புத்தகத்தின் பெயரே என்னை முதலில் ஈர்த்தது. ஒரு சாமானிய பெண்ணின் கதையாக இருக்குமோ என்று எண்ணி தொடங்கினேன். ஆனால் ஒவ்வொரு சாமானியரின் பின்னணியிலும் கற்பனைக்கும் எட்டாத சோகங்கள் உண்டு என்பதை இந்நூல் உணர்த்தியது.
ஊர்பஞ்சாயத்துக் காட்சியை வரைந்து கொண்டு தொடங்குகிறது கதை. ஒரு பாமரப்பெண் இருநாட்களில் தன் திருமணவாழ்வு முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்தோடு கண்ணீர் மல்க நீதி கேட்டு நிற்கிறாள். பதில் கூற இயலாது மௌனம் காக்கின்றனர் ஊர்மக்கள். அதன் பின்னர் அவளுக்கு நேரும் துன்பங்களை அவள் எவ்வாறு எதிர்த்துப் போரிடுகிறாள் என்பதே கதை.
விறுவிறுப்பான கதைகளத்துடன் அடுத்தடுத்து திருப்பங்கள் வைக்கப்படுகின்றன. அடுத்தென்ன நடக்கும் என்பதைக் கணிக்க இயலவில்லை என்பதே இப்புத்தகத்தின் பலம். இக்காவியத்தை படிப்பவர் மெய்மறப்பது மட்டும் உறுதி.
கவிஞர் வைரமுத்து அவர்களின் எழுத்துகளில் காட்சியைக் காணும்போது பல சந்தர்பங்களில் நம்மை அறியாது கண்ணீர் துளிகள் புத்தகத்தை நனைக்கின்றன.
காவியம் முழுவதும் அழுகை சுவையே நிறைந்திருக்கிறது. அவற்றுள் என்னை உணர்ச்சிகரமாக தாக்கியவை இரண்டு.
க.கருவாச்சி தன்னந்தனியாக தன் குழந்தையைப் பெற்றெடுப்பது,
அவள் மகன்போல வளர்த்த பூலித்தேவன் கொல்லப்படுவது.
நூலில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் நிறங்கள் இல்லாத கருவாச்சியின் வாழ்வை அழகாய் சித்தரிக்கின்றன.கதை முழுவதும் தேனீ மாவட்ட தமிழ் ஈரம் பரவி மண்வாசனையை மனதில் கொண்டு வருகிறது . ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனக்கே உரிதான தனித்தன்மை கொண்டு வடிவமைத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.இடையிடையே சிறுசிறு நுணுக்கமான கிராமத்துப் பழக்கவழக்கங்கள் உரைக்கப்படுவதனால் கருத்துச்செறிவும் அதிகமாக காணப்படுகிறது. காவியம் முற்றுபெறுவது தெளிவற்றதாக தோன்றியது என்பதே சிறு குறை.
இப்புத்தகத்தின் வழியே நம் மனதில் பதியும் கருத்து" எவற்றை இழப்பினும் உதவி செய்யும் பண்பை இழக்காதே"என்பதே.
மொத்தத்தில் கருவாச்சி காவியம் ஒரு பெண்ணின் மடந்தை முதல் கிழவி வரையிலான வாழ்க்கையை துன்பத்தின் கற்களில் தன்னம்பிக்கை உளியைக்கொண்டு செதுக்கிய ஓர் மரணமில்லாக் காவியம்.