“ ...29. மரண தண்டனைக் குற்றவாளிக்கு ஏற்படுத்தும் வலியும் துயரும் எந்த விதத்திலும் மனிதாபிமானமிக்க செயலன்று... “
- பச்சன் சிங் வெர்சஸ் பஞ்சாப்(1982)
கழுமரம் கண்களுள் சிக்கி சொல்வாக்கிலே மறைந்துவிடுகின்ற பல சொற்களுள் ஒன்று அல்லது “பிறகு பார்ப்போம்” என்ற பிறகிற்காகப் பல வருடங்கள் தவத்திலிருக்கும் சொற்களுள் ஒன்று. அகஸ்மாத்தாகக் காதில் விழும் சொல்லிற்குள் நிர்ப்பந்திக்கப்பட்ட குருதிப்படலங்கள் இழையோடிக்கிடக்கின்றன. தமிழகத்தின் மிகையில்லாப் பட்டவர்த்தன வரலாற்றுள் சிக்குண்ட விஷயங்களுள் ஒன்றாதலால் கற்களுக்கிடையே கருப்புளுந்தைப் பொறுக்குதல் அவசியம். கழுமரம் ஒரு கொலைக்கருவி, பெரும்பான்மையோரின் கைகளில் அது மரணதண்டனை(காலவரையின்றி);
இடங்களுக்கும் காலத்திற்கும் ஏற்ப இதன் அளவு ஆறுக்கும் குறைவான அடி முதல் அறுபது அடி வரை நீளும், இது பொதுவாக மரத்தாலோ அல்லது இரும்பாலோ செய்யப்படும். கழுவின் கூரிய நுனி, குற்றவாளியின்(நிர்ப்பந்தம் இல்லை) குதத்தின் வழி நுழையும் வகையில் குற்றவாளியைக் கழுவேற்றவேண்டும். கழுவேற்றப்பட்டவரின் உடலினுள்ளே கழுவின் நுனி நுழைய மெல்ல அவர் கீழ் இறங்குவார். கழு அவரது குடல் நெஞ்சுப்பகுதி என்று மேலேறுகையில் உயிர் பிரிந்துவிடும். கழுமரத்தின் வகைப் பொருத்தும் அவரவரின் வினைப் பொருத்தும் உயிர் பிரிவதற்கு இரண்டு மணி நேரமோ அல்லது இரண்டு நாட்களோ ஆகலாம். இக்கழுமரம் தமிழகம் மட்டுமின்றி உலகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைமுறையில் இருந்திருக்கிறது, உதாரணமாக ஓட்டோமான் பேரரசு இதை உபயோகப்படுத்தியுள்ளது. கழுவினூடே வழியும் குருதியோட்டங்கள் பல அக்கழுவினோடே மறைந்தும், சில மையாகியும், மையாகிய சிலவற்றுள் என் மேல் தெறித்தது சொற்பமே! நான் அறிந்த தமிழகத்தின் குறிப்பிடத்தக்க கழுவேற்றங்கள் மூன்று. ஒன்று சமணர் கழுவேற்றம் இரண்டு காத்தவராயன் கழுவேற்றம் மூன்று பட்டினத்தார் கழுவேற்றம்.
சமணக் கழுவேற்றம் நடந்ததா இல்லையா என்பதை ஆராய்தல் இக்கட்டுரையின் நோக்கமன்று. நடந்ததெனில் அது இவ்வாறுதான் நடந்ததாம்(இல்லை நடந்திருக்கவேண்டுமாம்). ஏழாம் நூற்றாண்டில் பாண்டியநாட்டை ஆண்ட நின்றசீர் நெடுமாறனின் வெப்புநோய் தீர்க்க இயலாமைப் பொருட்டும், திருஞானசம்பந்தரிடம் வாதில் தோற்றல் பொருட்டும், அடியார் குழாம் இருந்த இடத்திற்குத் தீ வைத்தல் பொருட்டும் எண்ணாயிர சமணர்கள் அல்லது எண்ணாயினர் என்ற குலப்பெயர்கொண்ட சமணர் கழுவேற்றப்படுகின்றனர். காத்தவராயன் கழுவேற்றம் நடந்தது பிற்காலமெனிலும் கற்களுக்கிடையில் உளுந்தைப் பொறுக்குவது சற்று கடினம். காவல்காரரான காத்தவராயர் ஒரு பெண்ணைச் சிறையெடுத்தற் பொருட்டுப் பாச்சூர் அருகே அறுபதடி வேங்கைக் கழுமரத்தில் கழுவேற்றப்படுகின்றார். பொய்க்குற்றச்சாட்டால் பட்டினத்தார் கழுவேற்ற உத்தரவிடப்படுகிறார். இறுதி வேளையில் கழு மரம் தீப்பிடித்துக் கொள்ள விடுவிக்கப்படுகிறார்.
