Loading...

Articles.

Enjoy your read!

காலத்தைக் கடந்த ஒரு கடிதம்

காலங்கள் கடந்தும், வருடங்கள் பல காற்றில் கரைந்தும், என்னுள் என்றும் மாறாமல் இருந்த ஒன்று, உன்னுள் இன்று மாறிவிடக்கூடாது என்று, உன் வருங்காலத்திலிருந்து நான், உனக்கு எழுதுவது:

என் வாழ்க்கையில், எனக்குப் பிடித்த காலத்திற்குச் செல்ல வரம் அளிக்கப்பட்டால், நான் செல்ல விழைவது, நீ இப்போது வாழும் என் கல்லூரிக்காலத்திற்கே! எண்ணற்ற நண்பர்களையும், எல்லையற்ற மகிழ்ச்சியையும் உனக்கு அளிப்பது இப்பருவமாகும். எக்காலத்திலும் மறவாத வாழ்க்கைப் பாடங்களையும், இக்காலமே உனக்குக் கற்பிக்கும். 

சில சமயம், சுமைகளின் மத்தியில் இருக்கும் பொழுது, "இவ்வளவு தானா வாழ்க்கை?" என்ற எண்ணம் எள்ளளவும் தோன்றலாம். எனினும், எந்தவொரு நிலையையும், நீ கடந்தபின் பெற்றுச்செல்வது அனுபவமே! எண்ணற்ற அனுபவங்களோடு, அதீதச் சுகமும், சுதந்திரமும் இப்பருவத்தில் நீ பெறவிருக்கிறாய். இடையிடையே வரும் துன்பங்களைத் தூக்கியெறிய உன் தோழர்களை நாடிச்செல்.

சில நேரம்,"இத்தருணம் என்றென்றும் நிலைக்காதா?!.. என்று ஆசைகொள்வாய். உல்லாசத்தின் உச்சத்தில் இருப்பினும், ஒன்றை மறவாதே. எதுவும் மறுதருணமே மாறிவிடலாம்! கரைந்து செல்லும் காலத்தின் கைப்பிடியிலிருந்து சற்றே விடுபட்டு, ஓய்வெடுக்கலாகாது.

பல சமயம் "இந்நிலை மாறாதா?" என்று வருத்தத்தில் வாட நேரிடும். நீ எந்நிலையில் இருப்பினும், உன்நிலை மறவாது, முன்னேற முற்படு. எத்துயராகினும் புத்துயிர் பெற்று மீண்டு வருவாய். நினைவில்கொள், இந்நிலை ஒன்றே என்றென்றும் நிலைக்கப் போவதில்லை.

ஒருபுறம் பாடம்,  பருவத்தேர்வு, வேலை வாய்ப்பு, போன்ற சுமைகள் குவிந்து கொண்டே இருப்பினும், மறுபுறம் இனிய தருணங்களில் பங்கிட்டு, இன்ப வெள்ளத்தில் மூழ்கி, துன்பங்களைத் தோற்கடிப்பாய். அடுத்தடுத்து வாழ்வில் மாற்றங்கள் பல ஏற்படும். காலத்தைத் துரத்தும் உன்னை, காலமே துரத்தத் தொடங்கும். எதிர்கொள்ள தயாராகு. கல்லூரி அனுபவங்கள் நிச்சயம் உனக்குக் கைகொடுக்கும். இன்றளவும், அவை எனக்குக் கைகொடுத்து வருகின்றது. எனினும், நீ எப்போது இக்காலத்தைத் திரும்பிப் பார்த்தாலும், உன் சிந்தைக்கு எட்டுவது மலரும் நினைவுகளே!

Tagged in : time, A letter to the precious time, Quarantine Life, MySpace,

   

Similar Articles.