசதி இருந்த போதிலும், "என்னிடம் எதுவும் இல்லை" என்று கூறியது நினைவுக்கு வந்து மனம் கசந்து வெட்கித் தலை குனிந்தேன், அவர் புன்முறுவலின் ஊடுருவலால்...