“வாழ்வில் அனைத்துமே தற்காலிகம் என்பது உண்மை தான்.
அந்த தற்காலிகங்களின் நிரந்தர சிறை பிடிப்பு, நினைவுகள்”
எண்ணற்ற உறவுகள் இருப்பினும், நம் வாழ்விலும், சிந்தனையிலும் நிறையத் தாக்கங்கள் ஏற்படுத்துவது நட்பு தான். அதிலும் முக்கியமாக, கல்லூரி கால நண்பர்கள் மறக்கவியலாதவர்கள்.
வாழ்க்கை எல்லோரையும் வெவ்வேறு பாதைகளில் இழுத்துச் செல்லும் போது, நாம் நிறைய நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போக நேரிடும். வெகு நாட்களாய் சந்திக்காத ஒரு நண்பனை சந்திப்பது; விடுதியில் இருந்து, வீட்டுக்குச் சென்று தாயை சந்திக்கும் அதே சுகத்தைத் தரும். அதுபோன்றதொரு சந்திப்பு, நம் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் சென்ற வாரம் ஞாயிறன்று (17.12.2017) நிகழ்ந்துள்ளது.
1964 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பயின்ற அழகப்பா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்தித்து, தங்களின் நினைவுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். முன்னால் மாணவர்கள் பேரவையின் தலைவி, முனைவர். வித்யா சங்கர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பின், அழகப்பா கல்லூரியின் புலமுதல்வர் முனைவர். சிவனேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். RK குழுமங்களின் நிர்வாக அதிகாரி திரு. R. K. சுவாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
அவர்கள் கல்லூரி கால நினைவுகளை அனைவரும் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் காலத்தில் கல்லூரிக் கட்டணம் வெறும் 250 ரூபாய் தான் என ஒருவர் கூறினார்.
முதலில் சென்னைப் பல்கலைக் கலகத்தின் கீழ் இயங்கிவந்த அழகப்பா கல்லூரி, பின்பு தான் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட ஆரம்பித்த்து என்றார் இன்னொரு முன்னாள் மாணவர். துவக்க காலத்தில், IITM அலுவலகம் நம் கல்லூரியில் தான் இருந்த்து என ஒருவர் மிகுந்த பெருமிதத்துடன் கூறினார்.
அவர்களுக்கென விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த இனிமையான சந்திப்பை ஏற்பாடு செய்தவர்கள் அழகப்பா கல்லூரியின் முன்னாள் மாணவர் பேரவை.