இவற்றின்படி பார்க்கையில் பதிமூன்றாம் நூற்றாண்டு வரையிலாவது கழுவேற்றம் வழக்கொழியாமல் இருந்திருத்தல் வேண்டும். தமிழகத்தில் இன்றும் இருக்கக்கூடிய கழுமரம் ஈரோட்டின் அய்யனாரப்பன் கோவிலில் உள்ள பனையால் செய்யப்பட்ட கழுமரம். இக்கழுமரம் அக்கோவிலில் தெய்வமாக மாற்றப்பட்டுள்ளது. எதன் பொருட்டு என்று தெரியவில்லை. மாற்றப்படவில்லையென்றால் ஒருவேளை அகற்றப்பட்டிருக்கலாம். இதன் உயரம் மிகவும் குறைவு. துடித்துச் சாவதற்கு ஏற்ற வகையில்.
இக்கட்டுரையின் நோக்கம் கழுவேற்றம் பற்றியதா? தெரியவில்லை ஒருவேளை இருக்கலாம். இக்கட்டுரை என் நோக்கில் நம் மனப்பக்குவம் பற்றியது. கழுமரம் என்பது முந்தையகாலத் தண்டனைகளுள் ஒருக்கீற்று மட்டும்தான். இதுபோல் எண்ணவியலாத தண்டனைகள் ஏராளம். அக்கருவிகளின் நோக்கம் குற்றவாளியைத் துன்புறுத்துவது, அவற்றின் நோக்கம் குற்றவாளியைக் கொல்வதென்றால் அதற்கு ஒரு வாள் போதும். ஒரு குற்றவாளியைத் தண்டிப்பது என்பது அவரைத் துன்புறுத்தல் என்பதாகாது, குற்றத்தைத் தடுத்தலாகும். அக்குற்றத்தை மீண்டும் நடக்காமல் உறுதிசெய்வதாகும். உட்சபட்ச உறுதிப்பாடுதான் மரணதண்டனை. மரணதண்டனையின் நோக்கம் அவ்வுறுதிப்பாட்டை அளிப்பதே, சித்ரவதை அன்று.
இந்திய அரசியல் சாசனம் குற்றவாளி துயருறாமல் இருத்தல் பொருட்டு ‘long drop hanging’ முறையைப் பின்பற்றுகிறது. சில குற்றங்களை மரண தண்டனைப் பட்டியலிலிருந்து விலக்கி வருகிறது. மேற்கோள் காட்டிய தீர்ப்புப் போன்று ஒவ்வொரு மரணதண்டனை தீர்ப்பின் போதும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. குற்றவாளி குற்றத்தின் வலியை உணர வேண்டும் என்றால் வன்கொடுமை செய்தவருக்கு வன்கொடுமைதான் தண்டனை. கொலைசெய்யப்பட்டவரின் வலியைக் கொலையாளியும் கட்டாயம் அனுபவித்தல் வேண்டும் என்ற நோக்கிலிருந்து நம் சமூகம், மீண்டும் கொலை நடக்காமல் தடுப்பதை நோக்கி நகரத்தொடங்கிவிட்டது. பழமைவாதத்திற்கு ஒரு முட்டுக்(கூரிய )கட்டை கழுமரம்.
மையாகாத அந்தக் குருதித்துளிகளும் சற்று காயட்டும்.