இப்புத்தகம் மாக்ஸிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாற்றின் முதல் பகுதி.
கொஞ்சம் இரு, "மாக்ஸிம் கார்க்கியா?" எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதல்லவா? ம்ம்ம்......இப்போது உங்களுக்கு மதன் கார்க்கி ஞாபகம் வரனுமே? அட கவிபேரரசு வைரமுத்துவையே ஈர்த்து ,தன் பெயரை அவர் மகனுக்கு வைக்க செஞ்சிருக்காரே இவர்.நிச்சயம் இவரிடம் விஷயம் இல்லாமலா இருக்கும் !! இதுதான் இந்த புத்தகத்தை படிக்க எனக்கு ஆர்வத்தை தூண்டியது.
ரஷ்யா! உறைந்தப் பனிக்குச் சொந்தமான தேசம் என்பது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் பல வினோத பழக்கவழக்கங்களுக்கும், சூழ்ச்சிகளுக்கும் ,விளங்காத கோட்பாடுகளுக்கும் கூட சொந்தமான தேசம் என்று விளங்க வைக்கிறது இப்புத்தகம்.
கார்க்கி இப்படி சொல்கிறார் "நான் இப்பொழுது என்னைப் பற்றி எழுதவில்லை; சாதாரண ருஷ்யர்கள் வாழ்ந்த ,இன்றும் வாழ்கிற ,வெறுக்கத்தகுந்த பயங்கரமான சூழ்நிலைகளைப் பற்றித்தான் இப்பொழுது எழுதுகிறேன்."
இந்த வரிகளே ஒரு கடினமான பாதைக்கு நமது மனநிலையை தயார்படுத்துகின்றது.
தன் தந்தையின் அடக்க ஆராதனையிலிருந்து கதையைத் துவங்குகிறார் கார்க்கி. தன் தந்தை இறந்த பிறகு அவரும் அவரது தாயாரும் ரஷ்யாவில் இருக்கும் தன் தாயின் சொந்த வீட்டிற்க்குள் தஞ்சம்
புகுகிறார்கள் .இளம் வயதில் கணவனை இழந்த தாய்,கோபத்தை மட்டுமே காட்டத் தெரிந்த தாத்தா,சூழ்ச்சிக்கார மாமன்கள்,பாசத்திற்க்கு ஓரே வழியாய் இருக்கும் பாட்டி என கார்க்கிக்கு புது உலகம்;புது உறவுகள்.
ஆரம்பத்தில் தன் தாத்தா வீட்டில் இருக்கும் புரியாதக் கோட்பாடுகளால் அடிபட்டுப்போகும் கார்க்கி கடந்து வந்த கடுமையான சூழ்நிலைகளும் ,அவர் கற்றுக் கொண்ட வாழ்க்கை பாடங்களும் என நீள்கிறது கதை.தந்தையை இழந்து விதியால் தன் தாயின் வீட்டிற்க்குள் நுழையும் ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கை பிரதிபலிப்பாய் உண்மைக்கு நேராய் பயணிக்கிறது கதை.
இப்புத்தகத்தின் மிகப்பெரிய பலம் மாக்ஸிம் கார்க்கியின் வர்ணனையே!! ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் சூழ்நிலைகளையும் அவர் விவரித்து வர்ணிக்க வார்த்தைகள் கண் முன் காட்சிகளாக விரிவடைகின்றன. கதை முழுவதும் கவிதை களங்களாக காட்சியளிக்கிறது. இலக்கிய நேசகர்களுக்கு இப்புத்தகம் ஒரு சிறந்த விருந்து. மேலும் வசனங்கள் ஒவ்வொன்றும் கூரியவாள் போல் வாசகர்கள் மனதினை அறுத்துச் செல்கின்றன.இத்தகைய கதைக்கருவிலும் நகைச்சுவைக்கு சற்றும் பஞ்சமில்லை என்பதே ஆச்சிரியப்பட வைக்கும் காரியம்.இத்தகைய கடுமையான சூழநிலைகளை தனக்கே உரிய விதத்தில் கார்க்கி எதிர்கொள்ளும் மனவலிமை, வாசகர்களின் மனஉறுதிக்கு உரமி்ட்டுச் செல்கின்றது.
சரி அப்போ குறைகள்? என்று நீங்கள் கேட்களாம். "குறை ஒன்றும் இல்லை கண்ணா ♪♪"என்று தான் சொல்ல வேண்டும் ,வேறு வழியில்லை. இப்புத்தகத்தை தமிழில் திரு நம்பி அவர்கள் மொழிபெயர்க்க வ.உ.சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.120 ருவாய்கள் மதிப்புள்ள இப்புத்தகம் வரலாற்றுப் பதிவினை தேனிட்ட இலக்கிய செறிவில் அளிக்கும் ஓர் அரிய படைப்பு !!
பின்குறிப்பு:- இந்த புத்தகத்தை எடுத்து மூன்று மாதங்கள் ஆகியும், அந்த நூலகம் பக்கமே போகாமல் வேறு வழியாய் போய்க்கொண்டிருக்கிறேன், திருப்பித்தர மனமின்றி!! எனவேதான் சொல்கிறேன் வாய்ப்பு கிடைத்தால்
கட்டாயம் வாங்கி படியுங்கள்.