Loading...

Articles.

Enjoy your read!

கட்டிடக் காதல்

பலர் கூறிக் கேட்டிருக்கிறேன் அவளின் அழகையும், அமைதியையும்.
மனதிற்குள் ஆசை இருந்தது - அவளைப் பார்க்கவேண்டுமென்று. 
ஆசை இருப்பினும் நாட்கள் ஓடின. வெறும் நப்பாசையாய் மாறிப்போனது. 
அவ்வளவு அறிவான அவளை, இவ்வளவு அருகிலிருந்தும், என்னால் பார்க்க முடியவில்லை. 

அந்த நாள் அருகில் வந்ததும் நெஞ்சில் ஒரு படபடப்பு. 
எனக்கோ முதல் சந்திப்பு, தமிழ்ப் படங்களில் வரும் காட்சிகளை போல அமையவில்லை. 
அமைதியான ஆத்மாத்தமான சந்திப்பு அது.
அவளை ரொம்ப பிடித்திருந்தது, பேச விரும்பினேன் ஆனால் முடியவில்லை. 

வள்ளுவர் சொன்னது போல சரியான காலத்திற்கு காத்திருந்தேன் கொக்கை போல வாய்ப்பு வந்தது. 
மணி ரத்னம் படங்களின் சுருக்கமான வசனங்களைப் பலவாறு ஒத்திகை 
பார்த்துக்கொண்டு ஆசைகளோடு சென்றேன்அவளிடம். 
பேச ஆரம்பித்தேன். 
"பேசாதே" என்று இரு வார்த்தையோடு நிறுத்திக்கொண்டாள். 
வாயில் மட்டும் மௌனம் காத்தேன்; கண்களால் பேசினேன், பழகினேன். 
பேசாத மௌனங்களாய் ஒவ்வொரு சந்திப்பிலும் காவியங்கள் எழுதினோம். 
"உன்னோடு வாழ்ந்த ஒவ்வொரு நொடியும், 
மரணப்படுக்கையிலும் மறவாது கண்மணியே" என்பது போல். 

அவளோடு இருக்கையில் வெயில் பனியானது, பகல் புதுசானது, பசி எடுக்கவில்லை, 
தூக்கம் துளியும் இல்லை, இமைகள் இருக்கிறதா? என சந்தேகப்பட்டுக் கொள்வேன். 

சற்று என்னைவிட உயரமவள். அவளின் மனதுக்குள் குடியேறுவது கடினமாக இருந்தது, 
ஏனென்றால் அதற்கு ஏழாவது தளம் வரை நான் செல்ல வேண்டி இருந்தது. 
அவள் பேசாத பெண். 
என்னைப் பேச வைத்த பெண். 

அண்ணா நூற்றாண்டு நூலகம். 
உயரமான, ஏசி வசதி கொண்ட, அமைதியான பெண் அவள்.

-------------

இக்கவிதை எழுதியவர், “தீனா ஃப்ரம் GT". அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குடியிருப்பது அவரது பொழுதுபோக்காகும்.

Tagged in : அவள், நூலகம், தினகரன்,

   

Similar Articles.