Loading...

Articles.

Enjoy your read!

கல்லூரி புறாக்கள்...!

ஒரு சின்னப் புன்னகை!  இன்று காலைப்பொழுதில் விழித்ததும் கைபேசியில் உள்ள நேரத்தைப் பார்த்தேன் மணி 8:01. சிரித்துக்கொண்டே சற்றே அதிலுள்ள புகைப்படங்களைப் புரட்டிப் பார்த்தேன்,புன்னகைத்துக் கொண்டே என் நினைவலைகளில் விழுந்தேன்.
இதே நேரத்தில் தான் மடமடவெனக் கிளம்பி கல்லூரிக்குச் செல்லப் பேருந்து வருகைக்குக்  காத்திருக்கிறேன்  "ட்ரிங் ட்ரிங்"  என என் கைபேசி  அடித்தது, மறுமுனையில் என் தோழி "எங்க டி இருக்க? இன்னும் 49 வரல! நா ஏரிட்டா கால் பண்றேன் " என்று அடிக்கடி இருவரும் கேட்டுக்கொண்டே ஏறும் ஒரே பேருந்து 49.
49 பச்சை நிறப்பலகை பேருந்து பார்த்தலே ஒரு மகிழ்ச்சி ஏன் என்றால் "நம்ம ஏரியா பஸ்சு". ஆனாலும் பேருந்தின் வெளியே மக்கள் தொங்கிக் கொண்டு ஒரே கூட்டமாக இருக்கும். அதில் ஏரிய பின் அனைவரிடமும் "தள்ளுங்க தள்ளுங்க" என்று கூறியபடி உள்ளே செல்ல வேண்டும். அப்போது தான் நடத்துனரிடம்  திட்டு வாங்காமல் பயண ரசீதுப் பெற முடியும். அதிலும் சில்லறையை வாங்காமல் மறந்துப் போன நாட்கள் பல.
நாங்கள் கிண்டி நிறுத்தத்தை நோக்கியே என்றும் எதிர்பார்த்துக் காத்திருப்போம், அந்த இடம் வந்தால் மட்டும் பேருந்தே காலியாகிவிடும்.அதற்குப்  பிறகு  பின் இருக்கையில் அமர்ந்து அப்பாடா என்று புன்னகைத்துக் கொள்வோம்.
அத்துடன் சற்று நேரத்தில் கல்லூரி வந்தடைவோம். எங்கள் நேரம்,  அப்பொழுது தான் நல்ல பாடல் பேருந்தில் ஓடும். மனதில் பாடிக் கொண்டே இறங்கிய நாட்கள் இன்றும் நினைவில் இருக்கின்றன . பின் அவசர அவசரமாகக் கல்லூரிச்  சாலை முதல் வகுப்பறை வரை ஒரே வேகத்தில் நாங்கள் நடைபோட்டு "என்னடா இவ்வளவு தூரம்" என்று முனங்கிக் கொண்டே கடைசி நிமிடத்தில் வகுப்பறை வாசலில் வந்து நிற்கும் பொழுது வருமே  ஒரு பெரும் மூச்சு, அத்துடனே  அன்றைய நாளை  தொடருவோம். 
இந்த நேரத்தைக் கடந்து கல்லூரி செல்வதற்குள் நாங்கள் படும் பாடு சொன்னால் புரியாது.  சில நேரங்களில் கசப்பான நினைவுகளுடனும் பல நேரங்களில்    சுகமான  உரையாடல்களுடனும்   வகுப்பறை வரை செல்லும் பொழுது வழியில் சில நண்பர்களும்  எங்களுடன் இணைவது  மகிழ்ச்சியான நினைவுகளில் ஒன்று.
மாலையில் இன்னும் ஒரு படி மேலே சென்று , அனைவருடனும்  உரையாடிக் கொண்டே செல்வதில் என்ன ஓர் ஆனந்தம். சிரிப்புச் சத்தம் மட்டுமே அவ்விடத்தில் நிறைந்திருக்கும் . பேருந்து நிலையத்திலிருக்கும் அனைவரும் எங்களைப்  பார்க்கும் பொழுது என்ன நினைக்கிறார்களோ அடங்காப் பிடாரிகள் என்று எண்ணி இருப்பார்களோ என்றெல்லாம் ஒருபோதும் எண்ணியதில்லை , யார் என்ன நினைத்தால் என்ன என்ற  எக்காளமே எங்களிடம் இருக்கும் . இவை அனைத்தும் இப்போது இல்லாமல் சற்றே அமைதியாக நகர்கிறது நாட்கள்.
அண்ணா பல்கலைக்கழகம் எவ்வளவோ  அவ்வளவே அது தரும்  நினைவுகள். இன்னும் எத்தனை நாள் காத்திருக்கப் போகிறோம்  என்ற கேள்விக்கு விடையறிந்திருப்பினும் கேட்கத்தான் ஏங்குகிறது மனம். எனினும் நம்பிக்கையோடு  காத்திருப்போம்.  கல்லூரியில் பார்போம் விடியலை நோக்கி....! 

Tagged in : MySpace, Bus Travel, Dayscholars, Friends,

   

Similar Articles.