Loading...

Articles.

Enjoy your read!

என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!

சென்னையின் தட்பவெப்பநிலை ஒரு எழுத்தாளரால் பின்வருமாறு வர்ணிக்கப்பட்டுள்ளது; “சென்னையில் மொத்தம் மூன்று காலங்கள்தான்: வெயில் காலம், மிகுந்த வெயில் காலம், தாங்க முடியாத வெயில் காலம்.” இதேபோல் கிண்டி பொறியியல் கல்லூரியிலும் மூன்று காலங்கள் உள்ளன; கலந்தாய்வுக் காலம் (ஜூலை, ஆகஸ்ட்), விழாவற்ற காலம் (ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை), விழாக்காலம் (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) ஆகியவையே அவை.                                                                           

சாதாரண நாட்களில் வகுப்புகளுக்கு அடையாள அட்டையை அணிந்து செல்வதற்கு, தலைக்கவசம் அணிய மறுக்கும் வண்டியோட்டிபோல் கோபப்படும் நம் கல்லூரி மாணவர்கள், கலந்தாய்வுக் காலத்தின்போது மட்டும், வீட்டு நாய் கழுத்துப் பட்டையுடன் கம்பீரமாக வலம்வருவதுபோல், அடையாள அட்டையுடனேயே வீறுநடை போடுவர்.

’யாராவது நம்மிடம் ஏதேனும் சந்தேகத்தைக் கேட்டு விட மாட்டார்களா?’ என்ற ஏக்கத்துடன் குட்டி போட்ட பூனையைப்போலவே சுற்றிச்சுற்றி வருவர். தப்பித்தவறி திருவாளர் பொதுஜனம் ஒரு கேள்வியைக் கேட்டால் போதும்; வகுப்பறையில் பேசக் கூச்சப்பட்டு, செமினார் எடுக்காமல் போன மாணவர் கூட அமெரிக்காவிலிருந்து, அமிஞ்சிக்கரை வரை வாயிலேயே வடை சுட்டுவிடுவார்.

        அண்ட, பேரண்ட சராசரத்தின் தோற்றத்தைக் கூட ஆராய்ந்து விடலாம்; ஆனால், பொறியியலில் இந்த பாடத்தைத்தான் (branch) தேர்வு செய்யவேண்டும் என்று முடிவு செய்து மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதென்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், அது ஒவ்வொருவரின் விருப்பம் தொடர்புடையது. இதையெல்லாம் பற்றி யோசிக்காமலேயே, ’இந்த பாடத்தில் உங்கள் பெண்ணைச் சேர்த்துவிடுங்கள்’, ‘உங்கள் பையனுக்கு இதுதான் சரி’ என்ற ரீதியில் தத்தம் ஊர்க்காரர்களுக்கும், சொந்த பந்தங்களுக்கும் ஆலோசனை கூறி, கல்விக்கண் திறந்த காமராசரின் ஆவியையே திக்குமுக்காடிப் போகச்செய்வார்கள் நம் மாணவர்கள்.

      நம்பிச்சேரும் அப்பாவி ஜூனியர் சில காலத்துக்குப் பின், ‘அண்ணா... ரொம்பக் கஷ்டமாயிருக்கு. சமாளிக்கவே முடியல என்று ’ஆலோசக’ரிடம் கண்கலங்கும்போது, ‘நல்லா மாட்டிக்கிட்டியா?’ என்று மனதுக்குள் கறுவியபடி ‘யான் பெற்ற பேறு நீயும் பெற வேண்டும்’ என்ற பொன்வாக்கைப் பின்பற்றுவர். விசாரித்த பின்னர்தான் தெரியும் நீட்டிமுழக்கிப் பேசிய நம் கதாநாயகர் ‘அரியர் சங்கத்தின் அரிமா’ என்று.

     இதுபோக வெளியூர்களில் இருந்து வரும் பெற்றோர்களிடம் ‘பீலா’ விடுவதற்காகவே சகட்டுமேனிக்குப் பேருந்து எண்களைப் பட்டியலிடுவது, 220 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் குட்டி நகரத்தில் திக்குத்தடுமாறி நிற்பவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ தவறாக வழிகாட்டுவது போன்றவை இந்த ‘அடையாள அட்டையணிந்த மார்க்கெட்டிங் மனிதர்க’ளின் வேறு சில கடமைகள்.

          பொறியியல் படிப்பு என்பது உணவகத்தின் மெனு கார்டு அல்ல; எனவே எதைப் படிக்க வேண்டும் என்றும், எங்கு படிக்க வேண்டும் (இது மிக முக்கியமானது; அவரவர் சவுகரியத்தைப் பொறுத்தது) என்பதையும் முன்னமே விவரமாகத் தீர்மானித்து விடுவது பெற்றோருக்கும், மாணவர்களின் எதிர்காலத்துக்கும் நல்லது. அவசியமென்றால் நம்பத்தகுந்தவர்களிடம் (ஊர்க்கார மாணவர், பேராசிரியர் யாராக இருப்பினும்) மட்டுமே ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

Tagged in : Reviews, Gayathri Govindarajan, Events, Yaser Ahmed, Tamil, Giridharan Raghu,

   

Similar Articles.