Loading...

Articles.

Enjoy your read!

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

தமிழ் இருக்கை என்பது, அமெரிக்காவில், மேரிலாண்டு (Maryland) என்னுமிடத்தில், பதிவு செய்யப்பட்டுள்ள, தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்.  தற்பொழுது இந்த நிறுவனம், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான நன்கொடைகளை திரட்டி வருகிறது.

உலகளவில், செம்மொழி தகுதி பெற்ற ஏழு மொழிகளுள், தமிழ் மொழியும் ஒன்று.  தமிழைத் தவிர, செம்மொழி அங்கீகாரம் பெற்ற அனைத்து மொழிகளுக்கும் ஹார்வார்டில் இருக்கை உண்டு.  இதில் குறிப்பிடத்தக்கது, மற்ற ஆறு மொழிகளும், செம்மொழிக்கான  11 தகுதிகளில், வெறும் 8 தகுதிகளை மட்டுமே கொண்டுள்ளன.  தமிழ் மட்டுமே, 11 தகுதிகளையும் தன்னிடம் கொண்டுள்ளது.  இது எந்த அளவு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் எனில், வெறும் ஒன்றரை லட்சம் மக்கள் மட்டுமே பேசும் கரீபியன் மொழிக்கெல்லாம், ஹார்வார்டில் இருக்கை உண்டு.  ஆனால், உலகளவில், பல நாடுகளில், பல லட்சம் மக்கள் பேசும் தமிழுக்கு, இன்னமும் இருக்கை அமைக்கப்படவில்லை. 

சரி, ஹார்வார்டில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவதால், தமிழுக்கு என்ன நன்மை? மேற்கத்திய நாடுகளில், சமஸ்கிருதமே இந்திய துணைக்கண்டத்தில் முதலில் தோன்றிய மொழி; தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள், சமஸ்கிருதத்தின் வழித்தோன்றல்களே என்னும் தவறான கருத்து, நிலவி வருகிறது.  ஹார்வார்டில் அமைக்கப்படும் தமிழ் இருக்கை இதை தகர்த்தெறியும். தமிழின் தொன்மை, பண்பாட்டுப் பெருமை, கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றுக்கு உலகளவில் மதிப்பு உயரும்.  தமிழனைக் கண்டு, உலகம் வியக்கும். 

எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழைக் குறித்த தொல்லியல் ஆய்வுகள், உலகளவில் கவனமும் புத்துயிரும் பெறும்.  தொல்லியல் ஆய்வுகள், ஒரு நாட்டின் வரலாற்றையே திருத்தி எழுத வல்லவை.  தமிழனின் வரலாறு குறித்து போதுமான இலக்கியச் சான்றுகள் உண்டு. வரலாற்றுச் சான்றுகள் அவ்வளவாக இல்லை.  உதாரணமாக, ராஜ ராஜ சோழன் வாழ்ந்த்ததற்கான வரலாற்றுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் ஆகிய இரண்டுமே உள்ளன.  ஆனால், பாண்டியன் நெடுஞ்செழியன் வாழ்ந்தததற்கான சான்றுகள், சிலப்பதிகாரத்தைத் தவிர, வேறு எங்கும் கிடைக்கப்பெறவில்லை.  வரலாற்றுச் சான்றுகள்,  தொல்லியல் ஆய்வில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.  ஹார்வார்டு தமிழ் இருக்கை, இத்தகைய ஆய்வுகளுக்கு, உலக அளவில் அங்கீகாரம் அளித்து, ஊக்குவிக்கும்.

ஹார்வார்டு தமிழ் இருக்கைக்காக, அப்பல்கலைக்கழகம் 40 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளது.  உலகெங்கிலும் இருந்து தமிழ் ஆர்வலர்கள் நன்கொடைகளை தந்த வண்ணம் உள்ளனர்.  நமது தமிழ்நாடு அரசாங்கம், சுமார் 10 கோடி ரூபாய் நிதியை அளித்துள்ளது.  கிட்டத்தட்ட 96 சதவிகிதம் நிதி சேர்ந்துவிட்ட நிலையில், இன்னும் 4 சதவிகிதம் நிதி மட்டுமே தேவைப்படுகிறது.  40 கோடி ரூபாய் முழுமையாக சேர்ந்து விட்ட பின்பு, மேற்கொண்டு வரும் நன்கொடைகளை தமிழ் தொடர்பான வேறு பயனுள்ள செயல்களுக்கே பயன்படுத்தப்படும் என்று தமிழ் இருக்கை உறுதியளித்துள்ளது. எனவே, நமது தாய்மொழிக்காக, நம்மால் இயன்ற அளவு தொகையை http://harvardtamilchair.org/ என்னும் வலைப்பக்கத்தில் அளிப்போம். நமது மிகச் சிறிய நன்கொடை, பெரிய அளவில் மாற்றம் ஏற்படுத்திவிடப்போவதில்லை என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.  உங்கள் பணம் மட்டுமல்ல, இந்தக் கட்டுரையைப் பகிர்ந்து, அனைவரிடமும் இதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஹார்வார்டு தமிழ் இருக்கையின்  Facebook கணக்கு: https://www.facebook.com/HarvardTamilChair/ மற்றும்  Twitter கணக்கு: https://twitter.com/harvardtamil?lang=en ஆகியவற்றைப் பின் தொடந்து நம் ஆதரவைத் தெரிவித்தல், முதலிய செயல்கள் கூட, பெரும் நன்கொடைகள் தாம்.  தொடர்ந்து ஆதரவளிப்போம். 

"அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்;
மகுடத்தை தரிக்கிற  ழகரத்தை சேர்த்தோம்;
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்;
உலகத்தின்  முதல்மொழி உசுரெனக் காத்தோம்!'

Tagged in : Tamil, சுபாஷ் சந்தர். வெ,

   

Similar Articles.